என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆனைக்குடியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஜான்சி பாப்பா என்பவர் படுகாயம் அடைந்தார்.
    • இன்குபேட்டர் அறையில் சார்ஜ் போடப்பட்ட பேட்டரிகள் வெடித்து சிதறியது தெரிய வந்துள்ளது.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடியில் எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் ஜான்சி பாப்பா என்பவர் படுகாயம் அடைந்தார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோழி முட்டைகள் அடைகாப்பதற்கான இன்குபேட்டர் அறையில் சார்ஜ் போடப்பட்ட பேட்டரிகள் வெடித்து சிதறியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது.
    • மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும்.

    மதுரை:

    உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாய் மொழியை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தேன். தி.மு.க.வினர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்பிக்கப்படுகிறது. நவோதயா பள்ளி வந்தால் தி.மு.க.வின் கல்வி வியாபாரம் கெட்டுப் போய்விடும் என்பதற்காக மும்மொழி கல்விக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்.

    கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைதான் இருக்கிறது. இதில் தி.மு.க.வினர் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மும்மொழி கொள்கை நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை. கம்யூனிஸ்ட் காரர்கள் கேரளாவில் வேண்டும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வேண்டாம் என்கிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். இதன் மூலம் அவர் அரசியல் தளத்தை தாழ்த்தி விட்டார். எடப்பாடி பழனிசாமியை தவறாக பேசுகிறார். கெட் அவுட் மோடி என்று சொல்கிறார். அவருக்கு அண்ணாமலை உரிய பதிலடி கொடுத்திருக்கிறார். உலகத்தில் நம்பர் ஒன் டிரெண்டிங் கெட்டவுட் ஸ்டாலின் தான்.

    மும்மொழி கல்வி கொள்கையில் இந்தி திணிப்பு இருந்தால் உதயநிதி ஸ்டாலின் நிரூபிக்க வேண்டும். இரு மொழி கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் ஆங்கிலக் கல்வி திணிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஆங்கிலத்தை திணிக்க முடியாது கன்னடம் மட்டும்தான்.

    அ.தி.மு.க. மட்டும் எதிர்க்கட்சி அல்ல. பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்டவைகளும் எதிர்க்கட்சிகள் தான். அனைவரும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
    • பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செய்துங்க நல்லூரில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர்வழியாக வந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ்சுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுதொடர்ந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

    ஆனால் அதையும் அரசு பஸ் டிரைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இன்று காலை மீண்டும் நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவை குண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் மற்றொரு பஸ்சில் வந்த டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பஸ்சை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல அறிவுறுத்தினார். அதற்கு பிறகு அந்த பஸ் ஊருக்குள் சென்றது.

    இதைத்தொடர்ந்து வந்த மற்றொரு பஸ்சும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் செல்ல முயன்றது. அந்த பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தால் நானே அபராதம் விதிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனியாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • மீண்டும் ஒரு மொழிப்போரை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.
    • தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை தான் வழங்கி கொண்டிருக்கிறது.

    * தொடக்க கல்வி மாணவர்களுக்கே பொதுத்தேர்வு என்பது பள்ளிக்கு மாணவர்களின் வருகையை குறைக்கும். இடைநிற்றலை அதிகரிக்கும்.

    * தேசிய கல்வி கொள்கையை விட இடைநிற்றலை அதிகரிக்கும்.

    * மீண்டும் ஒரு மொழிப்போரை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.

    * தமிழின் பெருமையை பிரதமர் முன்னெடுத்துள்ளதாக கூறி இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் கூறுகிறார்.

    * இளைய சமுதாயத்திற்காக ஏற்படுத்தியுள்ளீர்கள் என்றால் நீங்கள் விதிகள் போட்டு நிர்பந்திக்கக்கூடாது.

    * மருத்துவம் முதல் இஸ்ரோ வரை இருமொழிக்கொள்கையை பயன்படுத்திய அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    * தூண்டில் போட்டு மீன் சிக்காதா என்ற வகையிலேயே மத்திய அமைச்சரின் கடிதம் உள்ளது.

    * 1968 முதல் அண்ணா உருவாக்கிய இருமொழிக்கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறது.

    * அண்ணா முதல் ஜெயலலிதா வரை எதிர்த்த மும்மொழி கொள்கையை முதல்வரும் எதிர்கிறார்.

    * மூன்றாவது மொழி கற்பது மொழி திணிப்பு, மாநில உரிமையை பறிப்பதாக அமைகிறது.

    * 3-வது மொழியை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.

    * இந்தியை விரும்பி கற்பதை ஒருபோதும் எதிர்க்கவில்லை.

    * இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டுள்ளன.

    * மாணவன் காலில் சங்கிலியை கட்டி ஓட விடும் பணியை மத்திய அரசு செய்கிறது.

    * தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.

    * மத்திய அரசால் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது.

    * மத்திய அரசு நிபந்தனையின்றி நிதியை வழங்க வேண்டும் என்றார். 

    • நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம்.
    • மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது.

    கோவை:

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பாட்டரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உலக தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்பு மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கருணாநிதி செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தார். அதன் பிறகு செம்மொழி மாநாடு கோவையில் தான் நடந்தது. அந்த சிறப்புக்குரியது கோவை.

    நான் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் அன்பழகன், கோவை ராமநாதன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை அப்போது சபாநாயகராக இருந்தவர் பறித்தார். நான் 45 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இப்போது அதே துறைக்கு, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆசியோடு அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன்.

    தமிழ் மொழியை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்கள் சின்னசாமி, நடராஜன், தாளமுத்து போன்றோர். எனவே தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். தாயை போல தாய் மொழியாம் தமிழ் மொழியை மதிக்க வேண்டும்.

    தொடர்ந்து மொழியைப் வளர்க்க, பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். அனைவரும் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இன்று தமிழ் மொழியை பாதுகாக்க வளர்க்க பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் வழியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொல்லியல் ஆராய்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், மேயர் ரங்கநாயகி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் பயின்றுவரும் 39 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19.2.2025 அன்று மூணாறு பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்குளம் வட்டம், திங்கள் நகர் கிராமத்தைச் சேர்ந்த ஆத்திகா (வயது 20), அகஸ்தீஸ்வரம் வட்டம், கனகபுரம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த வேணிகா (20) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவரங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சுதன் நித்யானந்தன் (20) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இந்த விபத்தில், காயம் அடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் செல்வன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (வயது 20) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராக சினிமா இருக்கும்.
    • ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னை:

    இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.

    இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்த தலைப்பிலும் விவாதங்கள் நடைபெற்றது.

    இந்திய பண்பாட்டின் ஒரு அம்பாசிடராக சினிமா இருக்கும். இந்திய சினிமாவுக்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக்கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில்நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும்.

    சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு ஐ.டி.ஐ.களை உருவாக்க வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    பொழுதுபோக்கு வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    சினிமாவுக்கு தற்போது முக்கியமான காலகட்டமாகும். தொடர்ந்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் நான் ஏற்றுக்கொண்டேன். தற்போது புதிய வருவாய் ஈட்டக் கூடியதாக ஓ.டி.டி. தளம் இருக்கிறது.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 'பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம்.

    கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது.

    விழாவில் பேசும்போது கமல்ஹாசன் பல முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார். உங்களுடைய கோரிக்கையை தமிழக முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று, சட்ட ரீதியாக ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பார். அதற்கு நான் உங்களுக்கு துணை நிற்பேன் என்றார்.

    • நான் ஏன் இருகட்சிகளையும் விட்டு வெளியேறினேன்?
    • ஜோக்கர்களின் ஒரு பகுதியாக இருக்க மறுத்துதான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன்.

    சென்னை:

    GET OUT MODI என குறிப்பிட்டு 2019-ம் ஆண்டு குஷ்பு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தமிழ்நாட்டில் தாமரை மலராது எனக்கூறிய குஷ்பு... என சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குற்றத்தில் கூட்டாளிகள் ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள். காங்கிரசும், திமுகவும் ஒரே மொழியை பேசுகின்றன. கண்ணு இல்லாத தம்பிகளா, நான் ஏன் இருகட்சிகளையும் விட்டு வெளியேறினேன்?

    ஜோக்கர்களின் ஒரு பகுதியாக இருக்க மறுத்துதான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன். நான் புத்திசாலியாகவும் சிந்திக்கும் திறன் கொண்டவராகவும் இருப்பதால் காங்கிரசை விட்டு விலகினேன். சிந்திக்கிற மண்டை இல்லைனு அடிக்கடி நிரூபிக்கிறீங்க.

    மூளை சிதைந்த இனமாக நீங்கள் இருப்பதில் தவறில்லை. ஏனெனில் நீங்கள் பின்பற்றுபவர் அப்படிப்பட்டவர் என்றார். 



    • தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
    • 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில்,

    மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்!

    ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்!

    இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.
    • அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை.

    சென்னை:

    மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மொழிப்போருக்காக பலர் உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு, கல்வி என்பது எங்கள் உரிமை. மும்மொழி கொள்கைக்கு தமிழகம் என்றுமே எதிரானது.

    மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம். தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை என்றார். 

    • தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.
    • அவசர பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே புறப்பட்டு வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! வன்னியர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாரசுரம் புறவழிச் சாலையில் நாளை மறுநாள் (23-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சமூகநீதி, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவை குறித்து பேசும் தகுதியும், உரிமையும் நம்மைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. சமூக நீதிக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் கடந்த 45 ஆண்டு காலங்களில் ஏராளமான பணிகளை செய்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது சோழ மண்டக சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டை கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் நடத்துகிறோம். தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இது திருப்புமுனையை ஏற்படுத்தும்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் படைதிரண்டு வரவேண்டும் என்பது தான் எனது விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.

    பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதை விட மிகவும் பாதுகாப்பாக வந்து, பாதுகாப்பாக திரும்பிச் செல்ல வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியம். அவசர பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே புறப்பட்டு வர வேண்டும். மாநாட்டுக்கு வரும் பாட்டாளி சொந்தங்கள் வழியில் அமர்ந்து உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற முழக்கங்களை எழுப்பக்கூடாது. நம்மைச் சீண்டும் செயல்களில் எவரேனும் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்ல வேண்டும். வாகனங்களை அதிவேகமாக இயக்காமல், மிதவேகத்தில் பயணிக்க வேண்டும். உங்களுக்காக நான் கும்பகோணத்தில் காத்திருப்பேன். மாநாடு முடிந்து நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லம் திரும்பும்வரை நான் பதட்டத்துடன் தான் காத்திருப்பேன். உங்களின் வருகையால் மாநாடு சிறக்கும்; மாநாட்டின் நோக்கங்கள் வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
    • இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மும்மொழி கொள்கையால் எந்த பிரயோஜனமும் இல்லை.

    * தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.

    * இருமொழிக் கொள்கை உள்ள தமிழகத்தில் 80% மேற்பட்டோர் உயர்கல்வி செல்கின்றனர். வடமாநிலங்களில் செல்வதில்லை.

    * இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    * அந்தந்த மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாநில மொழியே பயிற்று மொழி என முதலில் அறிவியுங்கள்.

    * முதல்வரை பொருத்தவரை தமிழ், தமிழன் என பேசுவார். ஆனால் செயல்படமாட்டார் என்றார். 

    ×