என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும்.
- சென்னையில் மட்டும் 39 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-8-2024 அன்று சுதந்திர தின விழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29-10-24 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தன. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு கடைகளும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை வெளி மார்க்கெட்டில் 70 ரூபாய் ஆகும். ஆனால் முதல்வர் மருந்தகத்தில் ரூ.11-க்கு கிடைக்கிறது.
பிரதமர் பெயரிலான மக்கள் மருந்தகத்தில் இது ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.
அதாவது தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைக்காக மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவழித்தவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகத்தில் 1000 ரூபாய் இருந்தால் இந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்கு வதில் சேமிக்க முடியும்.
இந்த மலிவு விலை மருந்தகத்தை சென்னை பாண்டிபஜாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கோட்டூர்புரம் நூலகத்திற்கு சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ரா ஜீட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்து மருந்தகங்களுக்கு வழங்கப்பட உள்ளது. வெளிச்சந்ததையை விட 75 சதவீதம், மத்திய அரசின் மருந்தகங்களை விட 20 சதவீதம் வரை குறைவாக முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகிறது.
மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2006-2011 கால கட்டத்தில் கூட்டுறவு மருந்து கடைகள் என்ற பெயரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டது.
இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்துள்ளார்.
சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-
* கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.
* ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.
* மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.
* திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.
* கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.
* காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்.
* கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.
* நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.
* கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.
* சாமியர்ஸ் சாலை, நந்தனம்.
* லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.
* காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி.
* வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.
* மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.
* நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.
* சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.
* லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.
* செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.
* பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,
* சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.
* மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம்.
* புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.
* வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.
* பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.
* காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.
* 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர்.
* வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.
* 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.
* 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.
* 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.
* துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.
* 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.
* பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.
* 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.
* ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை.
* 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.
* பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.
* பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை,
* பெரியார் நகர், கொளத்தூர்.
* தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அணையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதும், அதனைத் தொடர்ந்து நிறுத்தப்படுவதை என நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு 79 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக சரிந்துள்ளது. 3995 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 61 கன அடி நீர் வருகிற நிலையில் 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 1943 மி.கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,055-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
22-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,360
21-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,200
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-02-2025- ஒரு கிராம் ரூ.108
22-02-2025- ஒரு கிராம் ரூ.108
21-02-2025- ஒரு கிராம் ரூ.109
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
- வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்.
- அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் "அம்மா" என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில்,
நம் உயிர்நிகர் அன்பு தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
"எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதனைத்தொடர்ந்து மறுநாள் (மார்ச் 15-ந்தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் கூடுகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
- அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.
1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.
ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?
சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
- மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மன்னார் வடக்கு பகுதியில் உள்ள கடற்பரப்பில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ஐந்து விசைப்படகுகளை பறிமுதல் செய்து 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை ராணுவ முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 26ம் தேதி 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி 16 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன.
அதில் 3 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 60 லட்சமும், மேலும் 16 மீனவர்களுக்கு ரூ 50,000 ஒவ்வொருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் கைது இருக்காது, படகுகள் பறிமுதல் இருக்காது என்று 2014 இல் கடல் தாமரை மாநாடு நடத்தி நீலிக்கண்ணீர் வடித்த பாஜகவினர் ஆட்சியில் தான் இத்தகைய தொடர் கைதுகள் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 3,544 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், 6 முதல் 2 வருடம் வரையிலும் தண்டனை கைதிகளாக உள்ள 20 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் பிப்ரவரி 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு 140 கோடி மக்களை ஆட்சி செய்கிற பிரதமர் மோடி வெறும் 2 கோடி மக்களை ஆட்சி செய்கிற சின்னஞ்சிறிய அண்டை நாடான இலங்கை அதிபரோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணமுடியவில்லை என்றால் ஒன்றிய பாஜக அரசின் கையாளாக தனத்தை தான் வெளிப்படுத்துகிறது.
கடந்த காலங்களில் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட முற்றுகை நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணம் பகுதி தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதை உணர்ந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் அனுமதி கோரினார்.
இலங்கை அரசு அனுமதி மறுத்த நிலையில் 32 விசை படகுகள் மூலமாக நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் பகுதிக்கு இந்திய அரசு அனுப்பியது.
அதை இலங்கை அரசு தடுத்த காரணத்தால் 1987 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 6 இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக 25 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை எல்லையை மீறி வான் வழியாக யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்கிற தமிழர்களுக்கு தலைவர் ராஜீவ் காந்தி வழங்கியதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நடவடிக்கையை ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது.
தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்திய இலங்கை கூட்டுப் பணிக்குழு கடந்த நவம்பர் 5, 2016 அன்று அமைக்கப்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களுக்கு ஒருமுறை அக்குழு கூடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதன்படி கடந்த 8 ஆண்டுகளில் 16 முறை அந்த கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 6 முறை தான் அந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-க்கு பிறகு கூட்டுப்பணிக்குழு கூட்டப்படவே இல்லை. இதன் மூலம் ஒன்றிய பாஜக அரசுக்கு மீனவர்கள் பிரச்னையை தீர்ப்பதில் அக்கறை இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுகிறது. இக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறார்.
எனவே, நடப்பாண்டில் மட்டும் 50 நாட்களில் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 16 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் பாஜக ஆட்சிக்கு எதிராக தமிழக மீனவர்களை திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
- பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து வரும் பிப்ரவரி 25ம் தேதி அன்று மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த 21.02.2025 அன்று நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் முதற்கட்ட போராட்டமாக, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, வரும் 25.02.2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் "பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.
தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்கின்ற வகையில், நமது கண்டனத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு உணர்த்தும் வகையிலும், ஒன்றிய அரசை கண்டித்தும், ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பு பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு- தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி ஒருங்கிணைந்து, மாணவர் அணியின் நிர்வாகிகள், தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பெருந்திரளாக பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கழக மாவட்டத்தில் உள்ள கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளோ, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் உள்ள மாணவர் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளையோ சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுகிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்ப்பாட்டத்தின் போது, சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் கல்வியை சிதைக்கின்ற படுபாதக செயலில் ஈடுபட்டு வருவதையும், தொன்மை வாய்ந்த நம் தமிழ்மொழியை அழிக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் தீய நோக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
- மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது.
மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், இந்தி மொழி திணிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.
"தமிழ் வாழ்க.." என முழக்கமிட்டபடியே இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது.
- எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை 23.02.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள
நிலையில், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியும், கைது
செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (23.02.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும்
சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், 22.02.2025
அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர்
23.02.2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று தான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்வதாகவும், இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையை
மீண்டும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி
நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
- தருமபுரி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 21 ஆம் தேதி இரவு தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த இரண்டு பெண்கள் வாலிபர் ஒருவருடன் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்து கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை கண்டித்தனர்.
இதனால், கோபம் அடைந்த இளம்பெண்கள், கண்டித்த பயணிகளை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடமும் மதுபோதையில் இருந்த இளம்பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த பெண்கள் கிருஷ்ணகிரி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, கண்மணி ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது.
ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு.
மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசும் இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்டி அதில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






