என் மலர்
சென்னை
- சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ1,120-ம் விலை குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,400-க்கும், சவரன் ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.173-க்கும், கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200
17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320
16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
15-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-11-2025- ஒரு கிராம் ரூ.170
17-11-2025- ஒரு கிராம் ரூ.173
16-11-2025- ஒரு கிராம் ரூ.175
15-11-2025- ஒரு கிராம் ரூ.175
14-11-2025- ஒரு கிராம் ரூ.180
- அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
- கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை:
மதுரை, கோவை மாநகரங்களில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கோவில் நகர் 'மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
- இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது.
- மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.
இந்த கால அட்டவணைப்படி, இந்த ரெயில், ராமேசுவரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கும், சிவகங்கையில் இருந்து மாலை 4.10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து மாலை 4.40 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து மாலை 5.10 மணிக்கும், திருச்சியில் இருந்து மாலை 6.10 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கும் புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.52 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து காலை 7.20 மணிக்கும், திருச்சியில் இருந்து காலை 9.20 மணிக்கும், புதுக்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கும், காரைக்குடியில் இருந்து காலை 10.40 மணிக்கும், சிவகங்கையில் இருந்து நண்பகல் 11.15 மணிக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 12.15 மணிக்கும் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயக்கப்பட உள்ளது. ரெயில் இயக்கப்பட்ட பின்னர், நிறுத்தப்படும் இடங்கள் மற்றும் நேரங்களில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
இலங்கை கடலோர பகுதி அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்ந்து, நேற்று காலை 8.30 மணியளவில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவியது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- 94.74 சதவீதம் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
- 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கொல்கத்தா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 4-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 4-ந்தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் தற்போது வரை 6,07,41,484 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 94.74 சதவீதம் ஆகும். இவற்றில் 83 லட்சத்து 45 ஆயிரத்து 574 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது 13.02 சதவீதம் ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
68,467 வாக்குச்சாவாடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
12 மாநிலங்களிலும் 50.25 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 98.54 சதவீதம் ஆகும் எனவும், இவற்றில் 11.76 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளது.
- சார்பதிவாளர் உள்ளிட்டபல்வேறு காலி இடங்களை நிரப்ப குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
- பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
சென்னை:
மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கிடையே, பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான (குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ) அறிவிக்கை கடந்த ஜூலை மாதம் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
இந்நிலையில், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் மேலும் 625 அதிகரிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
2025-26ம் ஆண்டில் குரூப் 2, 2ஏ பணிகளுக்கான 1,270 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுத்துறை/நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் மேலும் உயர்த்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
- விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது.
- மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று வேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.
கடந்த நான்கு ஆண்டு தி.மு.க. ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக தி.மு.க. அரசு கூறியிருக்கிறது.
ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி?
நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அமைச்சர் சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு தி.மு.க. அரசே முழு பொறுப்பு.
கடந்த ஒரு மாதமாக நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், தி.மு.க. அமைச்சர் சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?
தி.மு.க. அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, தி.மு.க.வின் கடித நாடகம் அல்ல.
தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு? என பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
- தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என
மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
- சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
சென்னை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்சியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் நவம்பர் 18-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை வழங்க வேண்டும்.
2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் பணிக் காலத்தை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
1.4.2003-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்திலும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் அருகிலும் இப்போராட்டம் நடைபெற்றது. வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக்கூடாது, அது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும் என்றும் வேலை செய்யாத நாளுக்கு ஊதியம் இல்லை எனவும் போராட்ட விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்து உள்ளது.
ஆனாலும் அதனை மீறி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களி லும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் இப்போராட் டம் நடந்தது.
சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், குறளகம், வணிக வரி அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைவாகவே பணிக்கு வந்தனர். இதனால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல ஆசிரியர்களும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்செயல் விடுப்பு கடிதம் கொடுக்காமல் பெரும்பாலானவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சேப்பாக்கம் அரசு அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மெரினா காமராஜர் சாலை நுழைவு பகுதியில் முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் தலைமை செயலக சங்க தலைவருமான வெங்கடேசன் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்த பயனும் இல்லை. இன்றைய போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
இதனால் அரசு அலுவலக பணிகள், பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கக்கூடும். எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.
- தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி, நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து உள்ளது. இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.
மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடம் இருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ.3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது.
ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை), 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போதைய நெல் கொள்முதல் பருவத்தில் (31.08.2026 வரை) விற்பனைக்குரிய சந்தை உபரி நெல் 98.25 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரிசி அடிப்படையில் இது 66.81 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இது தொடர்பாக, 8.8.2025 அன்று, கரீப் மார்க்கெட்டிங் சீசன் 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 20 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்குமாறு ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு முன் மொழிவு பரிந்துரைக்கப்பட்டது.
தற்போது ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கே.எம்.எஸ். 2025-2026-க்கான அரிசி கொள்முதல் இலக்காக 31.3.2026 வரை 16 லட்சம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் சாகுபடியில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் சாதனை அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, கே.எம்.எஸ். 2025-2026-க்கான 16 லட்சம் மெட்ரிக் டன் அரிசி இலக்கை, கரீப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இரண்டாவதாக, காவிரி டெல்டா பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக நிர்ணயிக்குமாறு தமிழ்நாடு அரசால் 19.10.2025 அன்று ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூன்று குழுக்கள் 25.10.2025 முதல் 28.10.2025 வரை தமிழ்நாட்டில் களப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து நெல் மாதிரிகளை சேகரித்தன. ஆனால் தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை.
கரீப் (குறுவை) பருவ கொள்முதல் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 16.11.2025 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது கொள்முதல் செய்யப்படும் நெல்லில் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் வகையில் ஈரப்பத அளவு தளர்வு உத்தரவினை விரைவாக வழங்கிட வேண்டும்.
செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகள் எடுப்பதில் தளர்வு ஆணைகள் கோரி மாநில அரசு, 07.10.2025 அன்று 5 ஒப்பந்ததாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க உத்தரவு வழங்கியது. 16.11.2025 நில வரப்படி ஒப்பந்ததாரர்கள் 1,760 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, FoRTrace இணைய தளத்தில் 123 மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர். இதில் பதிவேற்றப்பட்ட 77 மாதிரிகளில், இதுவரை 33 மாதிரிகளுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதிரி முடிவை அறிவிக்க கிட்டத்தட்ட 12 நாட்கள் ஆகின்றன. இந்தமுறை கால தாமதத்தை ஏற்படுத்தும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து பெறப்படும் கண்டுமுதல் அரிசியை நகர்வு செய்திடவும், அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் சம்பா (ரபி) பருவ நெல் கொள்முதலுக்குத் தேவையான இடத்தினை ஏற்படுத்திடவும் அதிக அளவு செறிவூட்டப்பட்ட அரிசி அரவைக்குத் தேவைப்படுகின்றன.
எனவே, தற்போதுள்ள 25 கிலோ எப்.ஆர்.கே. சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும். மாதிரி தொகுதி அளவை 10 எம்.டி.-இலிருந்து 25 எம்.டி ஆக பி.ஐ.எஸ். தரநிலைகளுக்கு (ஒரு தொகுதிக்கு 500 மூட்டைகள்) ஏற்ப அதிகரிக்க வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் எடுக்கப்பட வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்து, இடப்பற்றாக்குறை நீங்கி, முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களில் இருந்து 7 நாட்களாகக் குறையும். இது தொடர்ச்சியான நெல் அரவைக்கு வழிவகுக்கும்.
மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இப்பரிந்துரைகளை பரிசீலனை செய்து நெல் அரவை ஆலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் விநியோகத்தினை எளிதாக்கத் தேவையான உத்தரவுகளை பிறப்பித்திட வேண்டும். இதன்மூலம் சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான காலம் கணிசமாகக் குறையும் என்றும், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி இவ்விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவுகளை எடுத்திட வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது.
- காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மது வகைகளை சிறிய அளவிலான காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது; இது குழந்தைகளின் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்வதற்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உறுதி செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மது வகைகளின் தரப்பெயர் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கண்ணாடி புட்டிகளிலும், காகிதக் குடுவைகளிலும் அடைக்கப்பட்ட மது வகைகளின் மாதிரிகள் நீதிபதிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மேல்சட்டைப் பைகளிலும், கால்சட்டைப் பைகளிலும் எளிதாக எடுத்துச் செல்ல வசதியாக சிறிய காகிதக் குடுவைகளில் (டெட்ரா பேக்) விஸ்கி எனும் மது வகை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிர்ச்சியடைந்தார். மது வகைகள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
''இது மிகவும் ஆபத்தானது. இது பழச்சாறு அடைக்கப்பட்ட டெட்ரா பேக் போல காட்சியளிக்கிறது. இது குழந்தைகளின் கைகளில் கிடைத்தால் என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த டெட்ரா பேக்குகளில் போதை தரும் மது தான் இருக்கிறது என்று பெற்றோராலும், ஆசிரியர்களாலும் கூட சந்தேகிக்கக்கூட முடியாது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்" என்று நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி விடுத்த இந்த எச்சரிக்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும், மது வணிகத்தில் புதுமையை புகுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டில் டெட்ரா பேக்குகள் எனப்படும் காகிதக் குடுவைகளில் மது விற்க முடிவு செய்திருந்தது. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இப்போது தெரிவித்த இதே கருத்துகளை அப்போது வெளியிட்டு எச்சரித்த நான், காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்யப்பட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தேன். அதைத் தொடர்ந்து தான் அந்தத் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.
ஒருவேளை பாட்டாளி மக்கள் கட்சியின் எச்சரிக்கையையும் மீறி காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியிருந்தால், உச்சநீதிமன்றத்தால் இப்போது தெரிவிக்கப்பட்டதை விட மிக மோசமான கண்டனத்திற்கு ஆளாகியிருக்க நேரிடும். எது எப்படியிருந்தாலும் வருங்காலத் தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் காகிதக் குடுவைகளில் மது வணிகம் செய்ய நினைத்ததற்காகவே திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






