என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் அருகே செவிலியர் படுகொலை - போலீசார் விசாரணை
- கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீடு உள்ளது. இன்று காலை அங்கு இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள் யாரென்று தெரியவில்லை. பூம்புகார் நகர் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் நேற்றிரவு பணி முடிந்து செல்லும்போது மர்மநபர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாழடைந்த வீட்டிற்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அல்லது காதல் பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகள் யாரென்று கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்களில் யாராவது மாயமாகி உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் கல்லைப்போட்டு செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






