என் மலர்
சென்னை
- இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
- மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரையில் நீடிக்கிறது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவையும் மழையில் நனைந் தது போல் ஆகிவிடுகின்றன.
காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைத்துக் கொண்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது.
இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, பனிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து வெயில் காலம் தொடங்கும். இதற்கு அறிகுறியாகவே வெயில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என கூறி உள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் வெயில் பாதிப்பை விட பனி பாதிப்பே அதிக அளவில் உள்ளது.
இரவு நேரத்தில் அதிக அளவில் கொட்டும் பனி காரணமாக வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர் சளித் தொல்லையாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சுவாசப் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பனியின் தாக்கம் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை எடுப்பதற்கும் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
இந்தப் பனிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து கடுமையான வெயில் வாட்டி எடுக்க உள்ள சூழலில் தேர்தல் களமும் அப்போது சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரும் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.
இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் வரும் 11-ந்தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழ்நாடு வர உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.
- செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் எனவும் கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த 2 மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச்சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறியுள்ளார்.
- தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
- கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதிவரை நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
- நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.
- இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர்.
சென்னை:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உருவச்சிலை ஜி.என்.செட்டி சாலை-திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது. இவ்விடத்தில் உள்ள கலைவாணரின் உருவச் சிலையினை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த அவரது உருவச் சிலையினைப் புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார்.
அதன்படி, சென்னை, கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்த் திரைப்படத்துறையில் கலைவாணர் என அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவைக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞராகத் திகழ்ந்தார்.
தமிழில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராகவும் விளங்கியவர். இவர் உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர்.
இவர் சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதனால் தான் இவருக்கு, "கலைவாணர்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயிலில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் டிக்கெட் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர வழிகளிலும் வருவாயை திரட்டும் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
வாகன நிறுத்தும் இடம் அதிகரிப்பு, மெட்ரோவுக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு நீண்ட காலத்துக்கு குத்தகை விடுவது, ரெயில்கள், ரெயில் நிலையங்களில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிப்பது உட்பட பல்வேறு வகைகளில் வருவாயை ஈட்டுகிறது. இதனால் அந்நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 2024-25-ம் நிதியாண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.369.49 கோடியிலிருந்து ரூ.425.64 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது 15 சதவீதம் அதிகமாகும்.
பயணக் கட்டண வருவாய் மட்டுமின்றி, இதர பிரிவுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இதர பிரிவு வருவாய் ரூ.104.30 கோடியிலிருந்து ரூ.135.39 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.
வரும் ஆண்டுகளில் பயணிகள் எண்ணிக்கையும், இதர பிரிவுகளில் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்பதால், வருவாய் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- புயலுக்கு பின்னர் அமைதி ஏற்படுவது போல தங்கம் விலை அதன்பின்னர் இறங்குமுகம் கண்டது.
- தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்தது.
சென்னை:
மதிப்புமிக்க உலோகமான தங்கத்தின் விலையில் கடந்த சில மாதங்களாகவே நிலையற்ற தன்மை காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் ஏற்றம் காண்பதும், மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதியன்று தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 960-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 680-க்கும் விற்பனையானது.
இது 28-ந்தேதியன்று ரூ.650 அதிகரித்து கிராம் ரூ.15 ஆயிரத்து 610-க்கும், ரூ.5 ஆயிரத்து 200 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அதன் மறுநாளும் அண்ணார்ந்து பார்க்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதாவது 29-ந்தேதியன்று ரூ.9 ஆயிரத்து 520 உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டிப் பிடித்தது.
புயலுக்கு பின்னர் அமைதி ஏற்படுவது போல தங்கம் விலை அதன்பின்னர் இறங்குமுகம் கண்டது. படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று மீண்டும் தனது கோர முகத்தை காட்டியது. அதாவது நேற்று ரூ.630 உயர்ந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 900 ஆகவும், ரூ.5 ஆயிரத்து 40 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்தது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் பார் வெள்ளி 3 லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
04-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
03-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,160
02-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
01-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
31-01-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
04-02-2026- ஒரு கிராம் ரூ.320
03-02-2026- ஒரு கிராம் ரூ.300
02-02-2026- ஒரு கிராம் ரூ.300
01-02-2026- ஒரு கிராம் ரூ.320
31-01-2026- ஒரு கிராம் ரூ.320
- திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.
- திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களின் கால நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்விவரம் வருமாறு:-
* திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து ராமேசுவரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16343), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு காலை 8.05 மணிக்கும், மதுரைக்கு 9.20 மணிக்கும், மானாமதுரைக்கு 10.03 மணிக்கும், பரமக்குடிக்கு 10.23 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.48 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.15 மணிக்கும் சென்றடையும்.
* திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16849), புதிய கால நேர அட்டவணைப்படி திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் ரெயில் மானாமதுரைக்கு 9.40 மணிக்கும், பரமக்குடிக்கு 10.08 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.38 மணிக்கும், உச்சிப்புளிக்கு 10.54 மணிக்கும், மண்டபத்திற்கு 11.09 மணிக்கும், பாம்பனுக்கு 11.19 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் சென்றடையும்.
* திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56717), புதிய கால நேர அட்டவணைப்படி திண்டுக்கல்லில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயில் அம்பாத்துரைக்கு 8.01 மணிக்கும், கொடைக்கானல் சாலைக்கு 8.10 மணிக்கும், வாடிப்பட்டிக்கு 8.20 மணிக்கும், சோழவந்தானுக்கு 8.29 மணிக்கும், சமயநல்லூருக்கு 8.39 மணிக்கும், கூடல்நகருக்கு 8.49 மணிக்கும், மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் சென்றடையும்.
* ராமேசுவரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரெயில் (56714), புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் பாம்பனுக்கு 11.43 மணிக்கும், மண்டபத்திற்கு 11.53 மணிக்கும், உச்சிப்புளிக்கு மதியம் 12.10 மணிக்கும், வாலாந்தரவைக்கு 12.20 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 12.39 மணிக்கும், சத்திரக்குடிக்கு 12.46 மணிக்கும், பரமக்குடிக்கு 1 மணிக்கும், சூடியூருக்கு 1.13 மணிக்கும், மானாமதுரைக்கு 1.40 மணிக்கும், ராஜகம்பீரத்திற்கு 1.52 மணிக்கும், திருப்பாச்சேத்திக்கு 2.02 மணிக்கும், திருப்புவனத்திற்கு 2.12 மணிக்கும், சிலைமானுக்கு 2.23 மணிக்கும், மதுரை கிழக்கு ரெயில் நிலையத்திற்கு 2.35 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.05 மணிக்கும் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது.
- தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே ஏராளமானோர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்களும், தொழிலாளர்களும் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது.
ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம்தாகூர் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
சென்னை பூங்கா ரெயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
- நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (06.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாச நகர், பக்தவச்சலம் ரோடு, சேமத்தமன் நகர், இடார் சாலை, மேட்டுக்குளம், நியூ காலனி, திருவீதி அம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், மூகாம்பிகா நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வர் நகர், விஜிபி அமுதா நகர், சிடிஎன் நகர், சாந்தா அவென்யூ, சிவந்தி அவென்யூ, ரெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, கருணேகர் தெரு.
காரம்பாக்கம்: கந்தசுவாமி நகர், பொன்னி நகர், அருணாசலம் நகர், மோதி நகர், பத்மவாஹி நகர், காவேரி நகர், பாரதி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிராமணர் தெரு.
மாதவரம்: காசா கிராண்ட் ரெசிடென்ஷியல் டவர்.
- தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள்.
- தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.
இம்மாதம் 17-ந் தேதியன்று தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி வரும் 12-ந் தேதி தேர்தல் துணை கமிஷனர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வார்கள்.
பின்னர் தமிழகத்தில் நடக்கும் தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றி தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தெரிவிப்பார்கள். அதன் பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள்.
அவர்கள் வருகையின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, வங்கிகள், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார்.






