என் மலர்tooltip icon

    சென்னை

    • பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்பட இருக்கிறது.

    இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.

    14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.

    முதல் நாளான இன்று, மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனுக்களை வழங்க இருக்கிறார்கள்.

    • பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.
    • காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

    பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

    பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

    இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

    இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

    ப்ளு போன்ற அறிகுறிகள் (II) இருமல், சளி. காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும்.

    ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

    பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு 13ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம்.
    • அதிமுக அனைத்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    125 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," மாநிலம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு 13ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    போராட்டத்தில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.
    • சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்று வழங்க முடியாது என்று சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

    லட்சுமி- லாரன்ஸ் காதல் படத்திற்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்சார் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

    லட்சுமி-லாரன்ஸ் காதல் திரைப்படத்தில் குறிப்பிட்ட பிரிவினரை இழுிவுபடுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூக அமைதியின்மையை தூண்டக்கூடிய படைப்புகளை கருத்து சுதந்திரம் என அனுமதிக்க முடியாது என நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய தணிக்கை வாரியம் தரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது.
    • ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரியை செலுத்தாவிடில் சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ஜெயலலிதா வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் ரூ.1.12 கோடியை செலுத்தி உள்ளார். வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து ரூ.9.17 கோடியாக உள்ளது என்றது.

    ரூ.13 கோடி வரி பாக்கியை செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதா, தீபக் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    • சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன்.
    • அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை.

    காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி ஜோதிமணி, செல்வி சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை. அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார்.

    நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

    10 மற்றும் 11-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதற்கிடையே இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.
    • அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார்.

    வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடல், வலையல்குளம், உத்தல்குடி ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். போலீஸ் அனுமதி வழங்கும் இடத்தில் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டணி கட்சி தலைவர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.

    இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தையே அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். எனவே மதுரை பிரசாரத்தின்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது.

    மேலும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு-ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக் கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2-ம் கட்டமாக மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு வருகிறார்.

    சேலம் விமான நிலையம் அருகே உள்ள திடலில் நடக்கும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.

    அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுவை மாநிலத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.

    வருகிற 21-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 14-ந் தேதி புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு வருகிறார்.

    அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வழிபடுகிறார்.

    காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

    • ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    * ரூ.34,237 கோடியில் செயல்படுத்தப்படும் 15 புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    * ஹூண்டாய் நிறுவனத்திற்கான விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    * சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    தொழில் துறையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

    • திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.
    • கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.3511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.1267.62 கோடி மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரிய அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.47 லட்சம் மதிப்பிலான 5 வாகனங்களை வழங்கினார்.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும், நகராட்சி நிர்வாக இயக்கு நரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.

    மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகள் மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகள் என மொத்தம் 1,267.62 கோடி மதிப்பில் 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், ராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் மற்றும் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1070 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 11 ஊராட்சிகளுக்கு 1138.41 கோடி ரூபாய் செலவிலான 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.

    தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு 515.72 கோடி ரூபாய் செலவிலான கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு 44.58 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.

    கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்தை சார்ந்த கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளில் உள்ள 24 ஊரகக் குடியிருப்புகளுக்கு 7.06 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தை சார்ந்த வடசேரி மற்றும் 17 குடியிருப்புகளுக்கு 4.95 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்;

    என மொத்தம் 1724 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 11 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் 653 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 4 லட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல் வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் (செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை) ஆகிய பகுதிகளில் 74 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவிலான குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 68 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சோழிங்கநல்லூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

    அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் 17 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

    தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூரில் 45 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

    மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்.

    மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 லட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள்.

    தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 134 கோடி 33 லட்சம் செலவில், கழிவுநீர் உந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 635 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம், சூளைமேடு, விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே இரயில்வே காலனி 3-வது தெருவையும், மாதா கோயில் தெருவையும் இணைக்கும் வகையில் 1.60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம், மாதவரம் மண்டலம், விநாயகபுரத்தில் 1.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், எம்.ஆர்.எச். சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ் கான் சாலையோரத்தில் 19.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான நடைபாதை வளாகம் ஆகியவை திறக்கப்பட்டன.

    மணலி மண்டலத்தில் ரூ.19.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 பள்ளிக் கட்டடங்கள், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன.

    மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் வளாகத்தில் 1.82 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம். மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் ரூ.6.29 கோடி செலவில் 10 புதிய மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் 2 புதிய நவீன உடற்பயிற்சிக் கூடங்கள், அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் ரூ.1.37 கோடி செலவில் 5 புதிய பூங்காக்கள், ரூ. 13.43 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் 9 புதிய குளங்கள். மேலும், ரூ.2.64 கோடி செலவில் தண்டையார்பேட்டை மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 3 விளையாட்டு திடல்கள், ரூ. 1.24 கோடி செலவில், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களில் இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் மைதானங்கள். ரூ.9.13 கோடி ரூபாய் செலவில், மணலி, அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் 6 எரிவாயு தகன மேடைகள் என மொத்தம் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம், மணலி மண்டலம், செட்டிமேடு பகுதியில் 6.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளரங்க கபடி மைதானம் மற்றும் திறந்தவெளி கால்பந்து மைதானம், மாதவரம் மண்டலம், சி.எம்.டி.ஏ. டிரக் டெர்மினல் பகுதியில் 4.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு வளாகம், மாதவரம் மண்டலம், திருவள்ளுவர் தெரு, புத்தகரத்தில் 4.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள முதல்வர் படைப்பகங்கள்.

    ரூ.9.54 கோடி மதிப்பீட்டில், மாதவரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக வசதிகளுடன் கூடிய 2 பூங்காக்கள் என 4 பூங்கா மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.

    புழலில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 555 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 310 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட நிலையமாக மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகள் 376 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செயல்படுத்தும் பணிகள் என மொத்தம் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிடும் வகையில் அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமை செயலாளர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன.
    • அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளன.

    பயணிகள் வசதியை மேம்படுத்தவும் ரெயில் வருகை மற்றும் புறப்படும் நேரம் விவரங்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளது.

    வேளச்சேரி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, பல்லாவரம், திருவான்மியூர், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மீஞ்சூர், தாம்பரம், சானடோரியம், கோட்டை, திருவொற்றியூர், கொரட்டூர், சேத்துப்பட்டு, வியாசர்பாடி ஜீவா, தரமணி, திரிசூலம், அண்ணனூர், பட்டர வாக்கம், திருமயிலை, மீனம் பாக்கம், பெரம்பூர், லோகோ ஒர்க்ஸ் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம்.

    சிந்தாதிரிப்பேட்டை, அத்திப்பட்டு, கஸ்தூரிபாய் நகர், பெருங்குடி, அனுப்பம்பட்டு, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, மந்தைவெளி, கோட்டூர்புரம், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் கிரீன்வேஸ் சாலை, கத்திவாக்கம், இந்திரா நகர், அத்திப்பட்டு புதுநகர், முண்டக்கண்ணி அம்மன் கோவில், ராயபுரம், பேசின் பாலம், பொன்னேரி, விம்கோ நகர், ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் நந்தியம்பாக்கம் ஆகிய 48 ரெயில் நிலையங்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் ரெயிலில் வருகை மற்றும் புறப்பட நேரங்களை துல்லியமான மற்றும் உடனடித் தகவலுடன் காட்டுகின்றன. மேலும் ரெயில் எண்கள் இலக்கு நிலையங்கள் பிளாட்பாரம் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை ஆகியவை தெளிவாக காட்டப்படுகிறது. அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எல்.இ.டி. திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிக நெரிசல் நேரங்களிலும் மற்றும் பல்வேறு வெளிச்ச நிலைகளிலும் கூட இந்த பலகைகள் தெளிவாக காணப்படுகின்றன. இந்த முயற்சி தினசரி பயணிகள், முதியவர்கள் மற்றும் முதன்முறையாக பயணம் செய்பவர்கள் ஆகியோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

    • சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
    • விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    * சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

    * நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.

    * விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    * பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    ×