என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவம்: குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு - கலெக்டர் விளக்கம்
    X

    மதுரையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவம்: குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு - கலெக்டர் விளக்கம்

    • பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
    • புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர்.

    சோழவந்தான்:

    புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளாகியும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

    மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியான முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவமாக சோழவந்தானிலும் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஜல்ஜீவன் மிஷன் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொட்டியின் அருகிலேயே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.

    பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    இந்த புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று இந்த குடிநீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.

    இதற்கிடையே குடிநீர் தொட்டி பராமரிப்பு மற்றும் அதனை சுத்தம் செய்வதற்காக மருது பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வழக்கம் போல் நேற்று தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஏராளமானோர் திரண்டனர். மேலும் அவர்கள் குடிநீரில் மனித கழிவை கலந்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தாா் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அதிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    கிராம மக்கள் தேவைக்காக தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் வேன் மூலம் குடிநீர் சப்ளை செய்தார். மனித கழிவு கலந்தது குறித்து கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஹரிஷ்குமார், வட்டார சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.

    மேலும் துர்நாற்றம் வீசிய குடிநீரை பருகியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவந்தான் போலீசார் கீழ்த்தரமான இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? அல்லது சிறுவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதைதான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவிக்கையில், 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த சம்பவம் எங்களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி 5.10.2025 அன்று திறக்கப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

    காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த தவறான செயல் என தெரிகிறது. சிறுவன் வேடிக்கையாகச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இருப்பினும், குற்றவாளி மீது போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    புதிதாக திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது மீண்டும் வேங்கைவயல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், இந்த பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை அனைத்து தரப்பினர் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×