என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.95 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள்- வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
- போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு ஏராளமான பொருட்கள், கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திரேஸ்புரம் அண்ணா காலனி அருகே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் மூட்டைகளை படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் தப்பி விடாத வகையில் அனைவரையும் பிடித்தனர். பின்னர் படகுகளில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில் 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
அவற்றை இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட படகுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 20) அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனீஸ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
இதனைத் தொடர்ந்து போலீசார் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று நள்ளிரவில் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதி கடற்கரையில் 4 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் (80 ஆயிரம் எண்ணிக்கை ) கிடந்தது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் அதனை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.








