என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எப்போது தேர்தல் வரும், அம்மாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
    • விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை என்றென்றும் இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

    நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் 'தங்கத் தாரகை' இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 77-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், 'அம்மா புகழ் ஓங்குக' என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

    பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய புரட்சித் தலைவி அம்மாவை, ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

    அம்மாவின் அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா தி.மு.க. அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள்.

    எப்போது தேர்தல் வரும், அம்மாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

    பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.

    தமிழ் நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

    பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, புரட்சித் தலைவி அம்மாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், தி.மு.க. அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது. இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத்திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா. அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது.

    இன்றைக்கு, தி.மு.க. அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களை கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

    பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ் நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டி ருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது.

    இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்.

    தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும்.

    நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப் போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

    இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும்

    காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

    ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

    அ.தி.மு.க.தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்'' என்று நம் இதய தெய்வம் அம்மா சூளுரைத் தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாள். அ.தி.மு.க. தலைமையிலான சிறப்புமிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம். அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.
    • நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.

    சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசு இந்தியை எல்லாம் திணிக்கவில்லை.

    * மொழி கொள்கையில் தி.மு.க. அரசு அரசியல் செய்யக்கூடாது.

    * இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

    * நிதி தர மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறவில்லை.

    * புதிய கல்விக்கொள்கை மூலம் 3-வதாக விருப்பப்படும் ஒரு மொழியை கற்கலாம் என மத்திய அரசு கூறுகிறது.

    * எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டியது தானே.

    * கால சூழல் மாறுதலுக்கு ஏற்ப 3-வது ஒரு மொழியை கற்க சொல்கின்றனர் என்று கூறினார்.

    • பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
    • நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு ஜீப்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.

    பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த வழியாக கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் போடி தாலுகா போலீசார் முந்தல் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வாகனங்களில் வந்த மத்திய பிரதேசம் டிண்டோரி மாவட்டம் மார்வாரி பகுதியை சேர்ந்த கிரிப்பல்சிங் மரவி (வயது39), தீபக்உக்கே (31), சஞ்சய்குமார் (30), அம்ரத்குமார் கைருவார் (25), லலித் (19), வீரசேவ்உக்ரே (35), சிவம் பன்வாசி (26), லலித்குமார் தர்வையா (24), முக்கேஸ்தெக்கம் (27), அனிஷ்யாதவ் (29), துளசிராம் துர்வாரே (40), அரவிந்த் மார்வி (22) ஆகியோரை கைது செய்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து புகையிலை, கள்ளச்சாராயம் கடத்தி வந்த இவர்கள் தொழிலாளர்கள் போர்வையில் கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தனர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இவர்கள் நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
    • சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை புறநகர் ரெயில் சேவை இன்றும் நாளையும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையிலான ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளையும் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் இன்று காலை 9.50 மணி முதல் மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில்கள் ரத்து செய்யப்படுவதை அடுத்து சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் கணிசமான அளவில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8.05, 9.00, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 9.55, 11.25, மதியம் 12.00, 1.00, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ர ரெயில் நிலையம் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதே போல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 8.35, 10.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து நாளை காலை 11.45, மதியம் 1.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை மாலை 3.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    • நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.

    மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.

    இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.

    தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

    பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தி.மு.க.வினர் அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
    • ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் ராஜராஜ சோழன் காலத்து செப்புநாணயம், 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிற்பம் மற்றும் அகல் விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகை பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நடத்திய கள ஆய்வில் சுடுமண் குடுவை, குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை 2-ம் ஆண்டு மாணவர் ராகுல், வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் சிவப்பு, வெள்ளை நிற குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

    இதில் கண்டெடுக்கப்பட்ட குறியீடு ஓடுகள், ஏற்கனவே ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

    அதாவது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தொடர்ந்து எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

    • பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
    • நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந் தேதி என்ஜினீயரிங் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை விசாரிக்க அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில், 2022-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா மாதிரியான வீடுகளை குறிவைத்து காரில் வந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார்.

    பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இந்த திருட்டு வழக்கில் ஞானசேகரனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பள்ளிக்கரணை போலீசாருக்கு ஆலந்தூர் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    அதன்பேரில் பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கிறிஸ்டியன் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் தீபக்குமார் ஆகியோர் ஞானசேகரனிடம் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஞானசேகரன் பள்ளிக்கரணை பகுதியில் 7 வீடுகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

    பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஞானசேகரன், நகைகளை அடகு வைத்தும், விற்றும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஞானசேகரன் தனி ஒரு ஆளாக வீடுகளில் கொள்ளையடித்து வந்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் வைத்தும் விற்றும் இருந்த நிலையில் அந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

    பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகள் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரனின் ஜீப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதுடன், பிரியாணி கடை வைத்ததாகவும், பெண்களுடன் ஜாலியாக செலவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

    • வடக்கு 4 முனை சந்திப்பு அருகே சேலத்திலிருந்து வந்த லாரி பேருந்து மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.
    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதி சென்டர்மீடியனில் ஏறி நின்றது.

    வடலூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு செல்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு கர்நாடகா அரசு சொகுசு பஸ் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்தது.

    இந்த பஸ் கடலூர் மாவட்டம் வடலூர் 4 முனை சந்திப்புக்கு அதிகாலை 4 மணி அளவில் வந்தபோது சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும் திடீரென்று எதிர்பாராத மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த பெக்கலாட் வில்சன் சாமு மனைவி மேரி (44), சக்ரா மனைவி வித்யா (55), சுப்ரமணிய ராவ் மனைவி ஜெயமாலா( 50), கோலார் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50), கிருஷ்ணமூர்த்தி (52) உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் வடலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 பேரை மேல் சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சென்டர்மீடியனில் மோதி நின்று கொண்டிருந்த லாரியை ஜே.சி.பி.மற்றும் கிரேன் எந்திரம் மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார்.
    • ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார். அவருடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது, சுவாமி பாரகா கூறியதாவது:-

    நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.

    இந்த ஆன்மீக சாத்தியத்தை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் ஈஷாவில் 31-ஆவது மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈஷாவில் மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சத்குரு அவர்கள் வழிநடத்தும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மஹாமந்திரத்தை இந்தாண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்கவுள்ளார்.

    இதன் மூலம் தீட்சைப் பெறும் அனைவரும் அவரவர் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மத்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும். இதனுடன் 'மிராக்கிள் ஆப் தி மைண்ட்' எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    மேலும் மகாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

     

    விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    மேலும் 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில் எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக தகவல்.
    • விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டுள்ளது. ரெயில் விபத்து, தண்டவாளத்தை ஒட்டி இருந்த எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

    • சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் ரத்து.
    • சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

    சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் நாளை காலை 9.50- மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    கணிசமான அளவில் சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
    • சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இச்சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.inஇணைதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. அதிகாரப்பூர்வ செல்போன் செயலி(ஆப்) மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×