என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூங்கும் வசதியுடன் வந்தே பாரத் ரெயில்கள் - சென்னை ஐ.சி.எப். விரைவில் தயாரிக்கிறது
- தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது.
- 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
சென்னை:
தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி, இருக்கை வசதி கொண்டவை ஆகும். வந்தே பாரத் ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில், பார்சல் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில், சாதாரண ரெயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாதாரண வந்தேபாரத் ரெயில், வந்தே மெட்ரோ ரெயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே 16 பெட்டிகள் தூங்கும் வசதி கொண்ட வந்தேபாரத் ரெயில் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு ஐ.சி.எப்.பில் பல்வேறு சோதனைகள் நடத்தி முடித்து, ரெயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதேபோன்று மேலும் சில தூங்கும் வசதி வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை ஐ.சி.எப்.புக்கு இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரெயில்கள் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை 88 ரெயில்களை தயாரித்து கொடுத்து விட்டோம். இந்த ரெயில்கள் தெற்கு ரெயில்வே உள்பட பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் இயக்கப்படுகின்றன.
மீதமுள்ள 9 வந்தே பாரத் ரெயில்கள் இந்த நிதியாண்டுக்குள் தயாரித்து வழங்க முடிவு செய்து உள்ளோம். இதையடுத்து தூங்கும் வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரெயில்களை 'பாரத் எர்த் மூவர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வழங்குவோம். அடுத்த நிதியாண்டில் 24 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் தயாரிப்பு பணியை ஐ.சி.எப்.பில் தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களைப் பொறுத்தவரை முதல்கட்டமாக 50 ரெயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை ரெயில்வே வாரியம் ஐ.சி.எப்.புக்கு கொடுத்துள்ளது. இவை 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரெயில்களாக இருக்கும்.
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரெயில்களை இயக்கும் இலக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.






