என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
    • திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

    அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?

    பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?

    திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டுமொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார். 

    • தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
    • அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராக்கியப்பன், பாக்கியம் ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ந்தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

    அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
    • போதைப்பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான்.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அதிகார வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை காப்பதற்காக வேலை நேரத்தை 8 மணி நேரமாக உருவாக்கி, தொழிலாளர் நலன் காக்க இந்த மே தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் அதி.மு.க. சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம். இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாட்டில் தான் மே தினத்தை நமது முன்னோர்கள் கொண்டாடினர். உழைக்கும் வர்க்கத்தை மேற்கோள் காட்ட மெரினாவில் சிலை வைத்தனர்.

    விடியல் தருவோம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் 5 சதவீத சம்பள உயர்வு தான் கொடுத்து உள்ளனர். அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை அறிவித்து வாயில் தான் வடை சுடுகிறார் .

    பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வை எப்போது விரட்டலாம் என மக்கள் காத்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் மட்டும் தான் 234 தொகுதியிலும் ஜெயிப்போம் என கூறிவருகிறாரே தவிர மக்களை நினைக்கவில்லை.

    பா.ஜ.க.வுடன் அதி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் மு.க.ஸ்டாலின் கொதித்து பேசுகிறார். நீங்க கூட்டணி வைத்தால் மட்டும் இனிக்கும். கூடாநட்பு கேடில் முடியும் என உங்கள் அப்பாவே காங்கிரஸ் கட்சி குறித்து பேசியுள்ளார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தீர்கள்.

    தமிழ்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கும் கூட்டணியில் உள்ள மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை மக்களுக்கு ஆதரவாகவும், ஆட்சிக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறதா? தி.மு.க.வுக்கு ஆதரவாகத்தான் கம்யூனிஸ்டு கட்சிகள் செயல்படுகிறது. தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்கிறேன் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதாக போராட்டம் நடத்தி வரு கின்றனர்.

    தி.மு.க. தலைமையிலான அமைச்சரவை ஜாமின் பெற்ற அமைச்சரவை. அமைச்சர்கள் முழுவதும் வாய்தாவுக்கு சென்று வருகிறார்கள். தி.மு.க. அமைச்சர்களை பொறுத்த வரையில் கலெக்ஷன், கரப்சன் தான். அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பெண்களை இழிந்து பேசுவதும், தாழ்த்தப்பட்ட பெண் கவுன்சிலரை அவமரியாதை செய்வதும், பெண்களை ஓசி என கூறியதற்கு இன்றைக்கு எங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் பொன்முடி என்றைக்கோ ஜெயிலுக்கு போயிருப்பார்.

    பாரத பிரதமரே இந்திய முதல்வர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாராட்டிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.

    போதைப் பொருள் கடத்தலில் இருப்பவர்கள் எல்லாம் தி.மு.க.வினர் தான். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் தமிழக காவல்துறை இருந்து வருகிறது. உண்மையான விடுதலை, விடியலை வரும் 2026-ல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உழைப்பாளர் தினத்தில் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
    • கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசு அறிவித்து, ஒரு வாரமாகியும் அவற்றின் விலைகள் குறைக்கப்படவில்லை.

    கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களை அமைச்சர் துரைமுருகன் கடந்த 27-ந்தேதி அழைத்துப் பேசினார். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன் ஒன்றுக்கு ரூ.33 எனக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

    கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயர்ந்து, வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நல்லதல்ல.

    எனவே, அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான்.
    • சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார்.

    திருப்பூர்:

    மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 30). இவரது மனைவி சித்ரா(27). இவர்களுக்கு 9 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, சித்ரா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்த தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

    மேலும் சித்ரா திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பல் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சித்ரா தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சித்ராவை அவரது கணவர் ராஜேஷ்கண்ணா தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்ற ராஜேஷ் கண்ணாவை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவி சித்ராவை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான். இதனால் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தோம். 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் காதலித்து திருமணம் செய்ததால் எங்களது 2 குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக எங்கள் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் நான் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். மேலும் சித்ராவின் உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் சந்தேகப்பட்டேன். இதனால் சித்ரா அவரது உறவினர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்து வந்தார். இது எங்களுக்குள் பிரச்சனையை அதிகப்படுத்தியது.

    தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் சித்ரா என் மீது கோபப்பட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்று விட்டார். சித்ரா பிரிந்து சென்றதால் மிகவும் கவலையடைந்தேன்.

    அவரை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், கருத்தடையும் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் வர மறுத்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நானே திருப்பூர் சென்றேன். அங்கு சித்ராவிடம் நான் இனிமேல் தகராறு செய்யமாட்டேன். நாம் மதுரைக்கு குழந்தைகளுடன் சென்று வாழ்வோம் என தெரிவித்தேன். அதற்கு சித்ரா கொஞ்ச நாள் கழித்து செல்வோம் என தெரிவித்தார். இது எனக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 3 நாட்களாக திருப்பூரில் சித்ராவுடன் இருந்தேன். குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று வந்தோம். இதனிடையே சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார். சந்தேகமடைந்த நான் சித்ராவின் செல்போனை பார்த்தபோது அதில் வாலிபரின் புகைப்படங்கள் இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வர நேரமாகும் என்றதால் நான் ஆஸ்பத்திரிக்கு சென்று சித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் மாமனார்-மாமியாரிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு வருகிறோம் என்று கூறி விட்டு 2 பேரும் வெளியே சென்றோம்.

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு தேவையான இனிப்புகளை வாங்கி கொண்டு திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி பின்புறம் உள்ள மாமனார் வீட்டிற்கு சித்ராவுடன் சென்றேன். தோளில் கையை போட்டு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்றோம்.

    அப்போது வாலிபருடனான தொடர்பு குறித்து சித்ராவிடம் கேட்டேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சித்ராவை சரமாரி தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்திற்கு சித்ராவை தூக்கிச்சென்று தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தேன்.

    போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் சித்ராவின் முகத்தை சிதைத்தேன். பின்னர் திருப்பூரில் இருந்து பஸ் ஏறி மதுரைக்கு சென்றேன். ஆனால் போலீசார் நாங்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை வைத்து என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்பட 10 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 1 மணி நேரத்துக்கு இரு சக்கரவாகனங்களுக்கு 5 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், பஸ்-வேன்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதற்கான ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

    • பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87,59,587 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 30.04.2025 அன்று 3,49,675 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, ஏப்ரல் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 6,15,850 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,447 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 128 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 39,11,883 பயணிகள் (Online QR 1,45,753; Paper QR 19,12,904; Static QR 2,65,787; Whatsapp - 5,83,351; Paytm 4,09,358; PhonePe – 3,29,949; ONDC – 2,64,781), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 42,30,279 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளது. 

    • 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
    • சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?

    திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:

    1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

    9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

    29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

    13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

    14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

    இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?

    தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



    • கடந்த 19-ந்தேதி 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • பயணிகள் கோரிக்கையை ஏற்று பீக் ஹவர்களில் கூடுதல் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 19-ந்தேதி 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இது தொடர்பாக பயணிகளிடம் தெற்கு ரெயில்வே கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான பயணிகள் ஏ.சி. ரெயில் சேவையை வரவேற்றனர். அதேவேளையில் இயக்கப்படும் நேரம் தொடர்பாக தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

    இதனடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    (49001) தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 7.35 மணிக்கு சென்றடையும்.

    (49002) செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை 9.25 மணிக்கு வந்தடையும்.

    (49003) ரெயில் சென்னை கடற்கரையில் இருநது 9.41 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு சென்றடையும்.

    (49004) தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு 13.55 மணிக்கு வந்தடையும்.

    (49005) சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு வந்தடையும்.

    (49006) செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை மாலை 6 மணிக்கு வந்தடையும்.

    (49007) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6.18 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டை இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.

    (49008) செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 10.50 மணிக்கு வந்தடையும்.

    இதுவரை 6 வேளைகளில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 8 வேளைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் கோரிக்கையை ஏற்று பீக் ஹவர்களில் கூடுதல் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை 6 வேளைகளில் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 8 வேளைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

    இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசி மோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலி கொடி, 5 பவுன் வளையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.

    ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.

    இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி விவேகானந்தம் தலைமையில் 8 தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோன்று திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள் அதே பாணியில் தற்போது வயதான தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
    • கட்சி ரீதியாக பெரிய அளவில் உள்ள ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டார்.

    காலை 10.30 மணி அளவில் கலைஞர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான காலமே உள்ளதால் அது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    கட்சி ரீதியாக பெரிய அளவில் உள்ள ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏதாவது புகார் இருந்தால் அதுபற்றி கூட்டத்தில் கேட்கப்படும் என தெரிகிறது.

    இது மட்டுமின்றி தேர்தல் பிரசார பணிகளை முடுக்கி விடுவது பற்றியும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாக மேயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
    • மாநகராட்சியே கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அன்னம் தரும் அமுதக்கரங்கள் என்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு பதிலாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டார்.

    புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசும் என்பதால் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தூய்மை செய்து அகற்றி இருந்தனர்.

    இருப்பினும் துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாக மேயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இது குறித்து பேசிய மேயர் பிரியா சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூட்டையிலும் சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் பாதிக்கு பாதி இருக்க வேண்டும். மாநகராட்சியே கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம்.

    இந்த புகார் குறித்து உரிய ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும். புளியந்தோப்பு ஆடுதொட்டியின் பின்பகுதி என்பதால் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

    இந்த மாதிரியான பிளீச்சிங் பவுடர் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய தரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    மீண்டும் அதே இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தொழிலாளி ஒருவர் பிளீச்சிங் பவுடர் மூட்டையில் கொண்டு வந்து பெண் ஒருவர் மூலமாக ஆடுதொட்டி பின்புறம் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் தெளிக்கப்பட்டது.

    ×