என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
- மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி தனியார் மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
அமைச்சர் சேகர்பாபு என்னை கர்நாடகா டூப் போலீஸ் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர். வேண்டுமென்றால் அமைச்சர், நான் வேலை பார்த்தது தொடர்பாக சோதனை செய்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது பொழுது விடிந்தால் போதும் பா.ஜ.க.வினரை விமர்சிப்பதே தி.மு.க.வினரின் தொழிலாக உள்ளது.
தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு தான் செல்கிறோம் என தெரிந்து செல்வோம். ஆனால் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என தெரியாமல் அதில் எப்படி கலந்து கொள்வது? எந்த விதத்திலும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதி எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட விதண்டா வாதமாக பேசி வருவது அவர்களின் வாடிக்கை. அப்படி இருக்க அந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொள்வது?
திராவிட மாடலை அகற்றும் வரை காலில் செருப்பு அணியப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளேன். செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம் என்பது காலில் செருப்பு போடாமல் நடக்கலாம் அதில் தவறில்லை, ஜெயிலுக்கு தான் போகக்கூடாது.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையே இரு மொழிக் கொள்கையில்தான் படித்ததாக கூறியுள்ளார். நான் மும்மொழி கொள்கையில் தான் படித்தேன். விருப்பமொழியாக தமிழை தேர்வு செய்தேன். படிக்காத நபர்களுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை.
- சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை:
மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து, மழை பெய்வதால் முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நெல்லை மாநகர பகுதிகளில் சந்திப்பு, தச்சநல்லூர், தாழையூத்து, டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மாநகர பகுதிகளின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மழை காரணமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.03 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.57 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 86.35 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணைப்பகுதியில் 23.8 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 48 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 42 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 1,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு சுமார் 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மில்லி மீட்டர் (12.3 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 106 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும், 17 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஊத்தில் 79 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 74 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 67 மில்லி மீட்டர், மாஞ்சோலை யில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
- தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
சென்னை :
இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.
- நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
- 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வத்தலகுண்டு கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.மோகன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல நூறு ஆண்டுகளாக கறி விருந்து நடைபெற்று வருகிறது.
- கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை மக்கள் உபயோகப்படுத்துவதில்லை.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழச்சாக்குளம் கிராமத்தில் கடலாடி-முதுகுளத்தூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ளது தர்ம முனீஸ்வரர் ஆலயம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி களரி விழாவையொட்டி பாரிவேட்டை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறு வது வழக்கம்.
பாரி வேட்டை திருவிழா விற்காக நூற்றுக்கணக்கான ஆடுகள் நேர்த்திக் கடனாக கோவிலுக்கு செலுத்தப்ப டும். ஆடுகள் குட்டி போடும் போதே இது முனியனுக்கு என்று சொல்லி நேர்ந்து விடும் பழக்கம் இப்பகுதியில் உள்ளது.
மேலும், கீழச்சாக் குளம் கிராமத்தின் சார்பில் தலைகட்டுவரியாக 2 ஆயிரம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் பொது அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கீழச்சிக்குளம் கிராம மக்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
2 ஆண்டுக்கு ஒருமுறை பாரிவேட்டை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தாண்டு தர்ம முனீஸ்வரர் கோவிலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கீழச்சாக்குளம் தர்ம முனீஸ்வரர் ஆலய பாரிவேட்டை திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொது அன்னதான விருந்து இந்தாண்டு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜாதி பேதம் பாராமல் கலந்து கொண்டு கறிவிருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். பல நூறு ஆண்டுகளாக இந்த ஆட்டுக்கறி விருந்து நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவிலுக்குச் சொந்தமான பொருட்களை இப்பகுதி மக்கள் உபயோகப் படுத்துவதில்லை. கோவில் பொருட்கள் அனைத்தும் தர்ம முனீஸ்வரருக்கு சொந்தம் என இப்பகுதி மக்கள் கருதுவதால், கோவில் ஊரணியைச் சுற்றியுள்ள மரங்களில் உள்ள இலை தழைகளைக் கூட தங்களது ஆடு, மாடுகளுக்கு அளிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
- உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
எனது 72-வது பிறந்தநாளை முன்னிட்டு நேரிலும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்களிலும் தங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை, ஊக்கமளிக்கும் பாராட்டுகளை, கனிவுமிகுந்த சொற்களைத் தெரிவித்த அகில இந்திய அரசியல் இயக்கங்களின் தலைவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், கலை உலகத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
இனத்தையும் மொழியையும் காக்க, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்த உங்கள் அனைவரின் வாழ்த்தோடும் ஆதரவோடும் தொடர்ந்து உழைப்பேன்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
- இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ள நிலையில் நடிகர் விஜய் தனித்து போட்டியிட உள்ளார். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ள அவர் அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.
பூத் கமிட்டிகளை வலுவாக்கி அதன் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலுமே கட்சியின் கட்டமைப்பை வலுவாக்குவதற்கு விஜய் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பெற வியூகம் வகுத்து கொடுத்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சியில் ஆலோசகராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.
விஜய் கட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகளில் இருந்து முக்கிய பிரபலங்கள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல பெண் பிரமுகரும் தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோன்று அ.தி.மு.க. வில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் த.வெ.க.வில் சேருவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தவிர பாரதிய ஜனதா கட்சியில் உள்ள இரண்டு முக்கிய பிரபலங்களும் விரைவில் விஜய் கட்சியில் சேருவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இது போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முக்கிய அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவில் பணிபுரிந்து வருபவர்களும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள். இப்படி மாநிலம் முழுவதிலுமே இருந்து பல்லாயிரக்கணக்கானோர் விஜய் கட்சியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருவதால் அதனை பிரம்மாண்டமான விழாவாக நடத்துவதற்கு கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இணைப்பு விழாவை எப்போது எங்கு வைத்து நடத்தலாம் என்பது பற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொதுவான ஒரு இடத்தில் வைத்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் இணைப்பு விழாவை நடத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான தேதி மற்றும் விழா நடைபெறும் இடங்கள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இதன்மூலம் சட்டமன்ற தேர்தலை சந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விஜய் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?
- தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன?
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
* என்னை எப்படி பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறுவீர்கள்?
* என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
* வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி பாலியல் குற்றவாளி என்பீர்கள்?
* என்னை குற்றம்சாட்டுபவர்கள் முதலில் தலைமை பண்புடன் நடந்து கொள்ளட்டும்.
* தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து கனிமொழியின் கருத்து என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
- உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க. தலையிடவில்லை
* உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் எதுவும் இல்லை என்றார்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மனைவியை பழிவாங்க குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த அவலம்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள கருவேப்பிலம்பாடியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் (வயது30). இவரது மனைவி ஷாலினி (26) இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கலையரசன் விஷம் குடித்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஆரம்ப சுகாதரா நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதுச்சத்திரம் போலீசாரிடம் கலையரசன் அளித்த வாக்குமூலத்தில் மனைவி ஷாலினிக்கு என்னை பிடிக்கவில்லை அவர் வேறொரு வாலிபரை காதலித்து வந்தார். ஷாலினி பெற்றோர் வற்புறுத்தலின் பேரிலே அவர் தன்னை திருமணம் செய்தார். வாலிபர் மீது உள்ள காதலால் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தனக்கு கொடுத்து விட்டார் என கூறியிருந்தார்.
ஆனால் போலீசாரின் விசாரணையில் கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் பூச்சி மருத்து கலந்து குடித்தது தெரிய வந்தது.
கடந்த மாதம் 13-ந் கலையரசனுக்கு ஷாலினிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஷாலினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவரை கடந்த 16-ந் தேதி கலையரசன் சமரசம் செய்து அழைத்து வந்துள்ளார்.
தன்னை அசிங்கபடுத்திய மனைவியை பழிவாங்கவே கலையரசன் தனக்கு தானே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததும், கலையரசன் தனது நண்பர்களிடம் மனைவியை கண்டிப்பாக பழிவாங்க வேண்டும் என கூறியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கலையரசன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் புதுச்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
- பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் சட்டமன்ற தொகுதித்தோறும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கழக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






