என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன.
மதுரை:
மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் மீது ஆதாரமில்லாத, அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற வழக்கை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எப்படி இவ்வழக்கு விசாரித்தாலும் அவதூறு வழக்காகத்தான் தெரியவரும். இந்த வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னை பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். அவ்வளவுதான் அவர்களது நாகரீகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பது பெரியாரின் கோட்பாடு. ஆனால் அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இதுபோன்ற கேவலமான செயல்ளை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னையும், என்னை பற்றியும் பேச தி.மு.க.விற்கும், திராவிடர் கழகத்திற்கும் தகுதி இல்லை.
பாலியல் வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது.
இந்த வழக்கில் பேச தகுதியற்றவர்கள் கம்யூனிஸ்டு கட்சியினர். காம்ரேட்டில் இருந்து கார்ப்பரேட்டாக மாறி உள்ளனர். பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் கூறாத நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் என்னை எப்படி பாலியல் குற்றவாளி என கூறுகிறார்?. கம்யூனிஸ்டு கட்சியில் செயல்படாத தலைவர்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதை பற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் வாய் திறக்கவில்லை.
கம்யூனிஸ்டு கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே உள்ளார். நல்லக்கண்ணுக்கு ஏன் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடவில்லை? மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 90 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 6 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில் 12 சீட்கள் பெற்ற நிலையில் தற்போது அவர்களது நிலைமை மோசமாக உள்ளது. எந்த பிரச்சனைகளுக்கும் கம்யூனிஸ்டு கட்சி போராட முன்வரவில்லை. மும்மொழி கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்சனை உள்ளிட்ட வற்றில் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைபாடு தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டுமென செயல்படுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்சனை உள்ளது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இதுதொடர்பாக என்னையும், என் குடும்பத்தையும் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அதனை எல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும். தி.மு.க. தலைவர்களும், வாடகை தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்சனையை பேசி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் முடிவு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார்.
- கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.
சூலூர்:
கோவை அருகே உள்ள சூலூர் பட்டணம் புதூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அந்த பணியை விட்டு சொந்த ஊரில் வந்து குடியேறினார். இங்கு அவருக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயத்தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.
சமீபகாலமாக கிருஷ்ணகுமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சங்கீதாவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சங்கீதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன்பிறகு கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார். பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியில் கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அங்கு அவர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை கிருஷ்ணகுமார் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு சங்கீதா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது மனைவியை சுட்டுக் கொன்ற கிருஷ்ணகுமார் கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட விவரமும் தெரியவந்தது.
இதையடுத்து சங்கீதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் தோட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஆத்திரத்தில் அந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
சுட்டுக் கொல்லும் அளவுக்கு கணவன்-மனைவி இடையே என்ன பிரச்சனை இருந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளும் வீடு திரும்பியதும் பெற்றோரை எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் கண்ணீர் வடித்தபடி கலங்கி நின்றனர்.
இந்த சம்பவம் சூலூர் பட்டணம் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது.
- மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எந்த தேர்தலிலும் களம் கானாத பல கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது. இதனால் இந்த கூட்டத்துக்கு தடை வதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
- கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இந்தத் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
மேலும் சமவெளி பகுதிகளில் உள்ள தண்ணீரும் இணைந்து தற்போது தாமிரபரணி ஆற்றில் இயல்பை விட அதிகரித்துச் செல்கிறது. எனினும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல நீராடி வருகின்றனர். டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராகேஷ்காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு இருந்தது. ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது.
கடந்த ஆண்டு ஜூன் 13ந் தேதி அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022ம் ஆண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது.
கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்பட்டது. புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் உள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழு வருகிற 7ந் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்கசிவு கேலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அன்றைய மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1763 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 61.01 அடியாக உள்ளது. 234 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 722 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3821 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை 1.2, மஞ்சளாறு அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுவதால் எல்லா புள்ளி விவரங்களிலும் முன்னிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டில் வளர்ச்சி, தமிழ் மொழியின் சிறப்பு சிலரது கண்களை உறுத்துகிறது.
* ஆங்கிலம் கற்றதால் தான் பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உள்ளனர். இந்தியை கற்பதால் என்ன பயன்?
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது.
* சுயநலத்திற்காக தமிழகத்தின் எதிர்காலத்தை அடகு வைக்காமல் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள்.
* அரசியல் வேறுபாடுகளை களைந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாருங்கள் என்று மீண்டும் அவர் அழைப்பு விடுத்தார்.
- தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
- தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
நாகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தற்போதெல்லாம் கைது செய்யும் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அபராதமும் விதிக்கிறது.
* மீனவர்கள் கைது செய்யப்படுவது காலங்காலமாக தொடர முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
* சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழக மீனவர்களின் நலனை நிலைநாட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை தேவை.
* மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
* மீனவர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
* ஒவ்வொரு பிரச்சனைகளிலும் தமிழக அரசு போராடிக்கொண்டு தான் இருக்கிறது என்று கூறினார்.
- நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாகப்பட்டினம்:
நாகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
13 பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானார் பலன் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்திற்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
வேதாரண்யம் தலைஞாயிறு பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். விழுந்தமாவடி, வானமா மாகாதேவி பகுதிகளில் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். 3 பல்நோக்கு பஸ் நிலையம் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம் நகராட்சி கட்டிடம் ரூ. 4 கோடி செலவில் புனரமைக்கப்படும். நாகையில் 3 தளங்கள் கொண்ட பேரிடர் மையங்கள் அமைக்கப்படும். ரூ. 65 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் சென்னையில் அமைக்கப்படும்.
இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடர் நிதியை கூட மத்திய அரசு தருவதில்லை. பள்ளிக்கல்வி க்கான நிதியையும் தருவதில்லை. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தருவோம் என்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி, தனித்துவம் பிடிக்காததால் இப்படி செய்கிறார்கள்.
இந்தி திணிப்பை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். குழந்தைகள் கூட தங்களது சேமிப்பை கல்வி நிதிக்கு தருகிறார்கள். அவர்களது இந்த செயலை காணும் போது கண் கலங்குகிறது.
தமிழ்நாடு முன்னேறியதற்கு இரு மொழி கொள்கைதான் காரணம். மக்களின் துணையோடு தமிழ்நாட்டின் உரிமையை நான் மீட்பேன். தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது. எனவே நாளை மறுநாள் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
- உணவு எடுத்து வருவதற்காக இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் மேல தெருவை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 30) பெயிண்டர். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுஜாதா கர்ப்பம் தரித்தார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்துக்காக மூவேந்தன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
சமயபுரம் மருதூர் சாலையில் ராஜ கள்ளிக்குடி என்ற பகுதி சாலை வளைவில் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூல மாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே மூவேந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருத்துவ மனையில் பிரசவத்துக்காக மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவரது கணவரின் உயிரிழந்த உடல் வைக்கப்பட்டு இருப்பதும், கணவர் உயிரிழந்த செய்தியை மனைவியுடன் சொல்ல முடியாமல் அவர்களின் உறவினர்கள் தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாளை அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்
- ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சமூகத்தில், ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதை போதித்த அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம், நாளை (4-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டு மென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலி யுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
- இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட தி.மு.க.வின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில்,
நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில்,
ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா தி.மு.க. அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் ரகசியத்தை மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், தி.மு.க. பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது.
- இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ்-2 பொது த்தேர்வு தொடங்கியது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 108 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 71 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்கள் 1, 267 என மொத்தம் 24,338 மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ்-2 பொது த்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வை மாணவ மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் தேர்வை பார்வையிடுவதற்காக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்திருந்தார்.
அப்போது தனி தேர்வு எழுதும் 3 மாணவிகள் அந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர். ஆனால் இந்த மாணவிகள் பதற்றத்தில் ஹால் டிக்கெட்டை எடுத்து வர மறந்து விட்டனர். மேலும் அவர்கள் தேர்வு மையம் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்ததும் தெரிய வந்தது.
அவர்கள் தவறுதலாக பன்னீர்செல்வம் பார்கில் உள்ள அரசு பெண்கள் தேர்வு மையத்திற்கு வந்ததும் தெரிய வந்தது. இதனால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ் அந்த மாணவிகளிடம் பேசி பதற்றப்பட வேண்டாம். இங்கே உங்களுக்கு ஹால் டிக்கெட் எடுத்து தருகிறேன் என்று கூறி பள்ளி அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் அந்த 3 மாணவிகளுக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து எடுத்து அவர்களிடம் வழங்கினார்.
மேலும் தனது கார் மூலமாக அந்த 3 மாணவிகளையும் தேர்வு மையமான தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவினார். அந்த 3 மாணவிகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.






