search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம்.
    • இஸ்ரேல் உடனான உறவை நீட்டிப்பது குறித்து பரிசீலனை.

    காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

    "காசா எல்லைக்கு வந்து, காசா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காசா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் டன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது."

     

    "மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீட்டிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்," என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

    • ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்தம் ஒப்பந்தம் காரணமாக பிணைக்கைதிகள் விடுவிப்பு.
    • பெற்றோரை இழந்த பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தினர். இரண்டு நிமிடத்திற்குள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதில் சிறு குழந்தைகள் உள்பட 84 வயது முதியோர் வரை அடங்குவர்.

    46 நாட்களுக்கு மேல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

    முதல் நான்கு நாட்களில் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

     

    ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை தெரிந்து கொள்ள செய்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன.

    ஆனால், மருத்துவமனைகளுக்கு தகவலை பரிமாறிக் கொள்ளவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தகவல் கசிந்துள்ளது. வடக்கு காசாவில் பிடிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் உள்ள அதிகாரி மூலம் பிணைக்கைதிகள் எதிர்கொண்ட இன்னல்கள் தெரியவந்துள்ளது.

    அவர்களுக்கு மிகவும் குறைந்த ஊட்டச்சத்து குறைந்த உணவுகளே கொடுக்கப்பட்டடுள்ளத. மேலும், கொஞ்சமாக அரிசி உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, ஃபவா பீன்ஸ், சில நேரங்களில் பிட்டாவுடன் உப்பு கலந்த சீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மற்ற ஏதும் வழங்கப்படவில்லை. காய்கறிகள், முட்டை போன்ற உணவுகள் வழங்கவில்லை.

    பலர் தங்களுடைய எடையில் 10 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் குறைந்துள்ளனர். அவர்களுக்கு ஒளி (வெளிச்சம்) காட்டப்படவில்லை. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வெளிச்சம் காட்டப்பட்டுள்ளது.

    தங்களது தகவலை பரிமாறிக்கொள்ள பேனா அல்லது பென்சில் கேட்டபோது, அதற்கு ஹமாஸ் அமைப்பினர் அனுமதி அளிக்கவில்லை. எழுத்து மூலம் தகவலை பரிமாற்றம் செய்யக்கூடும் என பயந்ததால் அனுமதிக்கவில்லை. தொலைக்காட்சி, வாசிப்பு தொடர்பானதுக்கும் அனுமதிக்கவில்லை. ஒருவர் மூலம் ஒருவர் என்ற வகையில் தகவலை பரிமாறிக் கொள்ள அனுமதித்துள்ளனர். முதியவர்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டுள்ளனர். சேரில் இருந்தவாறு தூங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு இன்னல்களை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரி தகவலை பகிர்ந்துள்ளார்.

    இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு தங்களது தாயாரை சந்திக்கும் மகிழ்ச்சியில் வந்தபோது, ஹமாஸ் தாக்குதலின்போது உயிரிழந்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மனவேதனை அடைந்தனர்.

    • ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
    • இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும், பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று காசா பகுதியில் பாதுகாப்புப் படையினரை சந்தித்து பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் பேசினார் என்றும், பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற்றார் என்றும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில்"எதுவும் எங்களைத் தடுக்காது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பலம், சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதையே நாங்கள் செய்வோம்," என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது.
    • காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது.

    காசா மீதான 4 நாள் போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் தீவிரமாக சண்டையை தொடர திட்டமிட்டுள்ளோம்.

    இன்னும் ஹமாசின் பல இலக்குகள், பல சுரங்கங்கள் தகர்க்கப்பட உள்ளது. அவற்றில் சிலவற்றை போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அழித்து விட்டோம். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு ஹமாஸ் அமைப்பின் பல சுரங்கங்கள் அழிக்கப்படும். 

    கூடுதல் இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் போர் நிறுத்தம் 27-ந்தேதி காலாவதியாகும். காசா மக்கள், வடக்கு பகுதிக்கு செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதிக்காது" என்றார்.

    • பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் நிறுத்தம் செய்து கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்.
    • இன்று முதல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது.

    இதற்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதி சின்னாபின்னமாகி விட்டது. இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

    இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டது.

    இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனேஜிபி கூறும்போது, "போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பிணைக்கைதிகள் விடுதலை வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் அது நாளைக்கு முன்பாக நடைபெற வாய்ப்பு இல்லை" என்று தெரிவித்தார்.

    இஸ்ரேல் சிறையில் உள்ளவர்களை நாளைக்கு முன்னதாக விடுவிக்க இயலாது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை இஸ்ரேல் கேட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது பின்னர்தான் தெரியும்.

    ஆனால், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், பேச்சுவார்த்தையில் அரசின் குறைபாடே காலதாமதத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

    போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தாமதத்துக்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பால் பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை வரை தாமதம் ஆகி உள்ளது. இதனால் பிணைக்கைதிகள் விடுவிப்பு 25-ந்தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என்று இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுஸ் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோல் வடக்கு காசாவில் அபு இஸ்கந்தர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    • மருத்துவமனைகளின் ஒரு பகுதியை தங்களது செயல்பாட்டிற்கு ஹமாஸ் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு.
    • இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதை உலகிற்கு வீடியோ மூலம் காண்பித்து வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 7-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டனர். 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதலை தொடங்கியது. ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    மனிதாபிமான உதவிகள் செல்லாத வண்ணம் போரை தொடர்ந்து நடத்தியது. இதனால் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் தெற்கு பகுதி நோக்கி ஓடத்தொடங்கினர்.

    இஸ்ரேலின் பதிலடியில் காசா சீர்குலைந்துள்ளது. பெண்கள், குழந்தைகள்- சிறுவர்கள் மிகப்பெரிய அளவில் கொல்லப்பட்டனர். இதுவரை 14,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகள், மசூதிகள் என எந்த இடத்தையும் விட்டுவைக்கவில்லை. 

    மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மருத்துவமனைகளை தங்களது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியது. ஆனால், மருத்துவ நிர்வாகம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இதை மறுத்து வந்தனர்.

    ஆனால், இஸ்ரேல் ராணுவம் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டு வருகிறது. மருத்துவமனைகளுடன் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து வெடிபொருட்கள், துப்பாக்கிகள், நெட்வொர்க் வசதிகளுக்கு கட்டமைப்புகள் அனைத்தும் பறிமுதல் செய்தது.

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது. இந்த நிலையில், டியர் உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே பிணைக்கைதிகளை உயிருடன் மீட்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் அக்கறை கொள்ளவில்லை என்று இஸ்ரேல் நாட்டிற்குள்ளேயே போராட்டம் வெடித்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்க போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் தயாரானது. இதற்கு இஸ்ரேல் மந்திரசபை ஒப்புதல் அளித்துள்ளது. 50 பேருக்கு மேல் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படு் எனவும் இஸ்ரேல் மந்திரி சபை தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல், தனது நாட்டில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் சிலரை வெளியிட வேண்டும். இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் எப்போதும் வேண்டுமென்றாலும் கையெழுத்தாகலாம். இன்று பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது காலதாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 50 பிணைக்கைதிகளை விடுவிக்க 4 நாட்கள் போர் நிறுத்தம்.
    • அதன்பின் ஒவ்வொரு 10 பேர் விடுதலைக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.

    கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

    இதனால் இஸ்ரேல் மந்திரிசபை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதனால் ஹமாஸ் விரைவில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    காசாவில் 14,100 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் சுமார் 6 ஆயிரம் பேர் குழந்தைகள்- சிறுவர்கள் எனவும், 4 பேர் பெண்கள் எனவும் ஹமாஸ் அரசு தெரிவித்துள்ளது.

    50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பிணைக்கைதிகளை மீட்கும் வகையில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது.
    • ஹமாஸ்- இஸ்ரேல் இடையே எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தும் ஏற்படலாம்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 7-ந்தேதியில் இருந்து போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென நடத்திய தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவின் வடக்கு பகுதி சீர்குலைந்துள்ளது. அமெரிக்கா பலமுறை போர் நிறுத்தத்திற்கு முயற்சி செய்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

    பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்ற 240 பேரை உயிருடன் மீட்க வேண்டிய நிலையில் இஸ்ரேல் உள்ளது. அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கவும் திட்டமிட்டுள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேவேளையில் இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு அமெரிக்காவுடன் இணைந்து கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.

    இதன் பயனாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஹமாஸ் தலைவர் நேற்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ்க்கு எதிராக போர் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது "நாங்கள் போரில் இருக்கிறோம். போரை தொடருவோம். எங்களுடைய அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும்.

    போர் நிறுத்த நேரத்தில் உளவுத்துறை முயற்சிகள் பராமரிக்கப்படும், இது ராணுவத்தை அடுத்த கட்ட போருக்கு தயார்படுத்த அனுமதிக்கும். காஸா இஸ்ரேலை அச்சுறுத்தும் வரை போர் தொடரும்" என்றார்.

    240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வௌயாகி உள்ளது.

    • மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.
    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    காசா:

    காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உள்பட 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காசா பகுதி முற்றிலும் நிர்மூலமாகி விட்டது.

    இதற்கிடையே காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அங்குள்ள ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபா அருகே தாக்குதல் நடக்கிறது. ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாகவும், ஆஸ்பத்திரியின் கீழே ஹமாசின் சுரங்கங்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசாவில் நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. அல்-புரேஜ் அகதி முகாம், ரபா, காசா சிட்டி மற்றும் பிற பகுதிகளில் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது.

    வடக்கு காசாவில் உள்ள இந்தோனேசியன் ஆஸ்பத்திரியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதுபோல் மற்ற ஆஸ்பத்திரிகள் பகுதிகளிலும் தாக்குதல் நடக்கிறது.

    இதனால் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள், தஞ்சம் அடைந்த பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகிறார்கள்.

    போதுமான எரிபொருள் இல்லாததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. இதனால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் குறை பிரசவத்தில் பிறந்த 28 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காசா ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் குழந்தைகள் ஏற்றப்பட்டு ரபா எல்லை வழியாக எகிப்துக்கு சென்றடைந்தன.

    பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • துருக்கியில் இருந்து சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்தது.
    • ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை ஆதரவு தெரிவித்துள்ளது

    செங்கடல் பகுதிக்கு இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் அந்த நாட்டு கொடிகளுடன் வரும் கப்பல்களை கடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் துருக்கியில் இருந்து கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த கப்பல் ஏமன் அருகே தெற்கு செங்கடல் பகுதிக்கு வந்த போது திடீரென மாயமாகி விட்டது.

    அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல் இல்லை என்றும், ஆபிரகாம் உங்கர் என்ற இஸ்ரேலிய தொழில் அதிபருக்கு சொந்தமானது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த கப்பல் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது ஆகும்.

    கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
    • ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.

    காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

    இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின.

    இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் புகுந்து சோதனை நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக கூறி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள், மருந்துவ ஊழியர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது என்றும் இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து பலர் வெளியேறி வருவதாகவும் தகவல் வெளியானது.

    ஆனால் ஆஸ்பத்திரியில் மக்களை வெளியேற உத்தரவிடவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆஸ்பத்திரியின் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற அனுமதித்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து வெளியேறுகிறார்கள் என்று தெரிவித்து இருக்கிறது.

    அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். அந்த ஆஸ்பத்திரி, மரண மண்டலமாக மாறி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சுமார் 240 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர்.
    • பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

    ரபா:

    இஸ்ரேல் தொடுத்துள்ள போரால் நிலைகுலைந்து காணப்படும் காசாவில் எங்கு நோக்கினும் கட்டிட இடிபாடுகளாகவே காட்சியளிக்கின்றன. அங்கு வான் வழியாகவும், தரை வழியாகவும் ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காசாவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    கடைசி ஹமாஸ் போராளியையும் அழித்தொழிக்கும் நோக்கில் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தி வருகிறது.

    காசாவின் மிகப்பெரிய அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் இஸ்ரேல் ராணுவம் புகுந்தது சர்வதேச எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. அங்கே ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க கட்டுப்பாட்டு மையம் இருப்பதாக கூறி நுழைந்த ராணுவம், அத்தகைய சந்தேகத்துக்கு இடமான பகுதி எதையும் அங்கே கண்டுபிடிக்கவில்லை.

    அங்கு நின்றிருந்த வாகனம் ஒன்றில் சில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஹமாஸ் அமைப்பினரின் ஒரு சில தளவாடங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் இஸ்ரேல் ராணுவத்தின் குற்றச்சாட்டு பொய்யாகி இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

    இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரை வீழ்த்தும் நடவடிக்கையை நீடித்து வரும் இஸ்ரேல் ராணுவம், அடுத்ததாக தெற்கை நோக்கி நகரும் முடிவில் உள்ளது.

    வடக்கில் இருந்து லட்சக்கணக்கில் தெற்கில் அகதிகளாக தங்கியிருக்கும் மக்கள் இதனால் பெரும் துயரை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அண்டை நாடான எகிப்தும் காசா அகதிகளை ஏற்க மறுத்து விட்டது.

    எனவே மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மவாசி நகருக்கு இடம்பெயருமாறு காசா மக்களை இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சில சதுர கி.மீ. மட்டுமே பரப்பளவு கொண்ட அந்த பகுதியில் பெருமளவிலான இந்த மக்கள் தஞ்சம் அடைய முடியாது என்பதால் இஸ்ரேலின் அறிவிப்பை ஐ.நா. மனிதாபிமான நிறுவனங்கள் நிராகரித்து விட்டன.

    இதனால் காசாவாசிகளின் துயரம் விவரிக்க முடியாத நிலைக்கு மாறி இருக்கிறது.

    இதற்கிடையே போர் உக்கிரம் அடைந்துள்ள காசாவில் ஐ.நா. மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அங்கு நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு இந்த பணிகளை மோசமாக பாதித்து இருக்கின்றன.

    எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு தகவல் தொடர்பு சேவை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதனால் நேற்று 2-வது நாளாக நிவாரண பணிகள் நிறுத்தப்பட்டன.

    உதவி வினியோகத்தை ஒருங்கிணைப்பதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதால், தேவைப்படும் இடங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

    போர் தொடங்கியதுமே காசாவுக்கு எரிபொருள் செல்வதை இஸ்ரேல் தடுத்து விட்டது. இதனால் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளும் அங்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள முடியவில்லை.

    காசாவின் தினசரி உணவு தேவையில் வெறும் 10 சதவீதமே தற்போது வினியோகிக்கப்படுவதாகவும் இதனால் விரைவில் அங்கு பட்டினிச்சாவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரிக்கும் என ஐ.நா.வின் உணவு திட்ட செய்தி தொடர்பாளர் அபீர் எடேபா அச்சம் வெளியிட்டு உள்ளார்.

    கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த போரில் இதுவரை 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதில் காசாவில் மட்டுமே 11,400-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.

    இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் சுமார் 240 பேரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தனர். அவர்களில் 4 பேர் இதுவரை கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. 4 பேர் விடுவிக்கப்பட்டதுடன், ஒருவரை ராணுவம் அதிரடியாக மீட்டு உள்ளது.

    இந்த போர் தொடங்கியது முதல் காசாவில் 2,700 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கட்டிட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான பிணங்கள் இன்னும் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

    அவற்றை மீட்பதற்கு ஆளில்லாமல் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சில இடங்களில் அவர்களின் உறவினர்களே வெறும் கைகளால் கட்டிட இடிபாடுகளை அகற்றி தங்கள் உறவுகளை தேடி வரும் துயரம் நிலவுகிறது.

    இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் தற்போது காசாவுக்கு எரிபொருள் அனுப்ப இஸ்ரேல் அரசு அனுமதித்து உள்ளது.

    ×