என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
    • தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

    இந்நிலையில், "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.

    மேலும் அவர், "ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசியவர், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்.

    ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும்.

    எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என்றார்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு ஏராளமான பொருட்கள், கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது திரேஸ்புரம் அண்ணா காலனி அருகே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் மூட்டைகளை படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் தப்பி விடாத வகையில் அனைவரையும் பிடித்தனர். பின்னர் படகுகளில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில் 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட படகுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 20) அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனீஸ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று நள்ளிரவில் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதி கடற்கரையில் 4 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் (80 ஆயிரம் எண்ணிக்கை ) கிடந்தது தெரியவந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அதனை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.20 லட்சமாகும். 

    • தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது.
    • இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். நேற்று மாலை கடலூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் நெய்வேலியில் தங்கி ஓய்வு எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வேப்பூர் அருகே நடந்த பெற்றோர்களை கொண்டாடுவோம் மாநாட்டில் கலந்து கொண்டார்.

     

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி, சின்னஞ்சிறு கைகளை நம்பி, ஒரு சரித்திரம் இருக்குது தம்பி. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற கவிஞர் வாலியின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது தான் இந்த மாநாடு. இந்த பெற்றோர், ஆசிரியர் கழக மாநாடு.

    முதலில் நான் இந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், நான் நெய்வேலியில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டேன். நியாயமாக பார்த்தால் 1 மணி நேரத்துக்குள் வந்து சேர்ந்திருக்க முடியும். ஆனால் வழியெங்கும் மக்கள் கடல். அதுதான் காரணம்.

    ஆசிரியர்கள் இங்கு இருக்கிறீர்கள். பள்ளி மாணவர்கள் போல் காரணம் சொல்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். காலை 8 மணிக்கு கிளம்பினேன். வருகிற வழி முழுவதும் மக்கள் சந்திப்பு. இதுதான் உண்மையான காரணம்.

    தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோரை கொண்டாடுவோம் என்ற மாநாடு நடைபெறுகிறது.

    வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவ கண்மணிகளை வார்ப்பித்தும் வளர்த்தெடுத்தும் வருகிற பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

    அன்னை, தந்தை, ஆசிரியர் கூடியிருக்கும் மாநாடு இது. நீங்கள் மொத்தமாக கூடியிருப்பது இதுவரை தமிழ்நாடு பார்க்காத காட்சி. ஒட்டுமொத்த நாடும் பார்த்து அதிசயிக்கிற காட்சி. இதுதான் தமிழ்நாடு. இதுதான் நமது மாநில கல்வித் திட்டத்தின் சிறப்பு. தமிழ் நாடு அரசு செய்வது எல்லாமே சாதனைகள்தான்.

    அதில் கல்வித்துறையில் உலக தரத்திலான சாதனைகளை செய்து கொண்டி ருக்கிறோம். அந்த வரிசையில் இதுவும் சாதனை மாநாடாக அமைந்திருக்கிறது. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என 3 தரப்புக்களுக்குமான கருத்துக்களை வழங்குகிற மாநாடு இது.

    இதில் நான் ஆசிரியருமில்லை, மாணவருமில்லை, பெற்றோரே நான் உங்களில் ஒருவன். உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை அறிந்தவன். அதற்கேற்ப கடமைகளை செய்கிறவன்.

    திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் பள்ளிகளை உருவாக்கினோம், மாணவர்களை சேர்த்தோம், படிக்க வைத்தோம். மதிப்பெண் வாங்க வைத்தோம், வெளியில் அனுப்பினோம். இத்தோடு பள்ளிக் கல்வித்துறையின் கடமை முடிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தமிழ்நாட்டின் சொத்து என்கிற அந்த நினைப்புடன் அவர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம்.

    பெற்றோருக்கு பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே அளவு அக்கறை இந்த அரசுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

    தமிழக அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் மூலமாக பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது. இதை சொல்வது ஒன்றிய அரசின் அறிக்கைகள். ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் கல்வி தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள்.

    ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ் நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். ஒன்றிய அரசு 2151 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்து உள்ளது. இது 43 லட்சம் பள்ளி குழந்தைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டிய தொகை.

    தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கிற கொள்கை.

    தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. காரணம் எந்த மொழியை திணிக்க நினைத்தாலும் அந்த திணிப்பை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.

    இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்வி கொள்கையை எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்து விரட்டுகிற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகிற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தி இருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம். ஒன்றிய அரசின் கொள்கையால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

    ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார். எல்லா மாநிலங்களும் மும்மொழிக்கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்.

    அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு. எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிக்கிறவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம். தமிழ் மொழியை காக்கும் அரணாக தி.மு.க. திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்பிற்கு சென்று விட்டது. இந்தி பெல்ட் என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்து விட்டன. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போது தான் விழிப்புணர்வு அடைந்து வருகிறது. இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் தற்போது விழிப்புணர்வு அடைய தமிழ்நாடு தான் காரணம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    • குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    • கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தப்பி ஓடியவர்களில் ஒருவரை நேற்று கிருஷ்ணகிரி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் ஓடிய போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. இதில் சுட்டு பிடிப்பட்ட வாலிபரின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரித்ததில், அதில் மேலும் சில ஆபாச வீடியோக்கள் இருந்தனர். இதில் பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோக்கள் இருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ந்தேதி மதியம் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் வந்தனர்.

    அவர்கள் மலையின் உச்சிக்கு சென்றபோது அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும் கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு உள்ளிட்டவற்றை பறித்தனர்.

    பின்னர் காம வெறி தலைக்கேறிய அந்த 4 பேரில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்த நேரம் உடன் இருந்த 2 பேர் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் பெண்ணுடன் வந்த நபரின் செல்போனை பிடுங்கி அவர் போனில் இருந்த ஜி.பே வாயிலாக ரூ.7 ஆயிரம் பறித்துக் கொண்டனர்.

    இந்த நிலையில் மலையில் இருந்து கீழே வந்து அழுத அந்த பெண்ணை அந்த பகுதியில் இருந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். அப்போது அந்த பெண் நடந்தவற்றை கூறி விட்டு போலீசிடம் புகார் அளிக்காமல் நேராக ஊருக்கு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

    போலீசாரின் விசாரணையில் பாதிக்கப்பட்டவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் என தெரியவர அங்கு சென்று அவரிடம் புகார் விவரத்தை பெற்றுக் கொண்டனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணை மிரட்டி பணம், நகை வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) மற்றும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிய வந்தது.

    இதில் கலையரசன், அபிஷேக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். அந்த நேரம் போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். தொடர்ந்து சுரேசும், நாராயணனும் ஓட முயற்சி செய்யவே, சுரேசின் வலது முட்டில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில் சுரேஷ் சுருண்டு விழுந்தார். போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே போல துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    துப்பாக்கி சூடு நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதே போல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசன், அபிஷேக், சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், நாராயணன் ஆகிய 4 பேரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

    அப்போது கைதான சுரேசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் பார்த்த போது அதிர்ந்து போனார்கள்.

    அதில் ஏராளமான பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தனியாக வந்த பல இளம்பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்துள்ளான். இவ்வாறு எத்தனை இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போலீசார் தீவரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி சுரேஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான நாராயணன் காலில் மாவு கட்டு போட்ட பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரும் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மலை பகுதியில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வந்திருந்தனர். அவர்களில் அந்த பெண்ணை 4 பேர் மிரட்டி நகையை பறித்தனர். இதில் 2 பேர் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றவாளிகள் 4 பேரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

    மற்ற 2 குற்றவாளிகளை தேடி வந்தோம். அவர்கள் பொன்மலை குட்டை பெருமாள் கோவில் பின்புறமாக இருப்பதாக தகவல் வந்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் சென்றனர்.

    அந்த நேரம் குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் 2 போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர்.

    அந்த நேரம் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டு பிடித்தனர். மற்றொரு நபர் நாராயணன் என்பவர் தப்ப முயன்ற போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது. கைதான சுரேஷ் மீது 2 அடிதடி வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிருஷ்ணகிரியில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறி செய்த வழக்கில், தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.
    • அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது.

    சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது சேவையை தொடங்கியது.வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கப்பல் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் தொடங்க இருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    பின்னர், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கியது. காலை தொடங்கிய கப்பல் சேவையை மும்மதத்தை சேர்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த கப்பலில் 83 பயணிகள் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். 

    • பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 4 தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 20 கிராமமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    • மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல.
    • உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

    எது உண்மையான ஆன்மிகம் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. சடங்குகளும் சம்பிரதாயங்களும் விரதங்களும் நோன்புகளும் முக்கியம்தான். மனத்தைச் செம்மைப்படுத்த அவையெல்லாம் உதவக்கூடும்தான்.

    என்றாலும் அவற்றை விட முக்கியமானது ஒன்று உண்டு. அதுதான் மனிதாபிமானம். சக மனிதர்மேல் அன்பு கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதே உண்மையான ஆன்மிகம்.

    இந்த உண்மையை உயர்நிலை ஆன்மிகவாதிகளின் வாழ்வில் இடம் பெற்றிருக்கும் சம்பவங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    மகாசுவாமிகள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. பரமாச்சாரியாரின் தரிசனத்திற்காக நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கோ தொலைதூரத்திலிருந்து காஞ்சிபுரம் வந்திருந்தார்கள்.

    ஆனால் என்ன சிக்கல் என்றால், அவர்கள் பரமாச்சாரியாரை தரிசிக்க வந்த அந்த நாள், பரமாச்சாரியாரின் மவுன விரத நாள். பொதுவாக தாம் மவுன விரதம் இருக்கும் நாளில் அவர் கண்டிப்பாக யாருடனும் எதுவும் பேச மாட்டார்.

    எனினும் மாணவர்கள் தரிசனத்திற்கு வந்திருக்கும் விவரத்தை அவருக்குத் தெரிவிக்காமல் இருப்பது சரியல்லவே? அவ்விவரம் அவரிடம் சொல்லப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

    அடுத்த கணம் தயக்கமே இல்லாமல், `அழைத்து வாருங்கள் அத்தனை மாணவர்களையும்!` எனக் கணீரென்று குரல் கொடுத்தார் பரமாச்சாரியார்!

    தம்மை தரிசிக்க வந்த மாணவர்களிடம் அதிக நேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியே அன்பாகப் பேசி அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்பிவைத்தார்.

    மடத்திலிருந்த சிப்பந்திகள் திகைத்தார்கள். யாருக்காகவும் துறக்காத மவுனத்தை அன்று அவர் அந்தக் குறிப்பிட்ட மாணவர்களுக்காகத் துறந்தது ஏன் எனக் கேட்டார்கள். பரமாச்சாரியார் கனிவோடு பதில் சொன்னார்:

    `வந்திருந்த மாணவர்கள் அனைவரும் பார்வையற்றோர் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள். அவர்களுக்கு தரிசனம் என்பது கண்ணால் பார்ப்பதல்ல. காதால் கேட்பது. அவர்களிடம் பேசி அவர்களை சந்தோஷப்படுத்துவதை விட என் மவுன விரதம் முக்கியமல்ல!`

    அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தைப் பரமாச்சாரியார் அன்று அவ்விதம் தெரிவித்தார். மனிதர்களுக்காகத் தான் ஆன்மிகமே தவிர ஆன்மிகத்திற்காக மனிதர்கள் அல்ல, மனிதநேயமே மிக உயர்ந்த ஆன்மிக நெறி என்பதைத் தம் நடவடிக்கையால் மிக அழகாக போதித்துவிட்டார் மகாசுவாமிகள்!

     

    ராமலிங்க வள்ளலார் மாபெரும் சித்தர் ஆயிற்றே? பற்பல அற்புதங்களை நிகழ்த்திய மெய்ஞ்ஞானி அல்லவா அவர்?

    அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஓர் அன்பர் குறுக்கிட்டு அவரிடம் ஓர் இரும்புக் கம்பியைக் கொடுத்தார். அதைத் தங்கமாக்கித் தருமாறு வேண்டினார்.

    வள்ளலார் அவரைப் பார்த்துக் கலகலவென்று நகைத்தார். அவர் இரும்புக் கம்பியின் ஒரு முனையைப் பிடிக்க வள்ளலார் இன்னொரு முனையைப் பிடித்தார்.

    அடுத்த கணம் நடந்தது அந்த அற்புதம்! வள்ளலார் தொட்ட இடத்திலிருந்து பாதிக் கம்பி உடனே தங்கமாக மாறி ஒளி வீசத் தொடங்கியது. ஆச்சரியத்தில் ஆழ்ந்தார் அந்த அன்பர்.

    பின் அந்த இரும்புக் கம்பியை மாற்றிப் பிடித்தார் வள்ளலார். என்ன வியப்பு! உடன் மீதிப் பகுதியும் பொன்னாக மாறியது. இப்போது முழு இரும்புக் கம்பியுமே தங்கக் கம்பியாய் மாறியிருந்தது.

    ஆனால் அதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சி தான் வந்தவரை திகைப்பில் ஆழ்த்தியது. இந்தத் தங்கத்தால் என்ன பயன், இந்தத் தங்கம் இறைநிலையை அடைய உதவுமா என்று சொல்லி, தங்கக் கம்பியை அருகேயிருந்த கிணற்றில் வீசிவிட்டுச் சலனமே இல்லாமல் தொடர்ந்து நடந்தார் வள்ளல் பெருமான்.

    காமினி - காஞ்சனம் (காமம் - தங்கம்) இரண்டு ஆசைகளையும் துறந்துவிடுங்கள் எனத் தன் பேச்சுக்களில் தொடர்ந்து முழங்கி வந்தார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். பணத்தை ஒரு கையிலும் மண்ணை ஒரு கையிலும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று மறுபடி மறுபடி சொல்லி இரண்டையுமே கங்கையில் தூக்கிப் போட்டவர் அல்லவா பொருட்பற்று அறவே இல்லாதிருந்த பரமஹம்சர்!

    ராமலிங்க வள்ளலாரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் போதித்த தங்கமான கருத்தை நாம் பின்பற்றுகிறோமா? தங்கத்தின் மேலும் பொருளின் மேலும் உள்ள ஆசையைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு அத்தகைய ஆசைகளிலிருந்து மீள்வதுதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழி என்பதைப் புரிந்துகொள்கிறோமா?

    சுமங்கலிப் பிரார்த்தனை என்றொரு சடங்கு பல குடும்பங்களில் நடக்கிறது. அப்போது அத்தைக்கும் நாத்தனாருக்கும் இவர்களைப் போன்ற உறவினர்களுக்கும் சேலை வாங்கித் தரும் சம்பிரதாயம் உள்ளது. அந்த வழக்கம் நல்லதுதான். அது குடும்பத்தின் நல்லுறவுக்குப் பயன்படும். எனவே அதைச் செய்ய வேண்டியதுதான். ஆனால் அன்று உண்மையிலேயே சேலை தேவைப்படுகிற ஓர் ஏழைப் பெண்ணுக்கும் சேலை வாங்கித் தருவோம் என்ற எண்ணம் ஏன் நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை?

    தேவைப்படுகிறவர்களுக்குச் சேலை கொடுங்கள் என்பதுதானே திரெளபதிக்குச் சேலை கொடுத்த கண்ணன் போதிக்கும் உபதேசம்?

    மானங்காக்கப் புடவை கொடுத்த கடவுளை வழிபடும் தேசத்தில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.

    வழிபடுவது ஒன்று, வாழ்க்கை நெறி இன்னொன்றா? அப்படியானால் அந்த வழிபாட்டின் பயன்தான் என்ன?

    மதுரையில் ஓர் ஏழைத் தமிழ்ப் பெண் கிழிந்த ஒற்றைச் சேலையோடு உடலை மறைக்கப்பட்ட சிரமத்தைப் பார்த்தார் மகாத்மா காந்தி. எல்லா இந்தியர்களுக்கும் ஆடை கிடைக்கும்வரை நான் மேலாடை தரிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார்.

    அவருடையது ஆன்மிகமா? இல்லை நம்முடையது ஆன்மிகமா என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

    ராவண வதம் முடிந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்குப் போகும் தருணத்தில், பரத்வாஜ மகரிஷியின் கோரிக்கையை ஏற்று அவர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தங்கினான் ராமபிரான்.

    ராமனுக்கும் ராமனோடு வந்துள்ள அத்தனை பேருக்கும் விருந்தளிப்பதாகச் சொன்னார் பரத்வாஜர். அவர் குரலில் சற்றே கர்வத்தின் சாயல்!

    அதை உணர்ந்த ராமன் அவர்மேல் பரிவு கொண்டான். செருக்கில்லாது வாழ்வதே உண்மையான ஆன்மிக வாழ்வு என்பதை அவருக்கு உணர்த்த விரும்பினான்.

    தன் தவச் சக்தியால் அனைவருக்கும் உணவு அளிக்க வாழை இலைகளை பரத்வாஜர் உண்டாக்கினார். எல்லோருக்கும் வாழை இலைகள் வந்து சேர்ந்தன. ஆனால் அனுமனுக்கு வாழை இலை வந்து சேரவில்லை.

    எத்தனையோ முயன்றும் ஆஞ்சநேயனுக்கான வாழையிலையை அவரால் கொண்டுவர இயலவில்லை. கர்வத்தின் காரணமாக அவர் தவச்சக்தி ஓர் எல்லையில் நின்று விட்டது!

    இது ராமன் தனக்களித்த படிப்பினை என உணர்ந்துகொண்ட முனிவர், ராமனைக் கையெடுத்துக் கும்பிட்டு நிலைமையைச் சீராக்க வேண்டினார்.

    ராமன் தனக்கான வாழையிலையில், அனுமனைத் தன் எதிரே அமரச் சொன்னான். வானர இனத்து அனுமனோடு ஒரே இலையில் விருந்துண்டான் ராமன்.

    அப்போது ராமன் மோதிர விரலால் வாழையிலை நடுவே கிழித்த கோடுதான் பின்னால் வாழையிலைக் காம்பாயிற்று என்கிறது அபூர்வ ராமாயணக் கதை.

    தனக்கு உதவிய அணிலின் முதுகில் தடவி அணிலுக்கு மூன்று கோடுகளை அளித்துப் பெருமை சேர்த்த ராமன் இப்போது வாழையிலைக்கு நடுக்காம்பு கொடுத்து அனுமனுக்கும் பெருமை சேர்த்து விட்டான்.

    தன் பக்தனான விலங்கினத்தைச் சேர்ந்த அனுமனோடு ஒரே இலையில் சாப்பிடுவதில் ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த ராமனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. வேடன் குகனையும் சகோதரனாக்கிக் கொண்ட மனம் அல்லவா ராமன் மனம்?

    நாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனைப் போற்றுவோம். வேடன் கண்ணப்பனைக் கொண்டாடுவோம். வள்ளிக் குறத்தியை வழிபடுவோம். ஆனால் தேநீர்க் கடைகளில் தனி அலுமினிய தம்ளர் கலாசாரத்தை மட்டும் விட்டுவிட மாட்டோம் என்றால் அது எப்படிச் சரியான ஆன்மீகமாகும்?

     

    திருப்பூர் கிருஷ்ணன்

    பெண் தெய்வமான கலைவாணியைக் கல்விக் கடவுளாய்த் துதிப்போம். ஆனால் பெண்களுக்குக் கல்வி உரிமையை மறுப்போம் என்றால் அது எப்படிச் சரியாகும்?

    மகாகவி பாரதியாரே சகோதரி நிவேதிதையின் அறிவுரைக்குப் பின் தானே மனம் மாறினார்? `கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும் காணீர்!` என்று அவர் பாடியது நிவேதிதையைச் சந்தித்த பின் தானே?

    தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமுமே ஆன்மிகத்தின் அடிப்படை என்ற எண்ணம் மக்களிடையே உறுதிப்பட வேண்டியது அவசியம்.

    தான் வாங்குகிற லஞ்சப் பணத்தில் ஒரு பங்கைக் கோயில் உண்டியலில் போட்டுக் குற்ற உணர்ச்சிக்கு வடிகால் தேடுவது ஆன்மிகம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கலாகாது என்று உணர்த்தாத ஆன்மிகம், உண்மையான ஆன்மிகமாக எப்படி இருக்க முடியும்?

    தனிமனித, சமூக ஒழுக்கங்களை வலியுறுத்துகிற, மனிதாபிமானத்தைக் கொண்டாடுகிற, தீண்டாமையை எதிர்க்கிற, அனைவரையும் சமம் என்று கருதுகிற ஆன்மிகமே இன்றைய தேவை.

    அத்தகைய ஆன்மிகம் நாட்டில் என்றைக்குத் தழைக்கும் என எல்லாத் தெய்வங்களும் ஆலயங்களில் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வங்களை மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டியது நம் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தால் உண்மையான ஆன்மிகம் தழைக்கும்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகிற 25-ந்தேதி மாலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அன்று இரவு அவர் பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் 26-ந்தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைக்கிறார்.

    மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

    மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே பா.ஜ.க. அலுவலகம் திறப்புக்கு பின்னர் அங்கு திரளும் பா.ஜ.க.வினர் மத்தியில் அமித் ஷா உரையாற்ற உள்ளார். இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சேகர், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், ஊட்டி பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத், விஜயகாண்டீபன், விஜயகாந்த், கனக சபாபதி, ஜி.கே. செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் பா.ஜ.க. புதிய அலுவலகம் 2 மாடி கட்டிடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்ட அரங்கமும், சிறிய அளவில் மற்றொரு கூட்ட அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறை தனியாகவும் உள்ளன. 

    • தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.
    • ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாடு கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனைகளை செய்து வருகிறது.

    * அன்பில் மகேஷ் அமைச்சராக இருக்கும் இக்காலம் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பொற்காலம்.

    * இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி உள்ளோம்.

    * தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சிறப்பாக செயல்படுகிறது.

    * அரசு பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் நன்கொடை, பொருட்கள் வழங்குகிறார்கள்.

    * 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்துள்ளார் அன்பில் மகேஷ்.

    * தேசிய கல்வி கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை தர மறுக்கின்றனர்.

    * மாணவர்களின் கல்விக்கான நிதியை தர மத்திய அரசு தர மறுக்கிறது.

    * தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.

    * தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.

    * தேசிய கல்விக்கொள்கை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை.

    * மாணவர்களை பள்ளிக்கூடத்தில் இருந்து துரத்தும் கொள்கை என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * ரூ.10,000 கோடி தருகிறேன் என்று கூறினாலும் தேசிய கல்விக்கொள்கைக்கு கையெழுத்திட மாட்டேன்.

    * ரூ.2000 கோடி அல்ல ரூ.10,000 கோடியே கொடுத்தாலும் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம்.

    * ரூ.2000 கோடிக்காக கையெழுத்திட்டால் 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று விடுவோம்.

    * குலத்தொழில், சாதி தொழில் என மனுநீதி சொல்கின்ற திட்டத்தை ஏற்க மாட்டோம்.

    * குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டும் என்பதால் தான் தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.

    * 6-ம் வகுப்பு முதல் தொழில்கல்வி கற்றுக்கொடுக்கிறோம் என குலக்கல்வியை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.

    * 6-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு வைத்து பள்ளிகளில் மாணவர்களை வடிகட்ட நினைக்கிறார்கள்.

    * 3, 5, 8-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வை வைத்து மாணவர்கள் கற்பதை தடுக்க பார்க்கிறார்கள்.

    * 12-ம் வகுப்பு முடித்து மாணவர்கள் எளிதாக கல்லூரிகளில் சேர முடியாமல் தேசிய கல்விக்கொள்கை தடுக்கும் என்று கூறினார்.

    • விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
    • வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு நீர்ப்பாசன திட்டத்தலைவர் வின்ஸ் ஆன்டோ, மீன் உற்பத்தி பண்ணையாளர்கள் அமைப்பின் தலைவர் சகாயம் என்ற அய்யப்பன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய அணைகள், நீர்ப்பாசன கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் போன்றவை ஏராளமாக உள்ளன. நீர்நிலைகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நெல், வாழை, காய்கறிகள், ரப்பர், மரவள்ளிக்கிழங்கு, மிளகு, கிராம்பு மற்றும் பிற தானியங்கள் பயிரிடப்படுகின்றன.

    இங்கு ஆழமற்ற நீர்நிலைகளில் தாமரை தாவரங்கள் வளருகின்றன. இது அகலமான பச்சை இலைகளையும், நறுமணம் கொண்டதாகவும் உள்ளது. தாமரை இலைகள் குளங்களின் அடிப்பகுதியில் சூரிய கதிர்கள் விழுவதைத் தடுக்கின்றன. இதேபோல தாமரைகளை வணிக நோக்கத்தில் நீர்நிலைகள், கால்வாய்களில் குறிப்பிட்ட தரப்பினர் பயிரிடுகின்றனர்.

    இதன் காரணமாக நீர்நிலைகள் மாசுபடுகின்றன. விவசாயத்துக்கு தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளில் விவசாயிகள் சிக்கி அவதிப்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது. வணிக ரீதியிலான தாமரை செடிகளை பயிரிடுவது தான் இதுபோன்ற அவலநிலைக்கு காரணம்.

    எனவே சட்டவிரோதமாக வணிக ரீதியில் நீர்நிலைகள், கால்வாய்களில் தாமரை செடிகளை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் மனுவின் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக தாமரை பயிரிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, குளங்களில் மட்டுமே தாமரை செடிகள் தானாக வளர்ந்து கிடக்கின்றன. இதனை வணிகரீதியில் பயிரிடுவது சட்டவிரோதம் என வாதாடினார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து குமரி மாவட்ட கலெக்டர், கோதையாறு வடிகால் நீர்பாசன செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் உள்ளிட்டோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    • திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக கடலூருக்கு நேற்று மாலை வருகை தந்தார். பின்னர் அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    * விழாவிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    * பள்ளி மாணவன் போல் காரணம் கூறுவதாக நினைக்க வேண்டாம். வருகின்ற வழிநெடுக காத்திருந்த மக்களை சந்தித்து வந்ததால் தாமதம் ஆனது.

    * மேடையில் பேசாமல் நின்ற மாணவச் செல்வங்களின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறேன். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வணங்குகிறேன் என்று கூறினார்.

    • த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    • சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிக்கான பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    ×