என் மலர்
நீங்கள் தேடியது "Madurai collector"
- பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
- புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர்.
சோழவந்தான்:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளாகியும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியான முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவமாக சோழவந்தானிலும் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஜல்ஜீவன் மிஷன் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொட்டியின் அருகிலேயே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று இந்த குடிநீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதற்கிடையே குடிநீர் தொட்டி பராமரிப்பு மற்றும் அதனை சுத்தம் செய்வதற்காக மருது பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வழக்கம் போல் நேற்று தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஏராளமானோர் திரண்டனர். மேலும் அவர்கள் குடிநீரில் மனித கழிவை கலந்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தாா் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அதிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கிராம மக்கள் தேவைக்காக தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் வேன் மூலம் குடிநீர் சப்ளை செய்தார். மனித கழிவு கலந்தது குறித்து கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஹரிஷ்குமார், வட்டார சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.
மேலும் துர்நாற்றம் வீசிய குடிநீரை பருகியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவந்தான் போலீசார் கீழ்த்தரமான இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? அல்லது சிறுவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதைதான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவிக்கையில், 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் எங்களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி 5.10.2025 அன்று திறக்கப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த தவறான செயல் என தெரிகிறது. சிறுவன் வேடிக்கையாகச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இருப்பினும், குற்றவாளி மீது போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது மீண்டும் வேங்கைவயல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், இந்த பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை அனைத்து தரப்பினர் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
- அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் குறுக்கீடு செய்தார்.
- மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி விசிகவினர் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆட்சியரை மாற்றக்கோரி சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இன்று மதுரை ஆட்சியர் சங்கீதாவை மாற்றக்கோரி பெரியார் பேருந்து நிலையம் முன்பாக விசிகவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக ஆட்சியர் சங்கீதா குறுக்கீடு செய்தார். மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
- சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு விசிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
- மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் செல்ல முடியாதவாறு டோல்கேட் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி டோல்கேட் இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
- திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி மூழ்கி உயிரிழந்தார்.
- கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.
மதுரை:
மதுரை கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் அரசு அனுமதியின்றி கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 4 வயதான சிறுமி ஆருத்ரா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் மழலையர் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைத்தனர்.
சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாக பராமரிப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் உதவியாளர் வைர மணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நீதி மன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். சிறுமி இறந்த தனியார் மழலையர் பள்ளியில் உரிமத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட் டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
மதுரை:
மதுரையில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியது.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என 2 வாரங்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதேபோல் அழகர் கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமா வடியில் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். முன்னதாக சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர்கள் ஏ.வ.வேலு, சேகர் பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
- குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் குறித்த நேரத்தில் வரவில்லை.
- இதனால் மாவட்ட கலெக்டர் அவர்களை வெளியே நிற்க வைத்தார்.
மதுரை:
தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் கலெக்டரை நேரடியாக சென்று சந்தித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று கலெக்டர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிக அளவிலான மக்கள் மனு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை உருவானது.
இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுவதற்காக இளைஞர்கள் முதல் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் என நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர். இதற்காக வரவேண்டிய அதிகாரிகள் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டும்.
ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் காலை 10 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட நேரத்திலும் பணிக்கு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கலெக்டர் சங்கீதா, குறை தீர்க்கும் கூட்ட அரங்கிற்குள் உள்ளே வரக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அதிகாரிகள் உள்ளே வர விடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, தாமதமாக வந்த அதிகாரிகளை வெளியே நிற்க வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.
- 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப்பிறகு கலெக்டர் சங்கீதா கூறியதாவது:
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என அறிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கமான இடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது.
- நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
மதுரை:
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில எடுப்பு பிரச்சனை மதுரை சின்ன உடைப்பு ஊரில் உள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக இப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிந்தனர்.
இதையறிந்து பொதுமக்கள் பெரும் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, தாசில்தார்கள் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சார்பில் கவுன்சிலர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோர் பேசினர். அப்போது வீடுகளை காலி செய்ய வருகிற சனிக்கிழமை வரை அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அதிகாரிகள் வரும் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்துள்ளனர். இதனால் இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்தது. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டு தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்துவதை தடுக்க ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
- ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது.
- தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டி உள்ளதால் கூட்டத்திலேயே ஏற்கலாம் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறினார்.
அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் வளாக கூட்ட அரங்கில் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து பின் உறுதிமொழியை ஏற்றனர்.
அனைவரும் உறுதி மொழி ஏற்று அமர்ந்த பிறகு விவசாயி ஒருவர் எழுந்து "தமிழை வளர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. உறுதி மொழி ஏற்கிறோம், ஆனால் சென்னையில் தலைமை செயலகம் சென்றால் அங்கு உள்ள அமைச்சர்கள் பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது என கூறினார்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய் மொழி, ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பம் இடுகிறோம். வெளி மாநிலத்திலிருந்து வந்தாலும் அவர்களும் தமிழில் தான் கையெழுத்து இடுவார்கள். தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதனையும் விடாமல் விவசாயி ஆனால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது என கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
- கல்லூரி தாளாளர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தாளாளராக டாஸ்வின் ஜான் கிரேஸ் (வயது 48)என்பவர் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாகவும், அப்போது அவர் நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதுபற்றி சம்பந்தப்பட்ட மாணவி, சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார் பள்ளி தாளாளரை கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மேலும் கல்லூரி விடுதி செயல்படாததால் அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, சம்பந்தபட்ட கல்லூரி மாணவிகளை இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது கல்லூரி மாணவிகள் கல்லூரி மூடப்பட்டதால் தங்கள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது. கல்லூரி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேறு கல்லூரிகளில் இடம் இருந்தால் எங்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து பேசிய கலெக்டர் மேகநாத ரெட்டி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வருவாய் துறை மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அவர்கள் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்போது பள்ளி தாளாளர் ,வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகள் 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதை பெறுவதற்கு 2021-22-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் வாயிலாக 9-ம் வகுப்பும், அதற்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று ஆகியவற்றின் நகலுடன் நேரடியாக விண்ணப்பங்கள் வருகிற 30- தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண். 0452-2529695-ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






