என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என நீதிபதி கருத்து.
    • ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என கேள்வி.

    சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை துவக்கப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு வந்தது.

    அப்போது, குற்றம்சாட்டப்பட்டோர் விளக்கத்தை கேட்காமல் வழக்கை மாற்றியதற்கு குற்றம்சாட்டப்பட்டவர் பொறுப்பாகமாட்டார் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்ட நிர்வாக நீதிபதிகள் வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதாவது, அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா ? என்றார்.

    ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் பொன்முடி தரப்பு விளக்கமளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

    • தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
    • ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.

    புகாரின் பேரில் கேவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.
    • சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனப் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

    இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள்.

    ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும்.

    இன்னல் பல எதிர்கொண்டு கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் வாழ்வாதாரமும் ஊசலாட வாழ்கின்றனர் மீனவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்னல்கள் பல எதிர்கொண்டு, கடல் அலைகளின் மேல் தங்களது உயிரும் - வாழ்வாதாரமும் ஊசலாட, நாள்தோறும் வாழ்கின்றனர் நமது மீனவர்கள்.

    அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கடந்த 02-04-2025 அன்று இறையாண்மை கொண்ட நமது தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மனம் இரங்காமல், கண் மூடி - காதுகளை அடைத்துக் கொண்டு - வாய் மூடி மௌனித்திருக்கிறது ஒன்றிய அரசு.

    எனவே, நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான - மேம்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணரவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.
    • சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

    சென்னையை அடுத்து உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர்.

    அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று சொல்வதை விட, ஒரு போர்களத்தில் இருக்கும் தலைவனாக தான் சீமானை பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    அதற்கு காரணம் அவரது கொள்கை தான். அந்த கொள்கையில் அவர் எடுத்து இருக்கும் உறுதிபூண்ட கொள்கை, அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாக போர்க்களத்தில் போராடும் மாண்பு. இது தமிழக அரசியலில் சீமானை தனி பெரும் தலைவராக உயர்த்தி இருக்கிறது.

    எனக்கும், சீமானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்வளவு தான் வித்தியாசம். இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை.

    நான் சீமானுக்காக தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு இருப்பதற்கான காரணம். இன்றைக்கு அரசியல் களத்தில், நேர்மை குறைந்து இருக்கிறது. அது இருக்க கூடிய சீமானும், நானும் ஒரே மேடையில் பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. சீமானுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை என ராம்குமார் தரப்பு கூறியது.

    சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணைக்கு போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, " தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை" என ராம்குமார் தரப்பு கூறியது.

    சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத மு.க. ஸ்டாலின், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.
    • உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?

    சட்டசபையில் டாஸ்டாக் ஊழல் தொடர்பாக அந்த தியாகி யார் என அதிமுக-வினர் கேள்வி எழுப்பியதற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நொந்து போய் நூடுல்ஸ் ஆன அ.தி.மு.க. தொண்டர்கள்தான் தியாகிகள் என விமர்சித்திருந்தார்.

    அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    யார் அந்த தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத மு.க. ஸ்டாலின், சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.

    சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும்.

    உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்து கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?

    இவ்வளவு ஏன், கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும், நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம்- கொத்தடிமைகளாக நடத்த படுகிறோம் என அறிந்தும், திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்!

    ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல.

    டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே- அந்த ஊழலுக்கு பொறுப்பான அந்த தியாகி யார் என்றுதான் கேட்கிறோம். அவருக்கு தியாகி பட்டம் கொடுத்த நீங்கள்தான் அந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே!

    #யார்_அந்த_தியாகி ?

    உங்கள் பதிலுக்கு மக்களுடன் இணைந்து காத்திருக்கிறோம்!

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    • பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா?
    • அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.

    சென்னை:

    பிரதமர் மோடி நேற்று ராமேசுவரத்தில் பேசும் போது தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று புள்ளி விபரங்களுடன் தெரிவித்தார். ஆனால் நிதி ஒதுக்கீடு வருடத்துக்கு வருடம் அதிகரிக்கும் என்பது பொருளாதாரம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கே தெரியும் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலாம் ஆண்டு படிக்கும் பொருளாதார மாணவ, மாணவியருக்கு கூட தெரியும் ஆண்டாண்டு காலமாக இதுதான் நடைமுறை என்பது. ஆண்டுக்கு ஒரு முறை எல்லாத் துறைக்குமான நிதி அதிகரிக்கும் என்பது முதல் ஆண்டு படிக்கும் பொருளாதாரம் மாணவர்களுக்கு கூட தெரியும் என்று பிரதமரை விமர்சிக்கும் நீங்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதுமான நிதி தரவில்லை என்றும் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. வெறும் திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள் என்றும் கேலி பேசும் உங்கள் கூட்டணியின் முதல்வர், துணை முதல்வர், தமிழக அமைச்சர்களுக்கும் பதில் அளிக்கும் விதமாகத்தான் நேற்றைய மேடையிலே தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் சொன்ன விளக்கத்தை ஏற்க பயந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குளுகுளு ஊட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே தரவில்லை என்று அங்கே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.

    அதே நேரத்திலே இங்கே ரூ.8000 கோடிக்கு அதிகமான மக்கள் நலத் திட்டங்களையும் சாலை விரிவாக்கத் திட்டங்களையும் ராமேஸ்வரத்தில் அர்ப்பணித்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. உண்மையை சொன்னால் அல்வா கூட கசக்கிறது. ராமேஸ்வரம் வந்த பாரத பிரதமரை தமிழக முதல்வர் நேரில் சென்று வரவேற்றிருக்க வேண்டுமல்லவா? அதை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம். வரலாற்றுப் பிழை.

    அதை விடுத்து தி.மு.க. செய்யும் விமர்சனத்திற்கு சிதம்பரம் போன்றவர்கள் வக்காலத்து வாங்குவது ஏதோ அறிவாலயத்தின் வாசலில் நின்று ஒவ்வொரு தேர்தலிலும் சில எம்.பி. சீட்டுக்களை பெறுவதற்கு தான் என்பதை மக்கள் உணர்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • மூன்றில் ஒரு பங்கு குறைவாக 1299 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
    • தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக காவல்துறைக்கு 1299 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியிருக்கிறது. காவல்துறைக்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்த ஆள்தேர்வு நடத்தப்படாத நிலையில், அதை கருத்தில் கொள்ளாமல் , நடப்பாண்டு ஜூலை ஒன்றாம் தேதியன்று 30 வயதுக்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டும் தான் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு எதிரானது ஆகும்.

    தமிழக காவல்துறையில் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் காவல் சார் ஆய்வாளர்கள் ஓய்வு பெறும் நிலையில், அதனால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆள்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கம் வரை காலியாக இருந்த சார்-ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப 2024 ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மே மாதமே அறிவித்திருந்தது. ஆனால், அறிவித்தவாறு அறிவிக்கை வெளியாகவில்லை.

    சார் ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஜூலை மாதம் 30 வயது நிறைவடைந்திருந்த இளைஞர்கள் ஆள்தேர்வில் பங்கேற்றிருப்பார்கள். அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்கும் வகையில் வயது வரம்பை குறைந்தது ஓராண்டாவது உயர்த்தியிருக்க வேண்டும்.

    கடந்த ஆண்டில் காவல்துறைக்கு சார் ஆய்வாளர் தேர்வு நடத்தப்படாததை கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்த நான், சார் -ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதை செயல்படுத்த சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தவறியிருப்பது நியாயமல்ல.

    அதேபோல், தமிழக காவல்துறையில் கடந்த ஆண்டு திசம்பர் 11-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது 2600-ஐ தாண்டியிருக்கக்கூடும். 621 சார் ஆய்வாளர்கள் நியமனம் நிலுவையில் இருக்கும் நிலையில், குறைந்தது 2000 சார் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு குறைவாக 1299 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இது போதுமானதல்ல.

    காவல்துறையின் வலிமையையும், தேர்வர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும். அதேபோல், தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 36 செல்சியல் வரை பதிவாகக்கூடும். 

    • தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    • குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நாள்தோறும் செல்வதற்கு சில நிபந்தனைகளுடன் கடந்த 2-ந் தேதி அனுமதி அளித்தது. எனினும் கோவிலில் நாள்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் செய்தி மக்களை சென்றடையாததாலும், தொடர் மழை காரணமாகவும் மலையேறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதனிடையே, நேற்று முன்தினம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், குறைந்தளவே பக்தர்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து பக்தர்கள் இன்று மட்டும் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

    இதனால் சாமி தரிசனம் செய்வதற்காக தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பாக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • திருவிழாவில் மின் அலங்காரத்திற்கு ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கியது.
    • அரசு சார்பில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 1- ம் தேதி, தேவாலய திருவிழாவில் மின் விளக்குகள் அலங்காரத்திற்கு பயன்படுத்திய ஏணியை அகற்றிய போது மின்சாரம் தாக்கி விஜயன் வயது 52, ஜஷ்டஸ் வயது 33, சோபன் வயது 45, மைக்கேல் பின்டோ வயது 42 ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனார்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு மீனவரணி மாநில செயலாளர் ஏற்பாட்டில் தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

    மீனவரணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மேயர் மகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் நிவாரண நிதியை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மீனவர் நல்வாரிய உறுப்பினர் ஜோஸ், கிழக்கு மாவட்ட மீனவரணி தலைவர் எஸ். கே. ஆன்டனிராஜ், மீனவரணி அமைப்பாளர் அனனியாஸ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

    ×