என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் முழுவதும் 1,000 மலிவுவிலை மருந்தகங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    தமிழகம் முழுவதும் 1,000 மலிவுவிலை மருந்தகங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • அனைத்து மருந்துகளும் சந்தை மதிப்பை விட 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைக்கும்.
    • சென்னையில் மட்டும் 39 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-8-2024 அன்று சுதந்திர தின விழா உரையின் போது குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக 29-10-24 அன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை சேர்ந்தோருக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து மக்கள் மருந்தகங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கூட்டுறவு துறைக்கு வந்திருந்தன. அதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டது. இவர்களுக்கு கடைகளும் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதில் கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ள இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படும் 30 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை வெளி மார்க்கெட்டில் 70 ரூபாய் ஆகும். ஆனால் முதல்வர் மருந்தகத்தில் ரூ.11-க்கு கிடைக்கிறது.

    பிரதமர் பெயரிலான மக்கள் மருந்தகத்தில் இது ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

    அதாவது தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரைக்காக மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை செலவழித்தவர்கள், இனிமேல் முதல்வர் மருந்தகத்தில் 1000 ரூபாய் இருந்தால் இந்த மருந்துகளை வாங்க முடியும். அதாவது மாதந்தோறும் 50 முதல் 75 சதவீத தொகையை மருந்து வாங்கு வதில் சேமிக்க முடியும்.

    இந்த மலிவு விலை மருந்தகத்தை சென்னை பாண்டிபஜாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கோட்டூர்புரம் நூலகத்திற்கு சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள மருந்தகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

    மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள் சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ரா ஜீட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்து மருந்தகங்களுக்கு வழங்கப்பட உள்ளது. வெளிச்சந்ததையை விட 75 சதவீதம், மத்திய அரசின் மருந்தகங்களை விட 20 சதவீதம் வரை குறைவாக முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விற்கப்படுகிறது.

    மொத்தம் 762 மருந்து வகைகள் அறுவை சிகிச்சைக்கான மருந்துகளும் இங்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    2006-2011 கால கட்டத்தில் கூட்டுறவு மருந்து கடைகள் என்ற பெயரில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக தான் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டது.

    இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்துள்ளார்.

    சென்னையில் 39 முதல்வர் மருந்தகம் செயல்படும் இடங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    * கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம்.

    * ஆர்.வி.நகர் கடைசி மெயின் சாலை, கொடுங்கையூர்.

    * மன்னார்சாமி கோவில் தெரு, புளியந்தோப்பு.

    * திருப்பதி கூடல் ரோடு, கலைவாணர்நகர், அம்பத்தூர்.

    * கோவிந்தன் தெரு மேட்டுப்பாளையம், அருந்ததியர் நகர்.

    * காந்தி தெரு, கே.எம்.நகர், கொடுங்கையூர்.

    * கற்பகவிநாயகர் கோவில் தெரு, சென்னை.

    * நாட்டு பிள்ளையார் கோவில் தெரு, ஏழுகிணறு.

    * கல்யாணபுரம் தெரு, சூளைமேடு.

    * சாமியர்ஸ் சாலை, நந்தனம்.

    * லேண்டன்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்.

    * காமராஜபுரம், பாண்டிதுரை தெரு, வேளச்சேரி.

    * வீரராகவராவ் தெரு, திருவல்லிக்கேணி.

    * மாநகராட்சி கட்டிடம், சின்னமலை, வேளச்சேரி மெயின் ரோடு.

    * நாகேஷ் தியேட்டர் அருகில், தியாகராயநகர்.

    * சுந்தரம் தெரு, ராஜாஅண்ணாமலைபுரம்.

    * லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர்.

    * செல்லியம்மன் நகர் பிரதான சாலை, துர்கா நகர், தாம்பரம்.

    * பாரதிநகர் 2-வது தெரு, பி.வி.என். ரேஷன் கடை,

    * சாந்திநகர், 3-வது தெரு, குரோம்பேட்டை.

    * மந்தைவெளி தெரு, புழுதிவாக்கம் பஸ் நிலையம்.

    * புதிய பெத்தானியா நகர் பிரதான சாலை, வளசரவாக்கம்.

    * வானகரம் பிரதான சாலை, ஆலப்பாக்கம்.

    * பதுவாஞ்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், மாடம்பாக்கம்.

    * காமராஜ் நெடுஞ்சாலை, பழைய பெருங்களத்தூர்.

    * 10-வது பிளாக், கிழக்கு முகப்பேர்.

    * வ.உ.சி. தெரு, மக்கரம் தோட்டம், கொளத்தூர்.

    * 15-வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு.

    * 80 அடி சாலை, குமரன் நகர், பெரவள்ளூர்.

    * 4-வது பிரதான சாலை, அயனப்பாக்கம்.

    * துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர்.

    * 3-வது பிரதான சாலை, நாராயணசாமி கார்டன், சேலவாயல்.

    * பெருமாள் கோவில் தெரு, சதுமா நகர், திருவொற்றியூர்.

    * 2-வது பிரதான சாலை, மாத்தூர், எம்.எம்.டி.ஏ.

    * ஆண்டியப்பன் தெரு, வண்ணாரப்பேட்டை.

    * 8-வது தெரு, கடற்கரை சாலை, எண்ணூர்.

    * பாலசுப்பிரமணியம் சாலை, பெரியார் நகர், கொளத்தூர்.

    * பி.என்.ஆர். சாலை, பழைய வண்ணாரப்பேட்டை,

    * பெரியார் நகர், கொளத்தூர்.

    * தமிழ்நாடு தலைமைச் செயலகம், செயலக காலனி.

    Next Story
    ×