என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
- குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதை ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.
அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகிவிட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வெளியூர்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் இன்று காலையில் சென்னை வந்து விட்டார்கள்.
இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களைத் தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள், செம்மலை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வைகைச் செல்வன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார். அக்குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளது.
கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
- படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் விஜய்க்கு 69-வது படமாக வர உள்ளது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்துள்ள பட்லாங்காடு, மங்களம்கொம்பு, கன்னிமார்துறை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
நடிகர் விஜயை காண நேற்று மதுரை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்களை போலவே கொடைக்கானல் மலைச்சாலையிலும் ஏராளமானோர் திரண்டனர்.
நேற்று இரவு சித்தரேவு, தாண்டிக்குடி மலை ரோடு வழியாக மங்களம்கொம்புவில் உள்ள தங்கும் விடுதிக்கு விஜய் வந்தார். அந்த சாலையில் இரவு வரை ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய் காரில் இருந்து இறங்காமல் சைகை காட்டி தனது அறைக்கு சென்று விட்டார். வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி வழியாக நடிகர் விஜய் வரலாம் என்பதால் செம்பட்டியில் இருந்து சித்தையன்கோட்டை, சித்தரேவு வழியிலும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவரது கார் மாற்றுப்பாதையில் சென்றதாக அறிந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று காலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே மலைச்சாலையில் காத்திருந்த ரசிகர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். வனப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்பதால் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும் நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்புடன் நடிகர் விஜய்க்கான பிரத்தியேக பாதுகாப்பு அலுவலர்களும் அங்கு இருந்தனர்.
படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சாலை கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவு வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்றதல்ல என்பதால் குறைந்த அளவு வாகனங்கள் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களில் ரசிகர்கள் வருவதை தடுக்கவும் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் நடிகர் ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படமும், லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படமும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தங்குவதற்கு கொடைக்கானலில் பல ஓட்டல்கள், விடுதிகள் உள்ளன. ஆனால் கீழ்மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள் வந்து செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால் தனியார் விடுதிகள் ஆங்காங்கு கட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, மதுரை நகரங்களில் உள்ளதைப்போல நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய காட்டேஜ்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் உள்ளன. அதன்படி மங்களம் கொம்புவில் நடிகர் விஜய் தங்கி உள்ள காட்டேஜ் ராஜபாளையத்தை சேர்ந்த தனி நபருக்கு சொந்தமான விடுதியாகும்.
இந்த விடுதியில் இதற்கு முன் கங்குவா படப்பிடிப்புக்காக வந்த சூர்யா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்காக வந்த நடிகர் லாரன்ஸ் ஆகியோர் தங்கினர். தற்போது 3வது நடிகராக நடிகர் விஜய் அங்கு தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும்.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நெல்லை:
தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மார்ச் 1 முதல் மே 31-ந் தேதி வரையிலான காலக்கட்டமே தமிழகத்திற்கு கோடைகாலமாகும். தற்போது ஏப்ரல் வரையிலான காலத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி வந்தது. மேலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக மழையும் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும். அதாவது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வெப்பநிலை குறைவாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை சற்று குறையும். காரணம் மேற்கு திசை காற்று வலுவாக வீசும் என்பதால் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்.
இதே வேளையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அதாவது கிழக்கு திசை கடல் காற்று வீசுவது நின்று மேற்கு திசை காற்று வீச தொடங்கும். வறண்ட மேற்கு திசை காற்று வீசும் என்பதால் சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.
மேலும் மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.ஆனால் கடந்த ஆண்டை போல இருக்காது.
மழையை பொறுத்தவரை மே மாதம் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமழை பெய்யும். குறிப்பாக மே 1-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான காலத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு கோடைமழையை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களிலும் மே மாதத்தில் நல்ல மழை பெய்யும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மே முதல் 2 வாரத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பதிவாகும். அதே வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு உள்ளது. முதல் 2 வாரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக இருந்தாலும் மே 3,4 வாரங்களான அதாவது மே 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலான காலத்தில் தென் மாவட்டங்கள் ஓரளவு நல்ல மழையை பெறும்.
மேலும் வெப்பநிலை அதிகமாக உள்ள நாட்களில் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.74 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, 'அந்தர் பல்டி'யாக எவ்வளவு உயர்ந்ததோ அதே அளவுக்கு குறைந்தது. அந்த வகையில், 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200 குறைந்து, ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாள், ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 5-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தொடர்ந்து 4 நாட்கள் நிலையாக அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மாதம் 28-ந்தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அன்றைய தினம், ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கு விற்கப்பட்டது. 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியையொட்டி, 30-ந் தேதியும் (அதாவது நேற்றுமுன்தினம்) அதே விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம், பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காண்பித்தார்கள். இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. ஒருகிராம் தங்கம் ரூ.205-ம், ஒரு சவரன் ரூ.1,640-ம் குறைந்து முறையே ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 775, ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.1,800 குறைந்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200
30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
29-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
28-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-05-2025- ஒரு கிராம் ரூ.109
30-04-2025- ஒரு கிராம் ரூ.111
29-04-2025- ஒரு கிராம் ரூ.111
28-04-2025- ஒரு கிராம் ரூ.111
27-04-2025- ஒரு கிராம் ரூ.112
- காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இதனால் நேற்று 2500 கனஅடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தமைறைவாகி விட்டனர்.
- கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தமைறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிறுப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த் (30), அஜித் (24) மா.புடையூர் வடிவேல் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (26) என்பது தெரிய வந்தது.
இவர்கள் செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தோட்டத்து வயலில் உள்ள வீட்டின் விஸ்தாரமான அறையின் ஒரு பகுதியை தடுத்து மற்றொரு அறையை உருவாக்கி அதில் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்துள்ளது.
மாதத்திற்கு 2 நாட்கள் இரவில் மட்டும் அச்சடித்து விட்டு மற்ற நாட்களில் அறையை பூட்டி வைத்துள்ளனர். வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வருகிறது.
இந்த நிலையில் கள்ளநோட்டு அச்சடிப்பு வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார்.
இந்த வாலிபர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தது தெரிய வந்தது. சென்னை சென்ற தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் ராமநத்தம் பகுதியில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டை கையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட வட மாநில வாலிபரை தனிப்படை போலீசார் ராமநத்தம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் பிரமுகர் செல்வம் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி இருந்தனர்.
அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளி செல்வம் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அங்கு விரைந்து சென்று செல்வத்தை கைது செய்தனர். அவருடன் மேலும் 5 பேரும் சிக்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் தனிப்படையினர் ராமநத்தம் அழைத்து வந்து கொண்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் சுமார் ஒரு மாதத்திற்கு பின் முக்கிய குற்றவாளி சிக்கி இருப்பது ராமநத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்று இரவு இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
- படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவரது மனைவி விஜயா (57). இவர்களது மகன் பார்த்திபன் (32) காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
ராஜேந்திரனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தர் (65) என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திரன் குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும், சுந்தர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும் அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துமாயன் (80) என்பவருக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தாய் விஜயா, சுந்தர், அவரது மகன் சூர்யா ஆகியோரும் படுகாயம் அடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது. மீண்டும் அங்கு மோதல் உருவாகாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மருத்துவ நோயறிதலுக்கான திறன்களில் ஒரு புதிய தரஅளவுகோலை இது நிறுவும்.
- ஐந்து முக்கியமான ஆய்வகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படும்.
அப்போலோ டயக்னாஸ்டிக்ஸ், சென்னை மாநகரில் இன்று அதன் டிஜி-ஸ்மார்ட் மைய மேற்கோள் ஆய்வகத்தை (CRL) இன்று தொடங்கியிருக்கிறது.
நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்துவதற்கு பிழைகள் இல்லாத இயக்கச் செயல்பாடுகளுடன் நோயறிதலுக்கான காலஅளவை மிகப்பெரிய அளவில் விரைவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் முற்றிலும் தானியக்கச் செயல்பாடு கொண்ட ஒரு ஆய்வகம் இது.
ஆய்வகத்திற்கு வரும் மாதிரிகளை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கும் காலஅளவில் (TAT) 60% குறைப்பது என்ற நோக்கம் கொண்ட இந்த முன்னோடித்துவ முன்னெடுப்பானது மிக நவீன தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துகிறது.
நோயாளிகளின் அறிக்கைகளை மிக விரைவாகவும், துல்லியமாகவும் வழங்குவதன் வழியாக மருத்துவ நோயறிதலுக்கான திறன்களில் ஒரு புதிய தரஅளவுகோலை இது நிறுவும்.
45,000 சதுர அடி பரப்பளவுள்ள இந்த மிக நவீன ஆய்வகமானது, மருத்துவ வேதியியல், நொதி எதிர்ப்பு மதிப்பீடு, சீரவியல், இரத்தவியல் மற்றும் ஹெமஸ்டாசிஸ் என்ற ஐந்து முக்கியமான ஆய்வகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக செயல்படும்.
ஒருங்கிணைக்கப்பட்ட, டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுகிற மற்றும் முற்றிலும் தானியக்க செயல்பாடு கொண்ட மைய ஆய்வகமாக இது இருக்கும். மேம்பட்ட ரோபோடிக்ஸ், உயர் துல்லிய திறன் கொண்ட கேமராக்கள், சிறப்பான அல்கோரிதம்கள் மற்றும் எந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நேர்த்தியான ஒருங்கிணைவு, ஆய்வு பரிசோதனை செயல்பாடுகளில் மேம்படுத்தும், பிழைகளை பெருமளவு குறைக்கும் மற்றும் மருத்துவ விளைவுகளை கணிசமாக உயர்த்தும்.
டிஜி-ஸ்மார்ட் லேப்-ன் மிக நவீன தானியக்க செயல்பாடானது, ஒவ்வொரு நாளும் 100,000-க்கும் அதிகமான மாதிரிகள் மிக துல்லியமாக ஆய்வு செய்யப்படுவதை அனுமதிக்கும்.
இதன் மூலம் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யப்படும்.
இதுகுறித்து அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர். பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:-
நோயறிதல் செயல்பாட்டின் திறமை மற்றும் துல்லியத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக எமது டிஜி-ஸ்மார்ட் லேப் இருக்கும். முன்னோடித்துவ புத்தாக்கத்தின் முதல் வரிசையில் அப்போலோ இருந்து வரும் நிலையில் இந்த டிஜி-ஸ்மார் லேப்-ன் உண்மையான ஆற்றல் அதன் முழுமையான, விரிவான அணுகுமுறையில் அடங்கியிருக்கிறது.
எமது பரிசோதனையக செயல்பாடுகளை சீராக்கி நெறிப்படுத்த டிஜி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
இதன் மூலம் துல்லியத்தின் மிக உயர்ந்த அளவுகள் எட்டப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஐந்து மிக முக்கிய ஆய்வக பிரிவுகளை மேம்பட்ட தானியக்க செயல்பாடுகளின் மூலம் நேர்த்தியாக ஒருங்கிணைப்பதன் வழியாக விரைவான மற்றும் அதிக துல்லியமான பரிசோதனை முடிவுகளை இந்த ஆய்வகம் வழங்குகிறது.
நோயாளிகளுக்கு சிறப்பான விளைவுகள் கிடைக்குமென்பதே இதன் நேரடி அர்த்தமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த புத்தாக்க செயல்திறன் கொண்ட ஆய்வகமானது சுகாதாரப் பராமரிப்பு தொழில்துறையில் ஒரு மிக முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இருக்கிறது.
நோயாளிகளின் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்தவும், நோயறிதல் செயல்முறைகளை சீரமைத்து நெறிப்படுத்தவும் மிக நவீன தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதில் அப்போலோ டயக்னாஸ்டிக் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.
- புலி பதுங்குவது பாய்வதற்குதான்.
- ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
மே தினத்தை முன்னிட்டு, அமமுக சார்பில் இன்று ராணிப்பேட்டையில் மே தின கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர்," புலி பதுங்குவது பாய்வதற்குதான்" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," புலி பதுங்குவது பாய்வதற்குதான். ஆகையால் என்னை யாரும் குறைத்து எடைபோட வேண்டாம்.
ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.
- திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.
மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், செவிலியர் சித்ராவை கொலை செய்ததாக அவரது கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் வைத்து ராஜேஷ் கண்ணாவை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
- பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது.
- காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம்.
அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார்.
மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் ஆர்.ப்ரியக்குமார், விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
காளிப்பிரியன் ஊழல் செய்திருந்ததாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.
- முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம் ஒருவர் அத்துமீறியுள்ளார்.
- சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்
இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர்
ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது






