என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் சஸ்பெண்ட்
- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சீருடையுடன் ஆஜரான போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கூடுதல் டி.ஜி.பி. ஜெயராமை கடுமையாக கண்டித்த நீதிபதியின் உத்தரவின் பேரியிலேயே கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், கடத்தல்காரர்களுக்கு கார் கொடுத்து உதவிய வழக்கில் கைதான கூடுதல் டி.ஜி.பி.ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜெயராம், அடுத்த ஆண்டு மே மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் வழக்கில் சிக்கி இருக்கிறார். ஜெயராம், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 1996-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
கர்நாடக மாநிலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் அவர். நாமக்கல், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர். சென்னையில் கூடுதல் கமிஷனராகவும், கோவையில் மேற்கு மண்டல ஐ.ஜி.யாகவும், திருச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர்.
மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்தபோதும் ஒரு பிரச்சனையில் சிக்கி அதில் இருந்து விடுபட்டு வந்தார். தற்போது ஜெயராம் பணியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






