என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி நடக்கிறது.
    • கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.


    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30-க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடைபெற்றது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருவாவடுதுறை ஆதீனம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர் ரேவதி கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    5-ம் திருவிழா 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடை வருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார்.

    அங்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர், சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழா 12-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது. 

    • அமைச்சர் அன்பில் மகேஷ் நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
    • என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதையடுத்து தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    குட்மார்னிங்..

    டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும்.

    என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.

    முதலமைச்சரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். உற்சாகமாக எழுதுங்கள்.. நல்லா எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.

    விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.

    சென்னை:

    'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.

    அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.

    இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

    மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
    • மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழ வைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள்தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வளத்தை உங்களால் உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சத்தை ஒழித்து விடலாம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள், அவற்றை தீர்க்க வந்தவர்கள்.

    உங்களை நம்பித்தான் நிலத்தை காக்க, வளத்தை காக்க, நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.

    ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். அனைத்து கட்சிகளும் இன்று நாம் வளர்ந்துவிட்டதை கண்டு பொறாமைப்படுகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரை கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கொடுக்கிறீர்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

    தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் மாறாமல் பசுமையாக வைத்து இருக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
    • தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    தேனி மாவட்டத்துக்கு தி.மு.க. அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

    முல்லைப் பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின்நீர்மட்டத்தை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம்.

    அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.

    கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது.

    பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்?

    தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.

    • அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
    • 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    இந்த கூட்டத்தில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என தெரிவித்தது. இதற்கிடையே, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

    பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை.

    அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.

    தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
    • ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலனை தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஜெயசூர்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்நிலையில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி அனுப்பிய மெசேஜை பார்த்து பதறிய ஜெயசூர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காதலி ரம்யா, அவரது பெற்றோர் தலைமறைவு ஆகியுள்ளனர். 

    • மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்.

    முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.

    ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.

    அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது.

    தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
    • வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

    மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மூன்றாம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிலைப்புக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.

    பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன.

    அதுமட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்த தொழிலாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.

    தனியார் நிறுவனங்கள் அத்தகைய கடமையை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசே, இத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது சிறிதும் நியாயமற்றது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 153-ஆம் வாக்குறுதியாக, "அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்துவிட்டது.

    மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இவர்களுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1998-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கி போராடியது. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், பா.ம.க. மற்றும் தொழிலாளர்கள் அமைப்புடன் பேச்சு நடத்திய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தது.

    அன்று தந்தை கலைஞர் காட்டிய மனிதநேயத்தையும், தொழிலாளர்கள் மீதான அக்கறையையும் இன்று தனயன் மு.க.ஸ்டாலின் காட்ட மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்ப விரும்பும் வினா.

    திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்? குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

    மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

    இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
    • 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள்.

    மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள்.

    இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள்.

    வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
    • தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் கருத்தில் தெளிவு தேவை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை பற்றி மத்திய அரசுதான் தெளிவுபடுத்த முடியும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

    தமிழ்நாடு பாஜக தலைவரும் மத்திய அரசால் மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி மேலும் கூறியிருப்பதாவது:-

    தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த நாடாளுமன்ற தொகுதிகளையும் இழக்காது என அமித்ஷா கூறுகிறார்.

    Pro rata அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடக்கும் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களுக்கே அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

    எந்த அடிப்படையில் தொகுதி மறுவரையரை நடக்கும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

    மக்கள்தொகை அடிப்படையில் இது நடந்தால், இத்தனை ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் பிரிநிதித்துவம் குறையும்.

    அதேசமயம் மக்கள்தொகையை பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும். பாஜகவின் சொந்த அரசியலுக்காக, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×