என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆள்கடத்தல் வழக்கில் கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
- ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
- இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
இதன் விளைவாக ஜெயராம் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்ற வழக்குகளில் சிக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீது பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அந்த அதிகாரி கூறியபடி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்டு செய்யப்பட் டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவல் தலைமையகம் வெளியிட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக ஏ.டி.ஜி.பி. ஜெயராம் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு அவருக்கு கிடைக்கும் ஓய்வூதிய பலன்களும் பாதிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கையில் தமிழக காவல் துறையின் சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் ஏற்கனவே சிக்கி உள்ளனர். அவர்களும் ஓய்வூதிய பலன்கள் பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தன்னை கைது செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட்டு நடவடிக்கைக்கு எதிராக ஏ.டி.ஜி.பி.ஜெயராம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து உள்ளார்.
இந்த அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. நீதிபதிகள் உஜ்ஜல் பூயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை விசாரணை நடைபெறுகிறது.






