என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
    • சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!

    நாடு முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.

    26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரெயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளை குறைத்தது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்!

    அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான Unreserved பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.
    • மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நம்மை இணைப்பது தமிழ்மொழி தான். நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்திருப்பதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

    வானுயர்ந்த தமிழ் மொழியை எவராலும் கீழே இறக்கிவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் இன்று நாம் நின்றிருக்கும் இடமே வேறாக இருந்திருக்கும்.

    எந்த மொழி வேண்டும், எந்த மொழி வேண்டாம் என்பது தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.

    இந்தாண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும். அடுத்தாண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும்.

    மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் தங்களை தகுதி உள்ளவர்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • மாணவர்கள் ஆங்கில ‘உலகமயமாக்கல்’ மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்காவிடில் ரூ.5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் கூறிய தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சில ஷரத்துக்கள் உள்ளன என்று பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியும், அதை தமிழகம் எந்த மாற்றமுமின்றி பின்பற்ற வேண்டும் என்று வலுக்கட்டாயமாக வற்புறுத்துவதும், இதுவரை தமிழகத்தில் சிறப்பான சாதனைகளை கல்வித் துறையில் அடையக் காரணமாக பின்பற்றப்பட்டுவரும் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், மும்மொழிக்

    கொள்கையை வற்புறுத்தித் திணிக்க முயலும் மத்திய அரசின் முயற்சியால், தமிழக மக்களிடையே அச்சமும், குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் 'PM SHRI' திட்டத்தை ஏற்காவிட்டால் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழகம் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளதாக வரும் செய்திகள் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மத்திய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    குறிப்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைக்கு, மத்திய அரசு SSA - சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் வழங்கக்கூடிய பங்கு நிதியினை இந்த ஆண்டு திடீரென்று நிறுத்தியுள்ளது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ் நாட்டின் அறிவு சார்ந்த தலைவர்களால், குறிப்பாக பேரறிஞர் அண்ணா போன்றவர்களுடைய வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் மற்றும் சிறப்பு பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான் மத்திய அரசும் அலுவல் மொழிச் சட்டம் 1963-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தது. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் அலுவல் மொழிகள் விதி 1976 வகுக்கப்பட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் தாய்மொழியான தமிழ், தொடர்பு மொழியான ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, அம்மாவின் அரசும், தொடர்ந்து இந்த அரசும் கடைபிடித்து வருகிறது.

    இத்தகைய அறிவுசார்ந்த முடிவினால்தான் தமிழ் நாட்டில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, இன்று இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் பல உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். 'உலகமயமாக்கல்' உள்ள இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆங்கில 'உலகமயமாக்கல்' மொழியில் புலமை பெற்றதால்தான் உலக அளவில் இன்று அவர்கள் கோலோச்சி வருகின்றார்கள்.

    ஆங்கிலம் அல்லாத பிற மாநிலங்களிலும், நாடுகளிலும்கூட அந்தந்த மொழிகளை தேவைக்கேற்ப கற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.

    எனவே தமிழ் நாட்டிற்கு, இந்த காலக்கட்டத்தில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்ற ஒன்றாகும். இந்த நிலைப்பாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது.

    மத்திய அரசு இந்த உண்மை நிலையை உணர்ந்து தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும் என்று

    வலியுறுத்துகிறேன். அதேபோல், மத்திய அரசின் நிதியுதவியோடு, மாநில அரசின் நிதிப் பங்குடன் நிறைவேற்றும் திட்டங்கள் பல உள்ளன. இவையெல்லாம் அந்தந்த துறைகளில் உள்ள குறியீடுகளை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவற்றில் மாநில அரசின் பங்கும் உள்ளது. கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல குறியீடுகளை தமிழ் நாடு தற்போதுள்ள திட்ட முறையிலேயே அடைந்துள்ளது.

    இந்நிலையில், அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கை, தமிழ் நாட்டில் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை, இதற்கு முன்பு ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும், தற்போதைய அரசும் சுட்டிக்காட்டி உள்ளன.

    இத்தகைய ஆட்சேபனைக்குரிய ஷரத்துக்கள் பற்றி மத்திய அரசு, மாநில அரசுடன் உடனடியாக விவாதித்து ஒரு இணக்கமான முடிவை எடுக்க வேண்டுமே ஒழிய, இதுபோன்ற முக்கியமான துறைகளில் செயல்படுத்தப்படும் `சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம்' போன்றவற்றுக்கான நிதியை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

    இதனால், தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த அச்சமும், மத்திய அரசின் மீது வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு இது போன்ற தன்னிச்சையான போக்கை, மக்கள் நலன் கருதி

    மாற்றிக்கொண்டு, தமிழ் நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷரத்துக்கள் பற்றி விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டு ஒரு சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    அதேசமயம், கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் SSA போன்ற திட்டங்களின் நிதியை எந்தவிதமான நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    விடியா திமுக அரசு பொதுவெளியில் இதுபோன்ற பயனற்ற விவாதங்கள் செய்வதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக மத்திய அரசை வலியுறுத்தி கலந்தாலோசனை செய்து, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்குத்தான் தமிழ் நாட்டு மக்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்பி உள்ளார்கள் என்பதையும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

    கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று பேசினார்.

    இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் முத்தையா கூறியதாவது:-

    சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக 'தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு 'தமிழ்த் தெம்பு திருவிழா' மிகவும் பிரம்மாண்டமான முறையில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெற இருக்கிறது.

    இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன. 

    இதில் தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, தமிழ் வளர்த்த அடியார்களின் பக்தி, காலத்தால் அழியாத தமிழரின் கட்டிடக்கலையின் நுட்பம், இயற்கையோடு இயைந்து வளர்ந்த சித்த மருத்துவம், அகிலமே பார்த்து வியக்கும் ஆலயங்கள் என தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையிலான 24 கண்காட்சி அரங்குகளும் இடம்பெற உள்ளன.

    நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது. இதனுடன் தமிழகத்திலேயே முதன்முறையாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி முன்பு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி வரை 'நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்' நடைபெற உள்ளது.

    நம் தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் என்பன எளிய மக்களுடைய உணர்ச்சிகளின் வடிகாலாக, வாழ்வியல் வரலாற்று பதிவுகளாக, உடல் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்து வந்துள்ளன.

    இன்றைய காலத்தில் இந்த கலைகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளது, ஆகையால் இந்த கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    குறிப்பாக இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும்.

    அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.

    இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான ஒருநாள் செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

    தமிழர்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் உத்திகள் மட்டுமல்ல ஆடுகளத்தில் ஆடும் விளையாட்டுகளும் வீரம் செறிந்தது தான், அந்த வகையில் கொங்குநாட்டு வீர விளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
    • கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு சால்வை போடுவதற்காக நின்ற நிர்வாகியிடம் இருந்து சால்வையை கே.பி.ராமலிங்கம் பறித்தபோது அவர் கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அடாவடியில் ஈடுபட்டு உள்ளார். அதுதொடர்பான காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

    மேடையில் யாரும் நிற்க வேண்டாம் என கே.பி. ராமலிங்கம் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக கே.பி.ராமலிங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பா.ஜ.க. நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.
    • தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.

    மாணவர்களின் கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல் PM SHRI திட்டத்தில் தமிழகம் இணைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாதவது:-

    மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

    அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.

    மத்திய அரசு இந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி.

    ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

    மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.

    எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.
    • தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வாங்கி பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினவ் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த தனிப்படையினர் தீவிரமாக போதை கும்பலை கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் கிச்சிபாளையம் கஸ்தூரிபாய் தெரு மற்றும் குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படையினர் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த சுதர்சன் (25), தினேஷ்குமார் (24), கிஷோர் (22), சரவணன் (51), பிரகதீஸ்வரன் (50), அக்பர் (56) உட்பட 13 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

    மேலும் அதில் தொடர்புடைய இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து 13 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 போதை மாத்திரைகள் 50 சிரஞ்ச், 2 மோட்டார் சைக்கிள், 11,000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊசிகளையும் கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
    • குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் தனது குடும்பத்துடன் சையத்பாஷா மலைக்கு சென்றனர்.

    அப்போது அங்கு போதையில் வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக தெரிகிறது. மேலும், அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் அளிக்காத நிலையில் போலீசாரே தாமாக வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் தனிப்படை அமைத்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்த நிலையில் 2 பேரும் கிருஷ்ணகிரி பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

    அப்போது குற்றவாளிகள் 2 பேரும் போலீசார் கத்தியால் தாக்கினர். இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு உள்ளது.

    காயமடைந்த 2 குற்றவாளிளையும், அவர்கள் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் என 4 பேரையும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். குற்றவாளிகளை 2 பேரையும் ஆஸ்பத்திரியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர்.
    • அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.

    சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் வசித்து வருபவர் அப்துல் காதர். தொழில் அதிபரான இவர் சென்னை மண்ணடி பகுதியில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதற்காக 5 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒரு காரில் இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் மத்திய பாதுகாப்பு படையினரும் வந்தனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேரும் அப்துல் காதர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். எனவே அப்துல்காதர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என்பது அதிகாரிகள் சோதனையில் தெரியவரும்.

    • ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது.
    • தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டி உள்ளதால் கூட்டத்திலேயே ஏற்கலாம் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறினார்.

    அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் வளாக கூட்ட அரங்கில் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து பின் உறுதிமொழியை ஏற்றனர்.

    அனைவரும் உறுதி மொழி ஏற்று அமர்ந்த பிறகு விவசாயி ஒருவர் எழுந்து "தமிழை வளர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. உறுதி மொழி ஏற்கிறோம், ஆனால் சென்னையில் தலைமை செயலகம் சென்றால் அங்கு உள்ள அமைச்சர்கள் பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது என கூறினார்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய் மொழி, ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பம் இடுகிறோம். வெளி மாநிலத்திலிருந்து வந்தாலும் அவர்களும் தமிழில் தான் கையெழுத்து இடுவார்கள். தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    அதனையும் விடாமல் விவசாயி ஆனால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது என கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

    • பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது.
    • சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை.

    தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் புதிய கல்வி கொள்கை குறித்து விமர்சித்தார்.

    இதுகுறித்து அப்பாடு கூறியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கல்வி கொள்கையை அரசியலாக்கவில்லை.

    அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என கொண்டு வந்த திட்டத்திற்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு அரசியல் செய்கிறது.

    2022ம் ஆண்டு புதிய கல்வி கொள்கையை ஏற்ற பீகாரில் தற்போதைய கணக்கெடுப்பு படி பள்ளி வருகை 51 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.

    பீகாரில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதால் பள்ளிக்கு மாணவர்கள் வருகை 20 சதவீதம் குறைந்துள்ளது.

    சாமானிய ஏழை பிள்ளைகளை படிக்க விடாமல் கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம் தான் புதிய கல்வி கொள்கை.

    இந்தியை மட்டும் படித்து தமிழை அழிக்க வேண்டும் என்பதற்காக வே மூன்றாவது மொழி படிக்க கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
    • 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் நியமிப்பதற்காக 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்களாகி விட்ட நிலையில், அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படாததைக் கண்டித்து தேர்ந்தெ டுக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் அவர்களின் குடும்பத்துடன் சென்னையில் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    இப்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்கப்படவுள்ளது என்றெல்லாம் வதந்திகள் பரவி வருகின்றன.

    எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×