என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
    • திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தந்தையை இழந்த 16 வயதான சிறுமி அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவுக்காரர் ஒருவரை அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் முடிவு செய்தார். அதை விரும்பாத அந்த சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்தார்.

    ஆனால் எவ்வளவோ மறுத்தும் கண்டுகொள்ளாமல் உறவினருடான திருமண வேலைகளை குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் தவித்த அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்புக்கான இலவச தொலைபேசி எண் 1098-ஐ தொடர்பு கொண்டு பேசி தன் நிலையை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெள்ளகோவில் விரைந்து சென்றனர்.

    பின்னர் சிறுமி மற்றும் அவரது பெற்றோரை நேரில் சந்தித்து விசாரித்தனர். அப்போது சட்டப்படி வயது வராமல் பெண்ணுக்கு திருமணம் செய்யக்கூடாது என விளக்கி கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அந்த சிறுமியுடன் குடும்பத்தினரை திருப்பூர் அலுவலகத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழி.
    • புதிய கல்விக் கொள்கையை ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகத் தாய்மொழி தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களது தாய்மொழியை போற்றுகின்ற வண்ணம், இன்றைய தினமானது 'உலக தாய்மொழி' தினமாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பன்முகத் தன்மை கொண்ட நமது பாரத தேசத்தில் உள்ள அனைவரும், அவர்தம் தாய்மொழியை நேசிக்கின்ற மற்றும் எண்ணிப் பெருமை கொள்கின்ற தினமாக இன்றைய தினம் அமைந்திட எனது தாய்மொழி தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், எண்ணற்ற மொழிகளுக்கு ஆதி மொழியாய் நின்று, பல்லாயிரம் ஆண்டுகளாய் செழித்து தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றி நிற்கும் தமிழ் மொழியை, தமிழர்களாகிய நாம் அனைவரும் பெருமையுடன் போற்றுவோம்.

    அதேசமயம், சிறுவயது முதலே தாய்மொழி வழிக் கல்வியில் நமது கற்றல் திறனை தொடங்குவது என்பது, ஒவ்வொரு மனிதரிடத்திலும் தனது மொழியின் பண்புகளான மனிதம் மற்றும் அனைத்து உயிர்களிடத்திலான நேசத்தை வலுப்படுத்துகிறது. அவ்வாறான பண்பை தேசம் முழுவதும் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை நோக்கமாக கொண்டு, தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற 'புதிய கல்விக் கொள்கையை' ஏற்படுத்திக் கொடுத்த நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஈரோடு, 46 புதுவை சேர்ந்த தண்டபாணி (55) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் தண்டபாணி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தண்டபாணி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தண்டபாணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில் ஆசிரியர் தண்டபாணியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது.
    • எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சி குழுவினர் எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம், பாஸ்பேட் கனிமமான ஹைட்ராக்சி அபடைட்டை செயற்கை முறையில் தயாரித்து உள்ளனர்.

    அதாவது முட்டை ஓடுகளில் இருந்து இந்த கனிமத்தை தயாரித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓடுகளை விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கும், பல் மற்றும் எலும்பு உள் வைப்புகளுக்கான பூச்சுகளாகவும், எலும்பு திசு பொறியியல் பயன்பாடுகளுக்கான சாரக் கட்டுகளாகவும் பயன்படுத்தலாம். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

    விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்டுவதற்கு முட்டை ஓடுகளில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் எலும்பு விரிசல்களை குணப்படுத்த ஐந்தில் ஒரு பங்கு செலவு குறையும்.

    இந்த முட்டை ஓடுகளை 100 டிகிரி சென்டிகிரேட்டில் மைக்ரோவேவ் கதிர்வீச்சை பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எலிகள், முயல்கள், பன்றிகள் ஆகியவற்றில் ஹைட்ராக்சி அபடைட் சோதனை செய்யப்பட்டது.

    ஒரு கிலோ முட்டை ஓட்டில் இருந்து ஒரு கிலோ ஹைட்ராக்சி அபடைட்டை தயாரிக்கலாம். முட்டை ஓடுகளில் 94 சதவீத கால்சியம் கார்பனேட் உள்ளது. உலகளவில் முட்டை ஓடுகள் ஆண்டுக்கு 91 மில்லியன் டன்கள் கிடைக்கிறது.

    2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த முட்டை உற்பத்தி 142.77 பில்லியனாக இருந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 18 சதவீதமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது முட்டை ஓடுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ராக்சி அபடைட்டை கொண்டு விரிசல் அடைந்த எலும்புகளை ஒட்ட 450-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

    தற்போதுள்ள எலும்பு ஓட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இதற்கு செலவாகும். தற்போது இறக்குமதி செய்யப்படும் எலும்பு ஓட்டுகள் விலை உயர்ந்தவை ஆகும்.

    எனவே முட்டையில் இருந்து ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்கி அதன் மூலம் எலும்பு விரிசல்களை சரிசெய்யும் இந்த முயற்சிக்கு பெரியார் பல்கலைக்கழகம் காப்புரிமை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும் மத்திய அரசு.
    • தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழகத்தையும், தமிழக மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28 அன்று முற்றுகை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்-முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு.
    • நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு சசிகலா வழங்குகிறார்.

    மதுரை:

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் அவரது தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.

    2016-21 வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வினரின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். இதையடுத்து சசிகலா மற்றும் தினகரனின் ஆதிக்கத்தையும் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.

    இந்தநிலையில் பிரதமர் மோடியின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்த ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். அ.தி.மு.க.வில் இணைந்ததும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் பொறுப்பையும் பெற்றார்.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இரட்டை தலைமையில் 2021 சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்தித்தது.

    ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் வலுப்பெற்றது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நீக்கம் செய்யப்பட்டனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

    தற்போது அ.தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. இதனை சுட்டிக்காட்டும் முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் அவ்வப்போது சில விமர்சனங்களை எடப்பாடிக்கு எதிராக முன்னெடுத்து வைக்கிறார்கள்.

    அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசி வருகின்றனர்.

    இந்தநிலையில் தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்தும் அ.தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் சலசலப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது செங்கோட்டையன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ளது.

    இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க.வினர், அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் ஜெயலலிதா பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக கொண்டாடி வருகிறார்கள்.

    சமீபத்தில் பேசிய சசிகலா, அ.தி.மு.க. என் கைக்கு விரைவில் வரும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம் என்று கர்ஜனை செய்தார்.

    இவரது கருத்து அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல தரப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அ.தி.மு.க.வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒரு தரப்பு தொண்டர்கள் என்று சசிகலாவின் கருத்தை ஆமோதிக்கும் ஒரு கூட்டமும் அ.தி.மு.க.வில் இருக்கத்தான் செய்கிறது.

    அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களை காட்டிலும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் இதே கருத்தை மறைமுகமாக சொல்கிறார்கள்.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி சசிகலா பங்கேற்கும் வகையில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தென் மாவட்டம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திரளாக இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக இந்த பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச் செய்யும் வகையில் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திரை மறைவில் இருந்து செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை திசை திருப்பும் வியூகமாக உசி லம்பட்டி பொதுக்கூட் டத்தை சசிகலா பயன்படுத்துவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரி வித்துள்ளனர்.

    பல்வேறு நல உதவிகளையும் நலிந்த தொண்டர்களுக்கு கூட்டத்தில் சசிகலா வழங்குகிறார். இந்த பொதுக் கூட்டம் அ.தி.மு.க. ஒற்று மைக்கு இது தொடக்க புள்ளியாக அமையும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கி றார்கள்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், சசிகலாவின் நடவடிக்கைகள் அ.தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உறுதியாக இருக்கிறார்கள்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி கூட்டணி அமையும், அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தின் நல்லாட்சி மீண்டும் அமையும்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற சிலர் அவ்வப்போது எழுப்பும் சலசலப்பு மற்றும் பரபரப்பு காரணமாக எடப்பாடியார் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க.விற்கு சிறிதளவு சேதாரமும் ஏற்படாது. எனவே உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள்.

    சசிகலாவின் ஆசைக்கு பெரும் ஏமாற்றமாகவே உசிலம்பட்டி பொதுக்கூட்டம் முடியும் என்று முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

    எப்படி இருந்தாலும் சசிகலாவின் உசிலம்பட்டி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. கட்சி தொடங்கி 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளதால் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் வியூகம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வருவதால் அதுகுறித்தும் விசாரிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு திறமை இல்லாதவர்களை நீக்கம் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் மறுசீரமைப்பு பணியை ஆதவ் அர்ஜூனாவிடம் ஒப்படைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கும் சிக்கல் எனவும் கூறப்படுகிறது. மேலும் புகார்களில் சிக்கியவர்களும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    அதன்படி, திறன்பட செயல்படாத மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தயார் செய்யும் ஆதவ், அதனை விஜயிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதன் அடிப்படையில் விஜய் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

    • உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவோம்.
    • "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!

    சென்னை :

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் 'தமிழ் வெல்லும்' என்று அண்ணாதுரை கையெழுத்திட்டதை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

    மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று,

    நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,

    எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்! என்று தெரிவித்து உள்ளார். 



    • பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
    • விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளாக மஸ்கட் , ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவைகளை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் கடந்த சில நாட்களில் அதிக அளவிலான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வது தாமதமாகி பெரும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் மறுநாள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனால் அடுத்த நாள் செல்ல இருந்த குவைத் விமானத்தில் பயணிகள் அனுப்ப முடியாத காரணத்தினால் அவர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 153 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.

    அந்த விமானம் புறப்பட்டு ரன்வே அருகில் சென்ற போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது.

    தொழில்நுட்பக் கோளாறினை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

    இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு 144 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கூடாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அந்த கோளாறு சரி செய்யப்பட்டு இந்த விமானம் நள்ளிரவு 1.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானங்களில் அதிக அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் காரணத்தினால் பயணிகள் பெறும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர விமான நிறுவனத்தினரும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் இந்த விமானங்களின் தொடர்ச்சியாக வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் போது அவர்களின் பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு விமானத்துறை உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

    உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்படுவது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் பயணிகளூக்கு ஏற்படும் சவுகரியம் சொல்லிமாளாது என்ற நிலை உள்ளது.

    மேலும் விமானம் புறப்பட்டபின் இதுபோன்ற நிலை உண்டானால் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதிகம். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

    • இளம்பெண் தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
    • இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கட்டாரங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 38).

    இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண் தனியார் கால்நடை ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். அவர் தினமும் வேலைக்கு சென்று வரும்போது அவருக்கும், ராஜூவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

    இதனிடையே இளம்பெண் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதனால் ராஜூவுக்கு அந்த பெண்ணை பார்க்க முடியாமல் போய்விட்டது. இதனால் சற்று மன வேதனையில் ராஜூ இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இளம்பெண் வேலையை முடித்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக பள்ளியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு காரில் ராஜூ கூறி வந்துள்ளார். பேசிக்கொண்டே ஊருக்கு போகலாம். ஊரில் கொண்டு விடுகிறேன் என்று ராஜூ அந்த இளம்பெண்ணை அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் அச்சம் அடைந்து காரில் ஏற மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜூ, அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றார். பின்னர் அவரை ஊருக்கு அழைத்து செல்லாமல், காரில் குமரி நோக்கி அழைத்து சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுக்க ராஜூ திட்டமிட்ட நிலையில், அதனை அறிந்து கொண்ட இளம்பெண் பாளை டக்கம்மாள்புரம் அருகே வந்தபோது காரில் இருந்து இறங்கிவிட்டார்.

    பின்னர் அவரிடம் இருந்து தப்பிக்க போலீசுக்கு போன் செய்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகர போலீசார், ராஜூவை பிடித்து தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், காரில் வைத்தே இளம்பெண்ணை ராஜூ பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து பெண்ணை கடத்த முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.

    • தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல.
    • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.

    சென்னை :

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.

    தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.

    தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.

    இனியும் வீழ்த்தும்.

    "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம் என்று தெரிவித்துள்ளார். 



    • மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (19-ந் தேதி) மீன்துறை அலுவலக அனுமதி பெற்று 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,200 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். இதில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த சூசை மற்றும் அவரது விசைப்படகையும், அதில் இருந்த ஜான்முத்து (44), பவுல்ராஜ் (55), லவ்சன் (52) மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்ட்ரின் விசைப்படகு அதிலிருந்த தொன் போஸ்கோ (60), அந்தோணி (45), செல்வராஜ் (62) ஆகிய ஆறு பேரும் நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களை வருகிற மார்ச் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதேபோன்று ராமேசுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த முனியேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜோதி ராஜன் (55), படகு ஓட்டுநர் ராமு (62) அருள்ராஜ் (60) கென்னடி (57) ஆகிய நான்கு பேரும் தலைமன்னார் தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக் மீனவர்களை வரும் மார்ச் 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபற்றி ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் தூக்கு பாலம் திறப்பு விழாவிற்கு வரும்பொழுது மீனவர்களை சந்திக்க வேண்டும். அவர் வருவதற்கு முன்பே இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற 28-ந்தேதி அனைத்து மீனவர்களையும் ஒன்றிணைத்து கடும் போராட்டம் நடத்துவோம்.

    தமிழக முதல்வரை நான்கு முறை சந்தித்தோம். அவர் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இலங்கையில் பிடிபட்ட படகுகளுக்கு ரூ.6 லட்சம், ரூ.5 லட்சம் என்று படகுகளுக்கு ஏற்றவாறு வழங்கினார். தற்பொழுது ரூ.360 கோடி செலவில் தங்கச்சிமடம் பகுதியில் படகுகளை நிறுத்தும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்வதே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×