என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார்.
- தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு.
திருச்சி:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு எப்பொழுது ஆரம்பிக்கும்? எப்பொழுது முடியும்? என தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக கூறியிருக்கின்றனர். பீகார் உள்பட 5 மாநில தேர்தல் வர இருக்கிறது. தேர்தல்கள் காலம் வரும்பொழுது இதுபோன்று பலவிதமான அறிவிப்புகளை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
இது அறிவிப்போடு இருந்துவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் . தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு என்றுமே தயாராக தான் உள்ளார். தமிழகத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.
திருச்சியில் நேற்று கூட 104 வெப்பம் பதிவாகி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறியிருக்கிறோம். அந்த சமயத்தில் கடும் வெயில் இருந்தால் அது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து அப்போது முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகள் அதிகப்படியாக பணம் வாங்குவது தவறு. அப்படி வாங்க கூடாது. இது குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது கூறியுள்ளேன். 2009-ல் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான ஆணையம் முன்னாள் நீதியரசர்கள் தலைமையில் வைத்துள்ளோம்.
அந்த கமிட்டி என்ன சொல்கிறதோ அவர்கள் நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கூறி உள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தமிழக வெற்றிக்கழகம் 2026-ல் தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட உட்கார முடியாது எனக் கூறியிருப்பது அவர்களது எண்ணம், கட்சி ஆரம்பித்து விட்டார்கள், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்லுகிறார்கள் என நான் பார்க்கிறேன் . தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் சிறப்பாக அமல்படுத்துகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்தது மட்டுமல்லாமல், அதில் நிறைய ஷரத்துக்கள் உள்ளன. நாம் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என வைத்து உள்ளோம். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளில் தான் தேர்வுகள் வைக்கின்றோம்.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் 3, 5-ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் உள்ளன. இது குழந்தைகளின் இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்பதும் ஒரு காரணம். குறிப்பாக நாம் இரு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் போது அவர்கள் தோல்வியடைந்த மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு கூறுகின்றனர். அது ஏற்கத்தக்கது அல்ல.
ஆசிரியர் காலி பணியிடங்கள் பொறுத்தவரை நீங்கள் காத்திருப்பது போலவே நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அது வந்தவுடன் அவர்களுக்கு பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அட்சய திருதியை நாளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
- 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.
சென்னை:
பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
- மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை. கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிக வெப்பநிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையே வருகிற 18-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் கோடை வெப்பச்சலன மழை மே 8-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். 2-வது வாரத்தில் மழைப்பொழிவு குறைந்து வெப்பநிலை உயரக்கூடும்.
ஆனால் மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு காற்றின் ஊடுருவல் மே மத்தியில் படிப்படியாக தொடங்கும். அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் இயல்பான வெப்பமும், இயல்பிற்கு அதிமான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்திய மாநில மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் வீடுகளில் கடுமையான வெப்பமும் வாட்டி எடுக்கிறது. இதனால் குளிர்சாதன வசதி இல்லாத அறைகளில் தூங்குபவர்கள் வியர்வை மழையில் நனைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் மொட்டை மாடிகளில் காற்றுக்காக இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
- மதுரை வந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார்.
- தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை விஜய் தனி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார். விஜய் மதுரைக்கு வருவது குறித்து அறிந்த கட்சியின் தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய் ரசிகர்களுக்காக ரோடுஷோ நடத்தி அவர்களை உற்சாகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோக நாதன் தெரிவிக்கையில், விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மாலை மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் ரோடு ஷோ நடத்துவது குறித்து போலீசாரிடம் இதுவரை அனுமதி கேட்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி விஜய் ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
- சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 7-ந்தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நள்ளிரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெய குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- மே தின நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அ.தி.மு.க. சார்பில் மே தின நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
* இந்த இயக்கம் மண்ணிலே வளர வேண்டும். இயக்கத்தில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது கண்ணீர் துடைக்கப்படும்.
* வேலைவாய்ப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தொழிலாளர்கள் நலன் காக்கப்படும். விவசாயிகள் நலன் காக்கப்படும்.
* 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இது ஒரு பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை:
கேரள மாநிலம் வண்டிப் பெரியாரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
இன்று மே 1, உலக தொழிலாளர் நாள். உழைக்கும் பாட்டாளி வர்க்கம் மீட்சி பெறுவதற்காக. உலக தொழிலாளர் தமது வாழ்வா தார உரிமைகளை பெறுவதற்காக அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் போராடியபோது அன்றைய ஆட்சியாளர்களால் கட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்திய தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கான 28 சட்டங்களை கொண்டு வந்தவர். இந்த நாளில் அம்பேத்கரையும் நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நன்றி செலுத்துகிறது. உலகத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, ஏகாதி பத்திய சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற பா.ஜ.க. அரசு 2029-ல் பதவி காலத்தை நிறைவு செய்தது. ஆனால் அடுத்த கணக்கெடுப்பு 2031 நடை பெறும் என தெரிய வருகிறது. 2021-ல் நடைபெற வேண்டியது கொரோனா காரணமாக 2031 ஆம் ஆண்டு தான் அந்த காலக்கெடு வருகிறது.
அப்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்குமா? என்கிற கேள்வி எழுகிறது. 2029 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் உறுதியாகும். இப்போது இவர்கள் இந்த அறிவிப்பை செய்திருப்பது ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிகிறது. பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இது ஒரு பேசும் பொருளாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை செய்து வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சர வையில் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. ஏற்க னவே இது குறித்து அவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் இப்போது வந்திருக்கிறார் கள் என்ற நிலையில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த சில கட்சிகள் மாநில அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிற அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு தான் இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.
மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதை உறுதிப்ப டுத்தி இருக்கிறார். தமிழ்நாட் டில் மாநில அரசுதான் இதை மேற்கொள்ள வேண்டும் என சொன்ன வர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை. வருகிற மே 31-ந்தேதி மதச்சார் பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துகிற பா.ஜ.க.வை கண்டித்து வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் தொண்டர் கள் பங்கேற்க இருக்கி றார்கள்.
பெஹல்காம் நகரில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துய ரத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விரைந்து தாயகம் திரும்பினார். டெல்லிக்கு வந்து அமைச்சர்களுடன் கலந்தாய்வு நடத்திவிட்டு பீகாருக்கு சென்று விட்டார் என்பது அதிர்ச்சி இருக்கி றது. அந்த பயங்கரவாதத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது, கடுமைாக கண்டிக்கிறோம்.
தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பா.ஜ.க.வினர் உருவாக்கி வருகிறார்கள். பா.ஜ.க. அரசு பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டிற்கு விடமாட்டோம், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்கிறார்கள். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் சிந்துநதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியாவிற்கு போர் தொடுப்போம் என்று சொல்லக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.
பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. ஆனால் அதற்கு ஒரு போர் தேவையா என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
- சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.
* சுதந்திர இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்ட முதல் பிரதமர் மோடிதான்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள், நன்றி.
* மத்திய அரசு உத்தரவிட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசும் நடத்த வேண்டும்.
* சாதிவாரி கணக்கெடுப்புக்கு தி.மு.க. அரசு சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* சாதிவாரி கணக்கெடுப்பை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் செய்யவில்லை.
* தி.மு.க.வுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது?
* மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.
- தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி.
- அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை.
மதுரை:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்து வரும் விஜய், தனது நீண்ட கால அரசியல் வேட்கையின் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை நோக்கிய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக திகழ்ந்து வரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், அதுவே எங்கள் முழுநேர சிந்தனையாக இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ள விஜய் தற்போதைய மத்திய, மாநில அரசுகளையும் எதிர்க்க தவறவில்லை. சிறந்த நிர்வாகத்திறமை தங்களிடம் இருக்கும் என்றும், அதே நேரத்தில் லஞ்ச, லாவண்யம், ஊழலற்ற அரசை அமைத்து காட்டுவோம், அதுவே தங்களது 2026 சட்டமன்ற தேர்தல் களமாக அமையும் என்று பேசி விஜய் உற்சாகப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும், பிரிவினைவாத அரசியல் கலாசாரம் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய், எண்ணித்துணிக கருமம் என்ற வள்ளுவரின் வாக்குப்படி, அனைத்திற்கும் தயாராகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அதிரடித்தார்.

குறிப்பாக, தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, என்னுடைய முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் என்ற விஜய்யின் பேச்சு தமிழக மக்களை அவர்பக்கம் ஈர்த்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை தயார்படுத்தி கூர்சீவி வரும் விஜய் அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் கோவையில் 7 மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை 2 நாட்கள் நடத்தி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியோடு, தொண்டர்களை தயார்படுத்துமாறும் எழுச்சியுரையாற்றினார். விரைவில் மற்ற மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இதற்கிடையே கலைத்துறையில் இருந்து தனது பயணத்தை நிறைவு செய்யும் வகையில் கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 2 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று அவர் வருகை தருகிறார்.

தமிழக வெற்றிக் கழக தலைவரான பிறகு இன்று மாலை விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அதிலும் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மண்ணில் கால் வைக்கும் அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருகிறார்கள். மதுரை வருகை குறித்த தகவல் நேற்று மாலை வெளியானது முதல், தங்களது அனைத்து பணிகள், பயணங்களை ஒத்தி வைத்த த.வெ.க. தொண்டர்கள் விஜய்யின் வருகையை பண்டிகை போல் கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.
முன்னதாக இன்று காலை 7 மணிக்கு விஜய், மதுரை வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் மதுரையை நோக்கி கார், வேன், இருசக்கர வாகனங்களில் நேற்று இரவு முதலே புறப்பட்டுவிட்டனர். இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது மதுரை விமான நிலைய பகுதி த.வெ.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
திரும்பிய திசையெல்லாம் த.வெ.க. கட்சி கொடியுடன், இளைய தளபதி விஜய் வாழ்க என்ற விண்ணைப் பிழக்கும் கோஷங்களும் மட்டுமே கேட்டது. அதிலும் குறிப்பாக தங்களுக்கான ஒரே தலைவர் விஜய்தான் என்ற மனதில் நிலை கொண்டுள்ள இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கழுத்தில் கட்சி துண்டை அணிந்து கொண்டும், நெஞ்சில் விஜய் வாழ்க என்ற பேட்ஜை குத்திக் கொண்டும், கண்களில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதுஒருபுறம் என்றால் அண்ணனை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்கள் பட்டாளம் மதுரை விமான நிலைய பகுதியை வட்டமிடும் கழுகு போல் சுற்றி சுற்றி வருகிறார்கள். வானில் பறந்து மதுரையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களையும் பார்த்து உற்சாகமாக கையசைத்து அதோ வந்து விட்டார், இதோ வந்து விட்டார் என்ற உற்சாக குரலில் விஜய் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் விஜய் இன்று மாலை 4 மணிக்கு மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அவர் பல மணி நேரமாக அவரை பார்க்க காத்திருக்கும் தொண்டர்களின் உற்சாக, எழுச்சிமிகு வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து பெருங்குடி வரை திறந்தவேனில் ரோடுஷோவாக சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அதேவேளையில் எந்த விதத்திலும் உற்சாக மிகுதியால் தொண்டர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயஒழுக்கம் ஆகியவற்றில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும் என்ற விஜய்யின் அறிவிப்பை கட்டிக்காக்கும் வகையிலும் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அவர்களுடன் சேர்ந்து மதுரை போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத எதிர்பார்ப்பும், வரவேற்பும் இன்று மதுரை வருகை தரும் விஜய்யை மெய்சிலிர்க்க வைக்கும் என்று அவரது கட்சி தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
கோவையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டின் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக மதுரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யின் மதுரை வருகை சுட்டெரிக்கும் கோடையை மிஞ்சும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
- கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீடு உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்று தெரியவில்லை. பூம்புகார் நகர் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நேற்றிரவு பணி முடிந்து செல்லும்போது மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் யாரென்று கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்களில் யாராவது மாயமாகி உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் கல்லைப்போட்டு செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல்.
4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.
அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு உழவர்களுக்கு தாராளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
- சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதற்காக முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒப்புதலுடன் இந்த குழுவின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.
கே.வீ.தங்கபாலு-தலைவர், எம்.கிருஷ்ண சாமி-இணைத் தலைவர், கே.எஸ்.அழகிரி-இணைத் தலைவர், எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., டாக்டர் ஏ.செல்லக்குமார், பி.மாணிக்கம் தாகூர் எம்.பி., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு, கே.ராணி, வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபர் திலக், கோபி நாத் பழனியப்பன், வி.கே.அறிவழகன், ரூபி.ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., ஜே.எம்.எச்.அசன் மவுலானா எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., சி.டி.மெய்யப்பன், டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிசாமி, எஸ்.சுஜாதா, கே.விஜயன், பென்னட் அந்தோணிராஜ், வழக்கறிஞர் ஏ.பி.சூரியப் பிரகாசம், வழக்கறிஞர் ஓ.எம்.ஆர்.பழனிவேல், பி.பாட்ரிக் ராஜ்குமார், தாம்பரம் எஸ்.நாராயணன், வி.எஸ்.கமலிகா காமராஜர், லெனின் பிரசாத், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர் டி.செல்வம், வழக்கறிஞர் என்.அருள் பெத்தையா, செ.ராம்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் சத்தியமூர்த்திபவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.
ஏற்கனவே செல்வப்பெருந்தகை சொத்து மீட்பு குழுவில் இருந்த போது 2016-17-ம் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு சொத்துக்களை அடையாளம் கண்டு அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சேகரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இப்போது மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் இந்த சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.






