என் மலர்
சென்னை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும்.
நேற்று தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 05.30 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
- காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது? என்று தெரியாத நிலையிலேயே உள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர்
மு.க.ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை.
6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, "அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய" அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள் என்று கூறியுள்ளார்.
- விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
- முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* விடுதலை சிறுத்தைகளுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
* திருப்பரங்குன்றத்தில் எப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டதில்லை.
* முருகன் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. பக்தர்களுக்கான மாநாடு.
* முருகனுக்கு தமிழகத்தில் தான் விழா எடுக்க முடியும்.
* உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வருவதாக உள்ளது. ஆந்திர துணை முதலமைச்சர் பவண் கல்யாண் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
* மேடையில் தலைவர்கள் மட்டும் இருப்பார்கள். அரசியல் கருத்துக்கள் இருக்காது. இது முருக பக்தர்களுக்கான மாநாடு. முருகர் பக்தர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் கலந்து கொள்ளலாம்.
* நாங்கள் இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம். 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
- திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை தி.மு.க. மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்திரளாகக் கூடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!
இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!
நாளை மதுரை வீரகனூரில், தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்! என்று கூறியுள்ளார்.
- ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
- இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அந்த அதிகாரி கூறியபடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட் டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார்.
இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணை நடைபெறுகிறது.
- கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
- நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
சென்னை:
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் சர்வே எடுத்து வைத்து உள்ளார். இதில் சில தொகுதிகளில் உள்கட்சி பிரச்சனை, இணக்கமான சூழல் கட்சியினரிடம் இல்லாத நிலை இருப்பதாக தலைமைக்கு தெரிய வந்து உள்ளது.
அதன் அடிப்படையில் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.
'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று பரமக்குடி, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டார்.
இந்த சந்திப்பில் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் தொகுதி பார்வையாளர், மண்டலப் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமர வைத்து பேசினார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? ஏதும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா? என்பது போன்று பல விவரங்களை கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார். நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
மொத்தம் 74 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
- ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
அந்த அதிகாரி கூறியபடி இன்று காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது.
இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
- 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
சென்னை:
தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி, இருக்கை வசதி கொண்டவை ஆகும். வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில், பார்சல் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில், சாதாரண ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாதாரண வந்தேபாரத் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே 16 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு ஐ.சி.எப்.பில் பல்வேறு சோதனைகள் நடத்தி முடித்து, ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று மேலும் சில தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ஐ.சி.எப்.புக்கு இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை 88 ரெயில்களை தயாரித்து கொடுத்து விட்டோம். இந்த ரெயில்கள் தெற்கு ரெயில்வே உள்பட பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் இயக்கப்படுகின்றன.
மீதமுள்ள 9 வந்தே பாரத் ரெயில்கள் இந்த நிதியாண்டுக்குள் தயாரித்து வழங்க முடிவு செய்து உள்ளோம். இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரெயில்களை 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வழங்குவோம். அடுத்த நிதியாண்டில் 24 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியை ஐ.சி.எப்.பில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களைப் பொறுத்தவரை முதல்கட்டமாக 50 ரெயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை ரெயில்வே வாரியம் ஐ.சி.எப்.புக்கு கொடுத்துள்ளது. இவை 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரெயில்களை இயக்கும் இலக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.
- அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
- அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார்.
அ.தி.மு.க.வுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்கான சாத்தியக்கூறும் தென்படவில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே கூட்டணி தொடர்பான அறிவிப்பின் போது மத்திய மந்திரி அமித்ஷா தன்னை அழைக்காதது வருத்தம் அளிப்பதாக தனது ஆதங்கத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான கேள்விக்கு, அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என மத்திய மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க.வும் ஆர்வம் காட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எனவே அ.தி.மு.க.வுடனான இணைப்பு சாத்தியம் இல்லை என்ற நிலைக்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.
இந்த நிலையில் எதிர்கால திட்டம் குறித்து கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் சில ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருக்கிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வருகிற ஜூலை 7-ந்தேதி கூட்டி அதில் முக்கிய முடிவை எடுப்பது என முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் நீடிப்பதா? விலகுவதா? என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா? என நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நாங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என கோஷமிட்டு கட்சியை வளர்த்தவர்கள். அதனால் விஜய்யுடன் இணைந்து பயணிக்க கொஞ்சம் நெருடலாக உள்ளது. இப்போதைக்கு இந்த முயற்சி இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது" என்றனர்.
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கடுமையாக கண்டித்த நீதிபதியின் உத்தரவின் பேரியிலேயே கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் வழக்கில் சிக்கி இருக்கிறார். ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
கர்நாடக மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அவர். நாமக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோதும் ஒரு பிரச்சனையில் சிக்கி அதில் இருந்து விடுபட்டு வந்தார். தற்போது ஜெயராம் பணியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.
- ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஜெயிலர் 2' படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்திருந்தார். அப்போது அவரிடம் அகமதாபாத் விமான விபத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, விமான விபத்து ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. ஆண்டவன் அருளால் இனிமேல் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன் என்றார்.
- நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,440
15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560
13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
16-06-2025- ஒரு கிராம் ரூ.120
15-06-2025- ஒரு கிராம் ரூ.120
14-06-2025- ஒரு கிராம் ரூ.120
13-06-2025- ஒரு கிராம் ரூ.120
12-06-2025- ஒரு கிராம் ரூ.119






