என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • 2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வருகிற 27-ந்தேதி ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மார்ச் 1-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் இன்று முதல் 26-ந்தேதிவரை அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்.
    • தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வாரியம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க. உச்சத்தில் இருந்தது, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு ஒற்றை தலைமையே காரணம், நம்பிக்கை துரோகம் யார் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும்.

    சூது, சூழ்ச்சி, வஞ்சனை, நம்பிக்கை துரோகம். துரோகத்தினால் கடைசியாக நடைபெற்ற 11 தேர்தல்களிலும் ஊரக உள்ளாட்சியாக இருந்தாலும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் அனைத்திலும் தோல்வி பெற ஒற்றைத் தலைமை தான் வேண்டுமென்று அடம்பிடித்தது தான் காரணம்.

    மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம். எங்கள் வாய் நல்ல வாய். அவர்கள் வாய் என்னவாய் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    தமிழக மக்கள் இருமொழி கொள்கையை தான் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அண்ணாவும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோதும் அதைத்தான் பின்பற்றினேன். அதேபோல இரு மொழிக் கொள்கைதான் எங்களுடைய நிலைப்பாடும்.

    தமிழகத்தில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தைகளும் பிறந்தவுடனே தமிழ் மொழியில் தான் அம்மா என அழைக்கிறார்கள், தாய் மொழி தமிழ், விருப்பப்பட்டவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். படித்துக் கொள்ளலாம் என அண்ணா கூறியுள்ளார். தாய் மொழியை காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உள்ளது.

    தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாநில அரசின் அனுமதியின்றி தொடங்கிக் கொள்ள ஒன்றிய கல்வி இடைநிலை வாரியம் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு தாய்மொழி தமிழ் கட்டாயம் விருப்பப்பட்டவர்கள் எந்த மொழி வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். நேற்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். இது கோழைத்தனம் என்று விமர்சித்தார்.

    இந்த நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் அன்னம் தரும் அமுதக் கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் கூறுவது கோழைத்தனம் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி உள்ளார்.

    வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா அல்லது மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்தோடும், மத்திய அரசு முறையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய அனைத்து வகையான சிறப்புகளையும் இடைமறைத்து தமிழகத்தின் வளர்ச்சியை குறைக்கின்ற போதும் நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசுக்கு சவால் விடுகிற முதலமைச்சரை கோழை எனக்கூறுபவர்கள் கோழை என்ற கூற்றுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும்.

    எந்த நிலையிலும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் போற்றப்பட்டது உண்டு. மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக மத்தியிலே இருக்கக்கூடிய ஒரு முதன்மையான முதலமைச்சர்தான் எங்கள் முதலமைச்சர் என அன்புமணி ராமதாசுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன் என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, மகா சிவராத்திரிக்கான முன் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து சிவனைப் போற்றி வழிபடக்கூடிய நல்ல சூழலை உருவாக்கி இருக்கிறோம்.

    இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சிவபெருமானின் பெருமையை எடுத்துக் கூறுவது போன்ற பட்டிமன்ற பேச்சாளர்கள், சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்களை வைத்து இந்த முறை மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. அனைத்து இடங்களிலும் சிறப்பாக வடிவமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    மயிலாப்பூரில் நானும், எம்.பி. ஜெகத்ரட்சகன், மேயர் பிரியா மற்றும் அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளோம்.

    கூடுகின்ற பக்தர்களுக்கு தேவையான சொற்பொழிவுகள் நடத்துவதும் சேர்கின்ற பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து, மருத்துவம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார்.
    • மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். பள்ளிக்கரணை பகுதியில் நடந்த 7 திருட்டு வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனிடம் விசாரணை நடத்துவதற்காக பள்ளிக்கரணை போலீசார் அவரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். அவரிடம் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஞானசேகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    ஞானசேகரன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து ஆட்டோ மற்றும் காரில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பின்பக்கம் வழியாக சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.

    சில நேரங்களில் சொகுசு காரில், யாருக்கும் சந்தேகம் வராதபடி சென்று கொள்ளையடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கரணையில் ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் போது வெளிமாநில கூட்டாளி ஒருவரை ஞானசேகரன் அழைத்து சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

    அவர் கொள்ளையடிப்ப தற்கு 'கூகுள் மேப்' பார்த்து சொகுசு பங்களாக்களை தேடினார். ஆட்கள் இல்லாத பங்களாக்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள் ஆட்டோ, கார், ஜீப் ஆகியவற்றில் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    7-வது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற ஜீப்பில் சென்றபோது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளை அடகு கடையில் விற்று, ஒரு பங்கை 3 மனைவிகளுக்கும் பிரித்துக்கொடுத்தார். மீதி பணத்தை வர்த்தகத்தில் போடுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    அவர் இதுவரை 250 பவுனுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் கானத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது சுமார் 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறை சென்று வந்த பின்னர் திருந்தி வாழ போவதாக கூறி, பிரியாணி கடை நடத்தினார். காலையில் பிரியாணி கடை நடத்திவிட்டு, இரவில் காரில் சென்று சென்னை புறநகர் பகுதிகளில் கைவரிசை காட்டினார்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஞானசேகரனை 7 கொள்ளை வழக்குகளிலும் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், கொள்ளையடித்த நகைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவரிடம் இருந்து இதுவரை சுமார் 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 150 பவுன் நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வர்த்தகத்தில் போட்ட பணத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவவிழா வருகிற 27-ந்தேதி அமாவாசை அன்று தொடங்கி 29-ந் தேதி வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    தெப்ப திருவிழாவில் உற்சவர் வைத்திய வீரராகவர் சமேதராக ஸ்ரீதேவி, பூ தேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். மாசிதெப்ப திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது.
    • தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட தலைவர் கரு.மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார் வரவேற்றார்.

    மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ், காரமடை மண்டல தலைவர் ஆர்.கே ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன், சங்கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கும், மத்திய பட்ஜெட்டிற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இந்திய அளவில் முதல் பட்ஜெட்டை தயாரித்தது தமிழகத்தை சேர்ந்தவர். மோடியின் அரசு ஏழைகளுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு. ஏழை எளிய மக்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அரசாக உள்ளது.

    மக்களிடம் பணம் இல்லை என்றால் இதற்கு முன்னாள் ஆண்ட காங்கிரஸ் ஆட்சி தான் காரணம். உலகத்தில் எந்த நாட்டிலும் டெபாசிட் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ஆனால் மோடியின் ஆட்சியில் பணம் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் வங்கியில் பணம் தொடங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் 1 வாரத்தில் 1.8 லட்சம் கோடி வங்கி கணக்கு தொடங்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.2.50 ஆயிரம் கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் சாலை அமைக்க தமிழக அரசு இடம் எடுத்து மத்திய அரசுக்கு வழங்காததால் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளது. தமிழக அரசு செய்யும் பல தவறுகளை மறைக்க மத்திய அரசை காரணம் காண்பித்து தப்பித்து செல்கின்றனர்.

    தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை வழங்கிய மோடியை வர வேண்டாம் என சொல்ல தி.மு.க. அரசுக்கு தகுதி இல்லை. இன்று தி.மு.க.வில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சி.பி.எஸ்.இ பள்ளிகளை தொடங்கி அங்கு இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். திமுக ஆட்சியில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் வருகையால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல அரசு பள்ளிகளில் மொத்தமாக 4 மாணவர்கள் வரை தான் கல்வி பயின்று வருகின்றனர்.

    தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைக்க 2026-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும். எனது வாழ்நாளில் ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர தலைவர் உமாசங்கர் நன்றி கூறினார்.

    • தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
    • கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்ட பகுதியை சேர்ந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் பழகியதாக தெரிகிறது. நேற்று இரவு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு தனியாக வரவழைத்ததோடு காட்டுப் பகுதியில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

    மாணவி அலறியடித்து தப்பி வீட்டிற்கு வந்தார். தனது தந்தையிடம் நடந்ததை கூறியதை தொடர்ந்து பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து பாலவிடுதி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மாணவனை பிடித்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கழுத்தறுக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
    • நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 முதல்வர் மருந்தகங்களின் விற்பனையை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையை மாற்றுவதற்காக முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    * முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு சார்பில் மானியம், கடன் உதவி வழங்கப்படுகிறது.

    * 1000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு செயல்பாட்டிற்கு வந்ததால் மகிழ்ச்சி.

    * ஜெனரிக் மருந்துகளையும் மற்ற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    * திமுக அரசு சாதாரண சாமானிய மக்களுக்கான அரசு என்பதற்கான எடுத்துக்காட்டு தான் முதல்வர் மருந்தகங்கள்.

    * மருந்துகள் வாங்க அதிகமாக செலவாகிறது என பலர் தெரிவித்ததால் சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

    * மாவட்ட மருந்து கிடங்குகளில் இருந்து 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    * 48 மணி நேரத்தில் மருந்துகளை முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்ப வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * முதல்வர் மருந்தகங்களால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

    * நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும்.

    * பொதுமக்களுக்கு தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது.

    * கல்வியும், மருத்துவமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்.

    * கல்வியில் சிறந்த மாநிலமாகவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்க திட்டம்.

    * கொரோனா காலத்தில் தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டு மக்களை காப்பாற்றினோம்.

    * மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் காலத்தை மாற்றி மக்களை தேடி மருத்துவத்தை கொண்டு சென்றோம்.

    * மக்களுக்கான செலவுகளை செய்வதில் கணக்கு பார்ப்பதில்லை என்றார். 

    • சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
    • கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்தை முக்கிய பகுதிகளில் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அன்னதானம், ரத்ததானம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினார்கள்.

    சென்னையில் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் காலையில் இருந்தே வரத் தொடங்கினார்கள். சென்னையிலும் அதனையொட்டிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.



    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது திரண்டிருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக! எடப்பாடி வாழ்க என கோஷங்களை முழங்கினர். அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமை கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 77 கிலோ பிரமாண்ட கேக்கினை வெட்டினார்.

    கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சியில் உள்ள ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, பா.பென்ஜமின், சோமசுந்தரம், அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, ரமணா, சின்னையா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா, வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன், அசோக், முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மற்றும் சந்தான கிருஷ்ணன்.

    கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, கழக மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி.ஆயிரம் விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
    • ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெ.தீபா இன்று பிறந்தநாள் விழா நடத்தினார்.

    அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும் இதற்கு முன்பு 3 முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    • பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
    • நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார்.

    அப்போது செங்கோட்டையன் பேசும் போது,

    அ.தி.மு.க ஒரு அசைக்க முடியாத இயக்கமாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி வரும். இதனால் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மீண்டும் செய்து தர முடியும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு நன்மையும் நடைபெறவில்லை. 2026 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்றார்.

    இதைத் தொடர்ந்து கோபி செட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அப்போது நிருபர்கள் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஏன்? பங்கேற்கவில்லை என கேட்டனர். அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், நினைவு நாளாக இருந்திருந்தால் நான் சென்னை சென்று இருப்பேன். பிறந்த நாள் என்பதால் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர உதவிகரமாக இருக்கும் என்றார்.

    வெள்ளாடும், ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, இது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து செங்கோட்டையன் கிளம்பிச் சென்றார்.

    • மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில்:

    மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், இன்று அதிகாலை சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன் கோவில் நகர செயலாளர் பிரகாஷ் , மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் முருகன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜவேல் ரத்தினம், மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, வார்டு செயலாளர் வீரா மற்றும் ரகுமான், தொ.மு.ச. காந்திமதி நாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×