search icon
என் மலர்tooltip icon
    • முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார்.

    தரம்சாலா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    • 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவளர்கள், போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினர். வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த துறைமுக மாஜிஸ்திரேட் கோர்ட், ராஜபக்சே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

    ராஜபக்சேவின் சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவி விலகும்படி வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மகிந்த தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. அத்துடன் 4 அரசியல் தலைவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை அவர்களிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. 

    • விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்டது.
    • இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இருந்து ரூ.535 கோடி பணத்துடன் சென்ற லாரி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து 2 கண்டெய்னர் லாரிகளில் பணத்தை ஏற்றிக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டபோது தாம்பரம் அருகே ஒரு லாரி பழுதானது.

    இதனால் இரண்டு லாரிகளையும் சித்த மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். பணத்துடன் நிற்கும் லாரிகளுக்கு, தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஜேமி மெக்டொனால்ட் முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
    • சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த பயணத்தின் நோக்கம் ஆகும்.

    லண்டன்:

    சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களை செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன், உலக சாதனைகளை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் ஏழு அதிசயங்களையும் ஒரு வாரத்திற்குள் சுற்றிப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    ஜேமி மெக்டொனால்ட் என்ற அந்த நபர், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார். ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.

    இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 ரெயில்கள், 16 டாக்சிகள் மற்றும் ஒரு டோபோக்கன் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.

    மெக்டோனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு அளித்தது. சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் நோக்கம் ஆகும். 

    • மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டாரா ஆதம் கேல் பகுதியில் பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது.

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் டாரா ஆதம் ஹெல் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று அதே பகுதியில் வசிக்கும் இரு தரப்பு பழங்குடியின மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டும் வந்தது.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பழங்குடியின சமுகத்தினர் இடையே நேற்று இரவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    டாரா ஆதம் கேல் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ளது, இங்கு பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது. இப்பகுதி, 2018 இல் கைபர் பாக்துன்க்வாவுடன் இணைக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது...

    • காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் விளாசினார்.
    • மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் எடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது.

    டாப் ஆர்டர் வீரர்கள் மூன்று பேர் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார். ஆனால் காயம் காரணமாக வெளியேறினார். மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 89 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டாப் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

    சென்னை:

    சென்னையின் மிகப்பெரிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் வரும் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை ஆகாய மார்க்கமாக நடந்து செல்லும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த மேம்பாலம் 570 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த பாலத்தில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி செல்லும் வகையில் சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டு உள்ளது. மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்தால் தியாகராய நகரில் இனி கூட்ட நெரிசல் குறையும்.

    • விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    • விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன.

    லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும் இயக்க முடியாத நிலை உருவானது. எனவே, அங்கிருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    நிலைமையை சரி செய்யவும், திட்டமிட்டபடி நாளை விமானங்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும், முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு விமான சேவைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளன. 

    • மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ்‌ மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் மேல மணக்குடி கிராமத்தில் 29.5 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தினை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து இறங்கு தளத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர் குத்து விளக்கு ஏற்றி வைக்க, அவருடன் விஜய் வசந்த் எம்.பி. இணைந்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • விஷச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
    • டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் எக்கியர்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை என்றும், விஷச் சாராயம் தான் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம் வியப்பாகவும், நகைப்பாகவும் உள்ளது.

    கள்ளச்சாராயம் என்பதற்கு வரையறைகள் எதுவும் இல்லை. கள்ளச்சாராயம், காவல்துறை குறிப்பிடும் விஷச்சாராயம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் அனைத்துமே உயிரிழப்பை ஏற்படுத்துபவை தான். அதற்கான கால அளவு மட்டும் தான் மாறுபடும். சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம் தான் கள்ளச்சாராயம் என்றழைக்கப்படுகிறது. விஷச்சாராயம் குடித்ததால் தான் 21 உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தது காவல்துறையின் தோல்வி தான். அதற்கு பொறுப்பேற்பதை விடுத்து வினோதமான விளக்கங்களை காவல்துறை அளிக்கக் கூடாது.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு விட்டதால் தான் சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல்துறை கூறுவதும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராம், மெத்தனால் கலவை சாராயம் என அனைத்து வகை சாராயங்களும் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான். அதனால் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

    • நான்கு வாரத்தில் பதிலளிக்க தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலியாகினர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் எத்தனால் கலந்த சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

    இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதுடன், டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

    ×