என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார்.
- ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
நெய்வேலி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெய்வேலி நகர பகுதியில் 2 கி.மீ., வரை நடந்து சென்று பொதுமக்களுடன் கைகுலுக்கினார். குழந்தைகள், மாணவ, மாணவிகள் என பலரும் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டாடினர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை கடலூர் வந்தார். கடலூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் நெய்வேலியில் நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியில் இருந்து விலகி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து நெய்வேலி என்.எல்.சி. விருந்தினர் இல்லத்தில் தங்கிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று 9 மணி அளவில் வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்பொழுது நேரு சிலை அருகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்த மனுக்களை முதலமைச்சர் பெற்றுக் கொண்டார். விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு நேரு சிலை, பெரியார் சதுக்கம், எம்.ஜி.ஆர். சிலை, மத்திய பஸ் நிலையம், 8 ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையில் பதாகைகள் ஏந்தி பலூன்கள் வைத்துக்கொண்டு வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சாலையில் செல்லும்போது பொதுமக்களை பார்த்ததும் உடனடியாக காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது வழி நெடுகிலும் நின்றிருந்த பெண்கள், குழந்தைகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். சாலையில் 2 1/2 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதலமைச்சருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். அவர்களை பார்த்து முதல்வர் உற்சாகமாக கையசைத்தார்.
இதனால் தொண்டர்கள் மக்களின் முதல்வர் என ஆரவாரம் எழுப்பினர். முதல்வர் பாதுகாப்பு பணிக்காசு போலீசார் கயிறு கட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். நடந்தே சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி முழுவதும் பொதுமக்கள் திரண்டு நின்று அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
- ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.
ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.
இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ‘உறவுகள் சங்கமம்’ எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
- நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் 3-ந்தேதி தூத்துக்குடி மணப்பாடில் நடைபெறும் 'உறவுகள் சங்கமம்' எனும் நிகழ்வில் சமூக செயற்பட்டாளராக காளியம்மாள் பங்கேற்கிறார்.
உறவுகள் சங்கமத்தில் பங்குபெறும் அரசியல் பிரபலங்களின் பெயர், கட்சியின் பெயர், பொறுப்புகளுடன் நோட்டீசில் இடம்பெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் காளியம்மாள் தன்னை சமூக செயற்பாட்டாளர் என அடையாளப்படுத்தியுள்ளதால் அவர் நாம் தமிழர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியில் தனக்கான தனி செல்வாக்கை உருவாக்கும் முயற்சிகளை பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மேற்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சீமான், ஒட்டிக்கொண்டிருக்கும் பிசிறு என்று காளியம்மாளை சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ வெளியானது முதல் அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகளில் சீமானுடன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனியாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
- மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நடந்த தூய்மைப் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் வாழும் மக்கள் சனி, ஞாயிறுகளில் தங்கள் குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்கக்கூடிய நல்ல இடமாக மெரினா கடற்கரையை இயற்கை நமக்கு அமைத்து கொடுத்து இருக்கிறது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
* சென்னை மாநகராட்சி சார்பாக இங்கு தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் இங்கு வரும்போது குப்பைகள், பிளாஸ்டிக் என தனித்தனியாக போடுவதற்கு குப்பை கூடைகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற குப்பைகளை போட என்று தனியாக குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளது.
* மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய பொதுமக்களும் மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை தூய்மையாக வைக்க வேண்டும்.
* மெரினா கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் (Blue Flag) பெற தமிழக அரசால் முன்னெடுப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
* ப்ளூ ஃபிளாக் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அதற்கு ஏற்றாற்போல தமிழக அரசால் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர்.
- உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசின் 'பிரதமர் மோடியின் கிஷான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
19-வது தவணையான இந்த உதவித் தொகையை நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பெற உள்ளனர். முன்னதாக இந்த உதவித்தொகையை வழக்கமாகப் பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ, தூரமுள்ள அணைக்கு செல்வதற்கு ஜலரத்தினா, கண்ணகி ஆகிய படகுகள் உள்ளன. இப்படகுகள் 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் இரு படகுகள் வாங்கப்பட்டன. அதில் ஒரு படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது.

தேக்கடியில் அனுமதி கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகு.
அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டது. ஆனால் இப்படகை கூடுதல் குதிரை திறன் கொண்டதாக உள்ளது எனக்கூறி இயக்க கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.
தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு 9 படகுகளும், கேரள சுற்றுலாத் துறைக்கு 6 படகுகளும், கேரள காவல்துறைக்கு 2 படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு 1 படகும் இயக்கப்படுகிறது. இதுதவிர விரைவுப்படகும் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க நேற்று கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தொடங்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக நீர்வளத்துறையின் படகுகள் ஆண்டு கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கேரளாவில் புதிய படகை தமிழக அனுமதி இல்லாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. 130 குதிரை திறன் கொண்ட படகிற்கு அனுமதி தராத நிலையில் கேரள போலீசாரின் 150 குதிரை திறன் கொண்ட படகை இயக்குகின்றனர். கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
மேலும் கம்பத்தில் இருந்து குமுளியை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.
- அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
- இன்றும், நாளையும் அதிசய நிகழ்வை காண முடியும்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மாலை வேளையில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் சூரியஒளி ராஜகோபுரம் வழியாக வந்து முன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி சிலையின் இரு கொம்புகளுக்கும் நடுவே ஊடுருவி கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் நெற்றியில் முதல் நாள் ஒளிபடும். 2-ம் நாள் மார்பிலும், 3-ம் நாள் பாதத்திலும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
இந்த அதிசய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்றும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். மாலை 6 மணி அளவில் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி நந்தி சிலையின் கொம்புகளுக்கு நடுவே ஊடுருவி கோவிலின் நடுவே உள்ள உண்டியல் மீது பட்டு மறைந்தது, பக்தர்கள் அதிக அளவில் கூடி கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதால் ஒளி உள்ளே செல்ல முடியாமல் மறைந்தது. இதனால் சிவலிங்கத்தின் மீது ஒளி விழும் அதிசய நிகழ்வை காண காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து இன்றும், நாளையும் இந்த அதிசய நிகழ்வை காண முடியும்.
- கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.
- வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை:
தமிழ்நாட்டில் 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று இந்தி மொழியை அழித்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்தநிலையில் இந்திமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலம் போட வேண்டும் என கூறப்பட்டது.
கோவை மாநகர், மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் கோலமிட்டனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.
அதில் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். இந்தி மொழியை திணிக்காதே. தமிழ் வாழ்க என்று எழுதி கோலம் போட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் தி.மு.க. பகுதி செயலாளர் நாகராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, வட்டச் செயலாளர் ஜெபமாலை தாஸ், சந்திரசேகர் மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை 4 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.360 குறைந்து சவரன் ரூ.64,200-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,045-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
- பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சமீபத்தில், தமிழக அரசு இரு முக்கிய மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய குற்றவியல் மாநாடு நடந்தது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
2020-ம் ஆண்டில் 3.71 லட்சம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2021-ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 4.28 லட்சமாகவும், 2022-ல் 4.45 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 2023, 2024-ம் ஆண்டுக்கான இந்த புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கான காரணம் அவர்களுக்கு தெரியும். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது.
தமிழக அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருகிறது. பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சமீபத்தில், தமிழக அரசு இரு முக்கிய மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு இந்த மாநாட்டில் கொண்டுவரப்படும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
- இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கமாக இருக்கிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதி உள்ள 3 பக்க கடிதத்தில் விளக்கமாக சொல்லி இருக்கிறார்கள். நாம் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் எந்த அளவுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
உலகத்திலேயே தொன்மையான மொழி, பழமையான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி உலக நாடுகளிடம் போய் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு நாட்டிலும் திருவள்ளுவருக்கு கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று சொல்லி இருந்தோம். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே 5 இடங்களில் ஆரம்பித்து உள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி சிங்கப்பூரில் கலாச்சார மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,
இதற்கு முழுமுதற்காரணம் ஸ்டாலின் அவர்களும், உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தான்.
தமிழக மக்கள், தமிழக மாணவர்கள் குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயல்களை செய்துகொண்டிருப்பது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தான்.
துணை முதலமைச்சரின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள். முதலமைச்சரின் பேரன்கள் எங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 3-வதாக ஒரு மொழி இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 3-வதாக ஒரு மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அப்படி இருக்கும்போது அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது.
உன்னை திட்டினால் கூட தெரியாது. சிரித்துக்கொண்டே திட்டுவான். ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அந்த மொழி மீது பற்றுதல் வரும். எப்படி தமிழ் மொழியை அதிகம் பேர் விரும்புகிறார்களோ அதே போல் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
ஏன் சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளியில் கொடுக்கிறீர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்.
அதனால் 3 மொழி கல்வி என்பது வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றோர்கள் வரவேற்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோலம்போட்டு 3-வது மொழி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். புதிய தேசிய கல்விக்கொள்கை வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கல்வியில் விளையாடாதீர்கள். கல்வியில் அரசியல் செய்யாதீர்கள். இளைஞர்களின் முன்னேற்றத்தில் அரசியல் செய்வதை தி.மு.க.வும், உதயநிதி ஸ்டாலினும் நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
- பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது.
- கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் 39 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளது.
சென்னை:
சமூக சேவைக்கு முகங்கள் தேவையில்லை, ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்கு முகங்களுடன் கொடியும், பெயரும் தேவை. கட்சியின் பெயரும், சின்னமும், கொடியும் தான் அரசியல்வாதிகளுக்கு அடையாளம். தங்கள் மனம் கவர்ந்த தலைவர்களுக்கு தங்கள் ஒற்றை விரலால் மக்கள் மகுடம் சூடும் நாளே தேர்தல்.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 6 தேசிய கட்சிகள், 58 மாநில கட்சிகள், 2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகள் இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 2024 மார்ச் தரவுகளின்படி இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் 39 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளது. தமிழகத்தில் 3 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், நமது உரிமை காக்கும் கட்சி, மக்கள் முரசு கட்சி ஆகிய 3 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நமது உரிமை காக்கும் கட்சி தியாகராயநகர் முகவரியிலும், மக்கள் முரசு கட்சி கொடுங்கையூர் பகுதியில் இருந்தும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2025 ஜனவரியில் 21 கட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் என்ற பிரிவில் அந்த கட்சிகள் இடம் பெற்றுள்ளது.
2,763 அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளில் 50 சதவீத கட்சிகள் தேர்தலை சந்திக்காமல் லட்டர் பேடு கட்சிகளாக வலம் வருவது புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. 2022-ம் ஆண்டு 86 கட்சிகளை நீக்கியும், 253 கட்சிகள் செயல்படாதவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், 5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வலிமையான ஜனநாயக திருவிழாவில் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது பெரும் கனவாகவே இருந்து வருகிறது. அந்த கனவை நோக்கி ஜனநாயக அரசியல் தற்போது நகர தொடங்கியிருக்கிறது. 2026-ம் ஆண்டு ஜனநாயக திருவிழாவான சட்டசபை தேர்தலை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் சந்திக்க இருக்கிறது.






