என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயை காண இரவு வரை காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள்- தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீஸ்
- படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் இந்த படம் விஜய்க்கு 69-வது படமாக வர உள்ளது.
ஏற்கனவே பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அடுத்துள்ள பட்லாங்காடு, மங்களம்கொம்பு, கன்னிமார்துறை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடக்கும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
நடிகர் விஜயை காண நேற்று மதுரை விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்களை போலவே கொடைக்கானல் மலைச்சாலையிலும் ஏராளமானோர் திரண்டனர்.
நேற்று இரவு சித்தரேவு, தாண்டிக்குடி மலை ரோடு வழியாக மங்களம்கொம்புவில் உள்ள தங்கும் விடுதிக்கு விஜய் வந்தார். அந்த சாலையில் இரவு வரை ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய் காரில் இருந்து இறங்காமல் சைகை காட்டி தனது அறைக்கு சென்று விட்டார். வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி வழியாக நடிகர் விஜய் வரலாம் என்பதால் செம்பட்டியில் இருந்து சித்தையன்கோட்டை, சித்தரேவு வழியிலும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அவரது கார் மாற்றுப்பாதையில் சென்றதாக அறிந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இன்று காலை முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே மலைச்சாலையில் காத்திருந்த ரசிகர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். வனப்பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என்பதால் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.
மேலும் நடிகர் விஜய் தங்கி இருந்த தனியார் விடுதிக்குள்ளும், வெளியேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்புடன் நடிகர் விஜய்க்கான பிரத்தியேக பாதுகாப்பு அலுவலர்களும் அங்கு இருந்தனர்.
படப்பிடிப்பை காண ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் அந்த சாலையிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சாலை கனரக வாகனங்கள் மற்றும் அதிக அளவு வாகனங்கள் வந்து செல்வதற்கு ஏற்றதல்ல என்பதால் குறைந்த அளவு வாகனங்கள் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்களில் ரசிகர்கள் வருவதை தடுக்கவும் முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் நடிகர் ஆர்யா நடித்த கடம்பன் திரைப்படமும், லாரன்ஸ் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படமும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் தங்குவதற்கு கொடைக்கானலில் பல ஓட்டல்கள், விடுதிகள் உள்ளன. ஆனால் கீழ்மலை கிராமங்களில் நடக்கும் படப்பிடிப்பின்போது நடிகர்கள் வந்து செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால் தனியார் விடுதிகள் ஆங்காங்கு கட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக சென்னை, மதுரை நகரங்களில் உள்ளதைப்போல நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய காட்டேஜ்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் உள்ளன. அதன்படி மங்களம் கொம்புவில் நடிகர் விஜய் தங்கி உள்ள காட்டேஜ் ராஜபாளையத்தை சேர்ந்த தனி நபருக்கு சொந்தமான விடுதியாகும்.
இந்த விடுதியில் இதற்கு முன் கங்குவா படப்பிடிப்புக்காக வந்த சூர்யா, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்திற்காக வந்த நடிகர் லாரன்ஸ் ஆகியோர் தங்கினர். தற்போது 3வது நடிகராக நடிகர் விஜய் அங்கு தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.






