என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
- கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
- நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
சென்னை:
சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில் 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக ஒவ்வொரு தொகுதி நிலவரம் பற்றியும் சர்வே எடுத்து வைத்து உள்ளார். இதில் சில தொகுதிகளில் உள்கட்சி பிரச்சனை, இணக்கமான சூழல் கட்சியினரிடம் இல்லாத நிலை இருப்பதாக தலைமைக்கு தெரிய வந்து உள்ளது.
அதன் அடிப்படையில் தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.
'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் நடைபெறும் சந்திப்பு நிகழ்ச்சியில் கடந்த 13-ந்தேதி சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார்.
அதைத் தொடர்ந்து இன்று பரமக்குடி, கவுண்டம்பாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 3 தொகுதி நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டார்.
இந்த சந்திப்பில் ஒன்றிய செயலாளர், நகரச் செயலாளர் தொகுதி பார்வையாளர், மண்டலப் பொறுப்பாளர் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமர வைத்து பேசினார். அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சட்டசபை தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? ஏதும் கருத்து வேறுபாடுகள் உள்ளதா? என்பது போன்று பல விவரங்களை கேட்டறிந்தார். தேர்தலில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டார். நிர்வாகிகளிடம் சகஜமாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறும் கருத்துக்களை கவனமாக கேட்டறிந்தார்.
மொத்தம் 74 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






