என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முன்விரோதத்தில், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு.
    • 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    தென்கரைக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணனிடம், குறுகிய காலமே வேலை பார்த்துள்ளார்.

    பின்னர், வேலையைவிட்டு நின்ற சிறுவன் தனது மாமாவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால், பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஆத்திரடைமந்துள்ளார்.

    இதுதொடர்பான முன்விரோதத்தில், சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக ஏ.பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதையடுத்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
    • ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.

    விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

    தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.

    மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,

    சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.

    நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.

    ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.

    விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    • ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
    • 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கரடி பிடிபட்டது.

    திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர்பேட்டராயன் பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய கரடி 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.

    ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் வனத்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட கூண்டில் கரடி பிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து ஆந்திர வனப்பகுதியில் கரடியை திறந்துவிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

    • சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு விசிகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
    • மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்று விசிகவினர் வலியுறுத்தினர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டம் பட்டியில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. இதனை கடந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன், மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திடீரென சிட்டம்பட்டி டோல்கேட்டை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். வாகனங்கள் செல்ல முடியாதவாறு டோல்கேட் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறார். கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சியை தடுக்கிறார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட கலெக்டரை தமிழக அரசு உடனே மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

    தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்றுகை போராட்டத்தால் சிட்டம்பட்டி டோல்கேட் இருபுறமும் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேல் அணிவகுத்து நின்றது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    • ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கு.
    • ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என்று உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

    ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக தமிழக டிஜிபி அறிக்கை சமர்ப்பித்தார்.

    அந்த அறிக்கையில்," அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஞானசேகரன் மீது பதிவான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.

    பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகிளா நீதிமன்றத்தில் 13 கட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளது.

    அதனால், இந்த விவகாரத்தில் ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது" என குறிப்பிட்டுள்ளார்.

    • சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார்.
    • நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் ரத வீதியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பாக ராஜஸ்தானை சேர்ந்த ராம் சிங் தனது மகன்களுடன் இணைந்து இருட்டுக்கடையை தொடங்கினார்.

    ராம் சிங்கிற்கு 4 மகன்கள் இருந்த நிலையில் 3-வது மகனான கிருஷ்ணசிங் கடையை தனது தந்தையோடு இணைந்து நடத்தி வந்தார். இவரது மறைவிற்கு பிறகு கிருஷ்ணசிங்கின் மகன் பிஜிலி சிங் தனது மனைவி சுலோசனா பாய் உடன் இணைந்து கடையை நிர்வகித்து வந்தார். பிஜிலி சிங் 2000-ம் ஆண்டு உயிர் இழந்த நிலையில் அவரது மனைவி சுலோச்சனா பாய் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். அதுவரை இருட்டுக்கடையில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் வெளிப்படையாக பிரச்சினை விவாதிக்கப்படவில்லை.

    சுலோச்சனா பாய் உயிரிழப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே கடை நிர்வாகத்தை அவரது அண்ணன் மகள் கவிதா எடுத்து நடத்தி வந்தார். தற்போது வரை இருட்டுக்கடை கவிதாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவரது மகள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகள் தனது தாய் (கவிதா) வீட்டில் வாழ்கிறார்.

    இந்த நிலையில் கவிதாவின் மருமகன் குடும்பத்தினர் கடையை தங்களுக்கு வரதட்சணையாக கேட்டதாக கூறப்பட்டதில் இருந்து முதன்முதலாக இப்பிரச்சனை வெளியே வந்தது.

    இதனிடைய கவிதாவின் சகோதரர் நயன் சிங் கடையில் தனக்கே உரிமை உள்ளது என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு கவிதாவின் தரப்பு மறுப்பு அறிவிப்பை வெளியிட்டது. பிஜிலி சிங் - சுலோசனா பாய் தம்பதிகளுக்கு நேரடி வாரிசு இல்லாத நிலையில் சுலோச்சனா பாயின் சகோதரர் குழந்தைகளான கவிதா மற்றும் நயன் சிங் சொத்துக்காக மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது புதிதாக ஒருவர் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆரம்ப காலகட்டத்தில் கடையை நிர்வகித்து வந்த கிருஷ்ணசிங்கின் மூத்த சகோதரர் உதய் சிங். இவரது மகன் வழிப்பேரனான பிரேம் ஆனந்த் சிங் தற்போது சென்னையில் வசிக்கும் நிலையில் அவர் ஆண் வாரிசான தனக்கே கடை உரிமை உள்ளது என்ற அடிப்படையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    கிருஷ்ணசிங்கின் அண்ணன் பேரன் என்ற அடிப்படையில் உரிமை கோரும் அவர் நயன் சிங், கவிதா உள்ளிட்டோர் ஊதியம் பெறும் பணியாளர்களாகவே கடையில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

    சட்டப்பூர்வமாக கடையை கைப்பற்றுவேன் என்றும் இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், வழக்கு தற்போது விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    சிறப்பு வாய்ந்த இருட்டுக்கடைக்கு ஏற்கனவே இருவர் உரிமை கொண்டாடும் நிலையில் 3-வது நபராக ஒருவர் தற்போது உரிமை கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்த தனக்கொடி மகன் முத்துக்குமார்(வயது38). பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இதே நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வரும் ஒருவரும், முத்துக்குமாரும் நண்பர்கள். இதனால் இரு குடும்பத்தினரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் முத்துக்குமார் வீட்டுக்கு, நண்பரின் மனைவி சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து முத்துக்குமார் கொடுத்தார். சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி மயங்கியதும் தனது செல்போனில் அவரை ஆபாசமாக படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து தனது செல்போனில் ஆபாசமாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி அடிக்கடி பணம் கேட்டு நண்பரின் மனைவியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்டபெண் திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினத்திடம் புகார் செய்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் இதே போல் ஏற்கனவே ஒருபெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு முத்துக்குமார் மிரட்டி வந்ததும், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது.
    • அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் வருகிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

    இது மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நாடு அறியும். பீகார் தேர்தல் பரபரப்புக்கு இடையில் மத்திய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

    எனவே இது பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாகத்தான் தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்தலுக்காகத்தான் இந்த நிலைப்பாடு என்றாலும் கூட இதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.

    வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி நடந்தாலும் இரு முனை போட்டிதான் உண்மையான போட்டியாக இருக்க முடியும்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்று உள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    அ.தி.மு.க. தன்னுடைய பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகதான் நான் பார்க்கிறேன்.

    அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது. மறுபடியும் அதே பிழையை அது செய்கிறது.

    அ.தி.மு.க. தனித்து நின்றால் கூட அந்த வாக்கு வலிமை குன்ற போவதில்லை. அதை அ.தி.மு.க. உணராமல் இருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

    எனவே எத்தனை அணிகள் இங்கே உருவானாலும் கூட தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன.
    • பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு தினமும் 60 முதல் 65 பஸ்கள் வரை இயக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர்ந்து கோவை-ஊட்டி இடையே மேலும் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்குவது என்று கோவை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் முடிவு செய்து உள்ளது.

    இதுதொடர்பாக கோவை போக்குவரத்துக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து ஊட்டிக்கு தினமும் இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன், மேலும் கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகம் இருந்தால் மேலும் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.
    • நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.

    நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.

    விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

    மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,

    சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.

    நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.

    ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.

    யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் ஆன்லைன் மூலமாக ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்னை மாநகர் முழுவதும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இதில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலமாக லோட்டஸ் என்கிற செயலியில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக ஆகாஷ் ஜெயின், ஆகாஷ் குமார், சுரேஷ் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ரூ.19 லட்சம் பணம் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது, பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்றும் கூறினார்கள்.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது.இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.

    சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.

    மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×