என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரியாறு அணை கண்காணிப்பு பணிக்காக கேரள படகிற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
- கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ, தூரமுள்ள அணைக்கு செல்வதற்கு ஜலரத்தினா, கண்ணகி ஆகிய படகுகள் உள்ளன. இப்படகுகள் 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் இரு படகுகள் வாங்கப்பட்டன. அதில் ஒரு படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது.
தேக்கடியில் அனுமதி கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகு.
அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டது. ஆனால் இப்படகை கூடுதல் குதிரை திறன் கொண்டதாக உள்ளது எனக்கூறி இயக்க கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.
தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு 9 படகுகளும், கேரள சுற்றுலாத் துறைக்கு 6 படகுகளும், கேரள காவல்துறைக்கு 2 படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு 1 படகும் இயக்கப்படுகிறது. இதுதவிர விரைவுப்படகும் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க நேற்று கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தொடங்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக நீர்வளத்துறையின் படகுகள் ஆண்டு கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கேரளாவில் புதிய படகை தமிழக அனுமதி இல்லாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. 130 குதிரை திறன் கொண்ட படகிற்கு அனுமதி தராத நிலையில் கேரள போலீசாரின் 150 குதிரை திறன் கொண்ட படகை இயக்குகின்றனர். கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
மேலும் கம்பத்தில் இருந்து குமுளியை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.






