என் மலர்
நீங்கள் தேடியது "செவிலியர் கொலை"
- எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான்.
- சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார்.
திருப்பூர்:
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா (வயது 30). இவரது மனைவி சித்ரா(27). இவர்களுக்கு 9 வயதில் மகள், 1½ வயதில் மகன் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே, சித்ரா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் திருப்பூரில் வேலை பார்த்து வந்த தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
மேலும் சித்ரா திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள பல் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சித்ரா தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சித்ராவை அவரது கணவர் ராஜேஷ்கண்ணா தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூரில் இருந்து மதுரைக்கு தப்பி சென்ற ராஜேஷ் கண்ணாவை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மனைவி சித்ராவை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் சித்ராவுக்கும் சொந்த ஊர் மதுரைதான். இதனால் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தோம். 2 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் காதலித்து திருமணம் செய்ததால் எங்களது 2 குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக எங்கள் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் நான் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தேன். மேலும் சித்ராவின் உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் சந்தேகப்பட்டேன். இதனால் சித்ரா அவரது உறவினர்கள் யாரையும் வீட்டிற்கு அழைத்து வராமல் இருந்து வந்தார். இது எங்களுக்குள் பிரச்சனையை அதிகப்படுத்தியது.
தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் சித்ரா என் மீது கோபப்பட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்று விட்டார். சித்ரா பிரிந்து சென்றதால் மிகவும் கவலையடைந்தேன்.
அவரை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன், கருத்தடையும் செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் வர மறுத்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நானே திருப்பூர் சென்றேன். அங்கு சித்ராவிடம் நான் இனிமேல் தகராறு செய்யமாட்டேன். நாம் மதுரைக்கு குழந்தைகளுடன் சென்று வாழ்வோம் என தெரிவித்தேன். அதற்கு சித்ரா கொஞ்ச நாள் கழித்து செல்வோம் என தெரிவித்தார். இது எனக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.
இதையடுத்து 3 நாட்களாக திருப்பூரில் சித்ராவுடன் இருந்தேன். குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் சென்று வந்தோம். இதனிடையே சித்ராவின் செல்போனுக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி போன் செய்தார். சந்தேகமடைந்த நான் சித்ராவின் செல்போனை பார்த்தபோது அதில் வாலிபரின் புகைப்படங்கள் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வர நேரமாகும் என்றதால் நான் ஆஸ்பத்திரிக்கு சென்று சித்ராவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். பின்னர் மாமனார்-மாமியாரிடம் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி விட்டு வருகிறோம் என்று கூறி விட்டு 2 பேரும் வெளியே சென்றோம்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு தேவையான இனிப்புகளை வாங்கி கொண்டு திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி பின்புறம் உள்ள மாமனார் வீட்டிற்கு சித்ராவுடன் சென்றேன். தோளில் கையை போட்டு இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு சென்றோம்.
அப்போது வாலிபருடனான தொடர்பு குறித்து சித்ராவிடம் கேட்டேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சித்ராவை சரமாரி தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து பூம்புகார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்திற்கு சித்ராவை தூக்கிச்சென்று தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தேன்.
போலீசாருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க கல்லால் சித்ராவின் முகத்தை சிதைத்தேன். பின்னர் திருப்பூரில் இருந்து பஸ் ஏறி மதுரைக்கு சென்றேன். ஆனால் போலீசார் நாங்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவானதை வைத்து என்னை கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர் பல்லடம் சாலை கலெக்டர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் இடிந்த நிலையில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே பெரிய கல் ஒன்று கிடந்தது. இதனால் மர்மநபர்கள் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து இளம்பெண்ணை கொன்றது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்தார். இதனால் அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா (வயது 28) என்பதும், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்ததுள்ளது.
சித்ரா தனது கணவன் ராஜேஷ் கண்ணாவை விட்டு பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்து வந்தார்.
மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. ராஜேஷ் கண்ணாவும் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், செவிலியர் சித்ராவை கொலை செய்ததாக அவரது கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் வைத்து ராஜேஷ் கண்ணாவை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சுரேஷ் தனது மனைவியை பிரிந்து திண்டுக்கல்லில் தனியாக வசித்து வருகிறார். அவருடன் குழந்தைகளும் வசித்து வருகின்றனர். ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் செல்வி தனியாக வசித்து வந்தார். இருந்தபோதும் கணவன்-மனைவி 2 பேரும் தனது குழந்தைகள் குறித்து அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு சுரேஷ் அவரது மனைவி செல்விக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக செல்போன் சுவிட்ச்ஆப் ஆன நிலையில் இருந்தது. இதனையடுத்து அவரது உறவினர்களிடம் தெரிவித்து வீட்டிற்கு சென்று செல்வியை பார்த்து வருமாறு கூறி உள்ளார்.
வீடு பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்தனர். அப்போது செல்வி வீட்டில் உள்ள பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார். உறவினர்கள் செல்வி இறப்பு குறித்து சுரேசிடம் தெரிவிக்கவே அவர் அலறி துடித்து குழந்தைகளுடன் ஓடி வந்தார்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. டி.எஸ்.பி. தங்ககிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






