என் மலர்
நீங்கள் தேடியது "வேங்கைவயல் வழக்கு"
- பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
- புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர்.
சோழவந்தான்:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 3 ஆண்டுகளாகியும் இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, டி.என்.ஏ. பரிசோதனை, 5 பேரிடம் குரல் மாதிரி சோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியான முயற்சியும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் மற்றொரு வேங்கைவயல் சம்பவமாக சோழவந்தானிலும் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதமடைந்து இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து ஜல்ஜீவன் மிஷன் 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பழைய தொட்டியின் அருகிலேயே புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிய நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்தனர். இந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் தெரிவித்து வந்தனர். நேற்று இந்த குடிநீரை குடித்த சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதற்கிடையே குடிநீர் தொட்டி பராமரிப்பு மற்றும் அதனை சுத்தம் செய்வதற்காக மருது பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் வழக்கம் போல் நேற்று தொட்டியை சுத்தம் செய்ய சென்ற போது அதில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு ஏராளமானோர் திரண்டனர். மேலும் அவர்கள் குடிநீரில் மனித கழிவை கலந்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஊராட்சி உதவி இயக்குநர் அரவிந்தன், தாசில்தார் பார்த்திபன், மண்டல துணை தாசில்தாா் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. மேலும் அதிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கிராம மக்கள் தேவைக்காக தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் ஜெகன் வேன் மூலம் குடிநீர் சப்ளை செய்தார். மனித கழிவு கலந்தது குறித்து கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஹரிஷ்குமார், வட்டார சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டியில் ஏறி ஆய்வு செய்தனர்.
மேலும் துர்நாற்றம் வீசிய குடிநீரை பருகியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அம்மச்சியாபுரம் கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சோழவந்தான் போலீசார் கீழ்த்தரமான இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்தவர்களா? அல்லது சிறுவர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் காலனி பகுதியைச் சுற்றி ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அதைதான் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம். எங்கள் பகுதிக்கு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தண்ணீர் திறந்து சில நாட்களே ஆகின்றன. இந்த நிலையில் இவ்வாறு மலம் கலந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மேலும், சுத்தம் செய்வது மட்டுமல்ல, இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பதையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவிக்கையில், 2 நாட்களுக்கு முன்பு குடிநீர் வரவில்லை என கூறி, சில சிறுவர்கள் தொட்டியின் மேல் ஏறியதாக தகவல் உள்ளது. இருப்பினும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் எங்களுக்குத் தெரிய வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி 5.10.2025 அன்று திறக்கப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் செய்த தவறான செயல் என தெரிகிறது. சிறுவன் வேடிக்கையாகச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான். இருப்பினும், குற்றவாளி மீது போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பிற்காக பூட்டி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிதாக திறக்கப்பட்ட 3-வது நாளிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்திருப்பது மீண்டும் வேங்கைவயல் சம்பவத்தை நினைவூட்டுவதாகவும், இந்த பிரச்சனைக்கு காலம் தாழ்த்தாமல் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை அனைத்து தரப்பினர் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
- உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
- அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 5 மாத காலமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகின்றனர்.
இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதில் 139 நபர்களின் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நபர்களில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஒப்பு கொண்டனர். மீண்டும் புதிதாக 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததில் வரும் திங்கட்கிழமை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை என்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.
அந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணா தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா ஆய்வு செய்து வருகிறார். அவர் வேங்கைவயல் கிராமத்தில் மலம் கழித்த பழைய நீர் தொக்க தொட்டியை ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
- தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
- கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதைதொடர்ந்து, கூடுதல் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது.
- எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு , ஆளும் கட்சியானால் எதிர்ப்பா?
சென்னை:
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்குழுவினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். திறந்தவெளியில் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய விஜய்,
நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக் கூடாது என நான் சொல்லவில்லை. பரந்தூரில் அமைக்கக் கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எட்டுவழிச்சாலையை எதிர்த்தீர்கள். காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு , ஆளும் கட்சியானால் எதிர்ப்பா?
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதை நான் வரவேற்கிறேன். அதைத்தானே பரந்தூர் பிரச்சனையிலும் செய்திருக்க வேண்டும். இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று பேசினார். விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை பாதிக்காமல் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் பேச இருப்பதாக கூறப்படுகிறது.
- முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரையில் 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனையும் ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களையும் சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ள நிலையில் இதுவரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராம மூர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ஜிஎஸ் மணி, இந்த சம்பவம் நடந்து 2 வருடம் ஆகியும் இது தொடர்பான எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை' என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
- வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.
எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன.
அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.
தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.
உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த மக்களே குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
வேங்கை வயல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று சிபிஐ(எம்) மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
வேங்கைவயல் வழக்கை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூக மக்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பது ஏற்கத்தக்கது அல்ல.
வழக்கை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நோக்கத்துடன் அந்த மக்களே குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
- இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழக அரசு வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று இயக்குநர் பா. ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
அம்மூன்று பேரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டுச் செய்யப்படும் செயலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு வருடங்களாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி அவசரக்கதியில் ஏதோ ஒரு காரணத்திற்காகக் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.
இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- வேங்கைவயல் வழக்கில் திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது.
- பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இறுதி வரை அஇஅதிமுக துணை நின்று போராடும்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என விசிக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேங்கைவயல் வழக்கில் திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம்,வேங்கைவயல் கிராமத்தில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(24.01.2025) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
எதையோ மூடி மறைக்க காலம் கடந்த அவசர குற்றப்பத்திரிக்கையை அவசர அவசரமாக தாக்கல் செய்துள்ளது ஸ்டாலின் அரசு!
சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விடும் என்று ஆளும் ஸ்டாலின் அரசிற்கு ஏற்பட்ட அச்சத்தில் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையா?
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.
வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக கூட்டணி கட்சியினரே சிபிஐ விசாரணை கோரியுள்ளது வரவேற்கத்தக்கது!
பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்காகவும்-உரிமைகளுக்காகவும் இறுதி வரை அஇஅதிமுக துணை நின்று போராடும்" என்று பதிவிட்டுள்ளார்.
- வேங்கைவயல் வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் கால தாமதம் ஏன் என்று சாத்தூரில் பேட்டி அளித்த நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "வேங்கைவயல் விவகாரத்தில் 2 பேரை குற்றவாளிகள் என பதிவு செய்வதற்கு ஏன் எவ்வளவு கால தாமதம் ஆனது. காவல்துறையினருக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளது. இந்த அழுத்தங்களால் புதிய புதிய விவகாரங்கள் வரும் போது பழைய பிரச்சனைகள் மிக பழைய விஷயமாகி விடுகின்றன.
தற்போது இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி. இனிமேல் இந்த விவகாரத்தில் காவல்துறை துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதே சமயம் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாக வரும்போது அதே விமர்சனத்தை வைக்கிறார்கள்.
இங்கே எதிர்ப்பதற்கு ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே அரசை ஆதரித்து நல்ல விசயத்தை வாங்கி கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். ஆனால் அரசை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு மக்கள் போராடிய பின்பு தான் தீர்வு கிடைத்தது" என்று தெரிவித்துள்ளார்.
- அந்த வீடியோவில் சுதர்சன் வீடியோ எடுக்கிறான் என்று பேசும் ஆடியோவும் பதிவாகி உள்ளது.
- அடிச்சி கேட்டாலும் ஒத்துக்கவே ஒத்துக்காதே என்று சுதர்சனின் அம்மா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என அதிமுக, விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வேங்கைவயலில் நீர்தேக்க தொட்டியில் 2 பேர் மலம் இருக்கும் பையுடன் அமர்ந்து பேசுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சுதர்சன் வீடியோ எடுக்கிறான் என்று பேசும் ஆடியோவும் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோவை தொடர்ந்து சுதர்சனின் அம்மா, அத்தை பேசியதாக கூறப்படும் 2 ஆடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், எவ்ளோ கேட்டாலும் ஒத்துக்காதே, அடிச்சி கேட்டாலும் ஒத்துக்கவே ஒத்துக்காதே என்று சுதர்சனின் அம்மா பேசியுள்ளார்.
வேங்கைவயல் வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ, ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள்.
- சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்?
சென்னை:
ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடூரத்திற்கு 800 நாட்கள் கழித்து புதிய கதை ஒன்றைக் கட்டமைத்துள்ளது தமிழக காவல்துறை. தலித் மக்களே தங்கள் குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து அதை அவர்களே அருந்தியிருக்கிறார்கள் என்ற 'அறியக் கண்டுபிடிப்பை' இவ்வளவு நாள் கழித்து துப்பறிந்து கண்டறிந்துள்ளது காவல்துறை.
தலித் மக்கள் மீதான அதிகாரத்தின் அழுத்தம் இன்னும் எத்தனை காலம் நீளும்.. தலித் மக்களுக்கு எதிரான இந்த விசாரணை அமைப்புகளின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான எனது போராட்டத்தை உடனடியாக துவங்க உள்ளேன். வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும், தற்போது குற்றவாளிகள் என்று காவல்துறை சித்தரித்துள்ள முரளி ராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரையும் ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தேன். மலம் கலந்த தண்ணீரை ஒருவாரமாகக் குழந்தைகள், முதியவர்கள் என அந்த மக்கள் குடித்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். சொந்த குழந்தைகளையே இப்படி வதைக்கும் அளவிற்குக் கொடூர மனிதர்களா அந்த எளிய மக்கள்? இதை எவ்வாறு மனம் வந்து காவல்துறையால் குறிப்பிட முடிகிறது. புலன் விசாரணை செய்த காவல்துறைக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தமே புகார்தாரர்களைக் குற்றவாளியாகக் காட்டும் தந்திரத்தைக் கையில் எடுக்க வைத்துள்ளதோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
இந்த சம்பவத்தின் ஆணிவேராகச் சாதி ஆதிக்கம் இருப்பதையும், காவல்துறை இந்த விவகாரத்தை அப்போதே திசை திருப்பும் வேலையில் இறங்கியதையும் தெரிந்தே, மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன் தனியாக நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு சட்டரீதியான போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த மூன்று தோழர்களும் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வரை என் போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அதிகார வர்க்கத்தை நோக்கி எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
இந்த வழக்கு தலித் மக்கள் மீது வலியத் திணிக்கப்பட்ட வழக்காகவே கருத வேண்டியுள்ளது. வலியவர்களின் குரல் அம்பலத்திற்கு வராது என்பது போல இந்த எளிய மக்களின் குரலை அதிகாரம் என்கிற கயிற்றைக் கொண்டு நெறிக்கும் வேலையை காவல்துறை மேற்கொண்டுள்ளது வெட்கக்கேடான செயல்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தை நிலைநாட்டும் நீதிக்கான பயணத்தை அந்த மக்களுடன் இணைந்து நான் உடனடியாக மேற்கொள்வேன். அதிகாரவர்கத்திற்கு எதிராக அந்த அதிகாரமற்றவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் பணியே எனது இப்போதைய தலையாய பணியாகக் கருதுகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே என்னுடைய பயணம் இருக்கும். அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்று கூறியுள்ளார்.






