என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள்
    X

    விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள்

    • தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி.
    • அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை.

    மதுரை:

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்து வரும் விஜய், தனது நீண்ட கால அரசியல் வேட்கையின் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை நோக்கிய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக திகழ்ந்து வரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், அதுவே எங்கள் முழுநேர சிந்தனையாக இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ள விஜய் தற்போதைய மத்திய, மாநில அரசுகளையும் எதிர்க்க தவறவில்லை. சிறந்த நிர்வாகத்திறமை தங்களிடம் இருக்கும் என்றும், அதே நேரத்தில் லஞ்ச, லாவண்யம், ஊழலற்ற அரசை அமைத்து காட்டுவோம், அதுவே தங்களது 2026 சட்டமன்ற தேர்தல் களமாக அமையும் என்று பேசி விஜய் உற்சாகப்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும், பிரிவினைவாத அரசியல் கலாசாரம் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய், எண்ணித்துணிக கருமம் என்ற வள்ளுவரின் வாக்குப்படி, அனைத்திற்கும் தயாராகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அதிரடித்தார்.

    குறிப்பாக, தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, என்னுடைய முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் என்ற விஜய்யின் பேச்சு தமிழக மக்களை அவர்பக்கம் ஈர்த்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை தயார்படுத்தி கூர்சீவி வரும் விஜய் அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் கோவையில் 7 மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை 2 நாட்கள் நடத்தி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியோடு, தொண்டர்களை தயார்படுத்துமாறும் எழுச்சியுரையாற்றினார். விரைவில் மற்ற மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

    இதற்கிடையே கலைத்துறையில் இருந்து தனது பயணத்தை நிறைவு செய்யும் வகையில் கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 2 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று அவர் வருகை தருகிறார்.

    தமிழக வெற்றிக் கழக தலைவரான பிறகு இன்று மாலை விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அதிலும் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மண்ணில் கால் வைக்கும் அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருகிறார்கள். மதுரை வருகை குறித்த தகவல் நேற்று மாலை வெளியானது முதல், தங்களது அனைத்து பணிகள், பயணங்களை ஒத்தி வைத்த த.வெ.க. தொண்டர்கள் விஜய்யின் வருகையை பண்டிகை போல் கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 7 மணிக்கு விஜய், மதுரை வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் மதுரையை நோக்கி கார், வேன், இருசக்கர வாகனங்களில் நேற்று இரவு முதலே புறப்பட்டுவிட்டனர். இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது மதுரை விமான நிலைய பகுதி த.வெ.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திரும்பிய திசையெல்லாம் த.வெ.க. கட்சி கொடியுடன், இளைய தளபதி விஜய் வாழ்க என்ற விண்ணைப் பிழக்கும் கோஷங்களும் மட்டுமே கேட்டது. அதிலும் குறிப்பாக தங்களுக்கான ஒரே தலைவர் விஜய்தான் என்ற மனதில் நிலை கொண்டுள்ள இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கழுத்தில் கட்சி துண்டை அணிந்து கொண்டும், நெஞ்சில் விஜய் வாழ்க என்ற பேட்ஜை குத்திக் கொண்டும், கண்களில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    இதுஒருபுறம் என்றால் அண்ணனை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்கள் பட்டாளம் மதுரை விமான நிலைய பகுதியை வட்டமிடும் கழுகு போல் சுற்றி சுற்றி வருகிறார்கள். வானில் பறந்து மதுரையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களையும் பார்த்து உற்சாகமாக கையசைத்து அதோ வந்து விட்டார், இதோ வந்து விட்டார் என்ற உற்சாக குரலில் விஜய் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்தநிலையில் விஜய் இன்று மாலை 4 மணிக்கு மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அவர் பல மணி நேரமாக அவரை பார்க்க காத்திருக்கும் தொண்டர்களின் உற்சாக, எழுச்சிமிகு வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து பெருங்குடி வரை திறந்தவேனில் ரோடுஷோவாக சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அதேவேளையில் எந்த விதத்திலும் உற்சாக மிகுதியால் தொண்டர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயஒழுக்கம் ஆகியவற்றில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும் என்ற விஜய்யின் அறிவிப்பை கட்டிக்காக்கும் வகையிலும் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அவர்களுடன் சேர்ந்து மதுரை போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத எதிர்பார்ப்பும், வரவேற்பும் இன்று மதுரை வருகை தரும் விஜய்யை மெய்சிலிர்க்க வைக்கும் என்று அவரது கட்சி தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கோவையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டின் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக மதுரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யின் மதுரை வருகை சுட்டெரிக்கும் கோடையை மிஞ்சும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

    Next Story
    ×