என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
- வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை நேற்று சிகிச்சைக்காக அழைத்து வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியிருந்ததையும், ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு இருந்ததும் தெரிந்தது.
உடனே சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இதுகுறித்து கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பொன்மணிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பொன்மணி மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வாலிபரிடமும், சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. அதன் விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தன்னுடைய தாயார் மற்றும் 19 வயதுடைய இளம்பெண்ணுடன் கடந்த ஆண்டு கோபி கச்சேரிமேடு சீத்தாம்மாள் காலனியில் உள்ள வீட்டுக்கு குடிவந்துள்ளார். இளம்பெண் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது வாலிபருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வாலிபர் திருப்பூரில் இருந்து கோபிக்கு குடிவந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வாலிபர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன்பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே வைத்து பார்த்த வாலிபருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படவே விஷயம் வெளியில் வந்துவிட்டது.
இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் வாலிபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு வாலிபரின் தாய் குழந்தையை கண்காணித்து வந்தது தெரிந்தது. மேலும் வாலிபர் யூடியூப் பார்த்து பிரவசம் பார்த்த அறையில் இருந்து தொப்புள் கொடியை கைப்பற்றினர். தொடர்ந்து வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- “இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே” என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
- மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு.
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், இன்று வெளியாகும் பொதுத்தேர்வு முடிவு மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுகிறோம்.
முதலமைச்சர் அவர்களின் கூற்றுப்படி "இது மாணவர்களுக்கான மதிப்பீடு கிடையாது. தேர்வுக்கான மதிப்பீடு மட்டுமே" என்பதை மாணவச் செல்வங்களுக்கு அன்போடு தெரிவிக்கிறேன்.
மதிப்பெண்களை அளவாக கொள்ளாமல், தங்களின் திறமைகள் சார்ந்த துறைகளில் மாணவச் செல்வங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் எனும் நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் உண்டு. மாணவர்களே… உங்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் ஆளுமைமிக்க நாற்காலி காத்துக்கொண்டிக்கிறது. வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.
- தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் புண்ணிய மூர்த்தி. இவரது மகள் ஆர்த்திகா. பாபநாசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த ஆர்த்திகா சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதினார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்திகா வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆர்த்திகாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பச்சைப்பொய்யை திமுக சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்.
- ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி.
அதிமுகதான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-ஆக உயர்த்தும் சட்டத்தை 20.02.2016 அன்று நிறைவேற்றியது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தில் கூட வாய் கூசாமல் பச்சைப்பொய்யை திமுக சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்!
பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே நடக்கும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி!
நாசமாய்போன நான்காண்டு முடியட்டும் இதோடு!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இசையமைப்பாளர் இளையராஜா பாரட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர்,"மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி" என்று குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறுகிறது.
- மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது.
சித்திரை முழு நிலவு மாநாட்டை ஒட்டி அன்புமணி ராமதாசை முன்னிலைப்படுத்தும் வகையில் இருந்த பாடலும், அடுத்ததாக அய்யா என்று சொல்லும் போதே ஆயிரம் கோடி மகிழ்ச்சியடா என்ற பாடலையும் பா.ம.க வெளியிட்டது.
பின்னர், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கான இலட்சினையை (LOGO) பாமக வெளியிட்டுள்ளது
மாநாட்டிற்கான ஏற்பாடுகளை பாமகவினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 11ம் தேதி ஞாயிறு அன்று ECR, OMR சாலைகளை பொது மக்கள் பயன்படுத்த வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
- தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும் என்றும் இது இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.
ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.
- இந்தியாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
- பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் ராணுவ நவடிக்கையை பாராட்டுகிறேன். பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிளவுபடாத, ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது.
மத்திய அரசு எடுத்த தீர்க்கமான ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் ஜெய்ஹிந்த்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
- புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்த தே.மு.தி.க. மேல்-சபை எம்.பி. பதவி தொடர்பாக அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கூட்டணியில் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறது.
இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை தி.மு.க. கூட்டணி அல்லது விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பலர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
தே.மு.தி.க. இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலைய செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்களுடன் 4 துணைச் செயலாளர்களும் மாநில அளவிலான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதேபோன்று மாணவரணி, தொண்டரணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, மீனவர் அணி உள்பட 16 அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் மாநில அளவில் ஒரு செயலாளர் மற்றும் நான்கு துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்படி புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 110 பேர் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு புதிய நிர்வாகிகள் கட்சியினரோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே பொறுப்பில் உள்ள பழைய நிர்வாகிகள், மூத்த மாவட்ட செயலாளர்கள் ஆகியோரையெல்லாம் அனுசரித்து தே.மு.தி.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா வலியுறுத்தி இருக்கிறார். தே.மு.தி.க. பொருளாளரான எல்.கே. சுதீஷ், இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோரும் கூட்டத்தில் பேசினார்கள். அவர்களும் புதிய நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.
இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகரன் பேசும் போது, தே.மு.தி.க. இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் விரைவில் இதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். புதிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணியளவில் தொடங்கி 2 மணி நேரம் வரையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அடுத்தடுத்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்குவதற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா முடிவு செய்திருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
- பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்நிலையில், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேசுயுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" என்றார்.
- பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
- முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருச்சி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.
திருச்சி விமான நிலையத்தில்அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 11.30 மணியளவில் துவாக்குடி ஜி.பி.டி. வளாகத்தில் ரூ.69 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதில் ஹைடெக் ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விடுதி வசதி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த விழா முடிந்து டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் நாளை மாலை 5 மணியளவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் அலுவலகம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு, தில்லை நகர் வழியாக கலைஞர் அறிவாலயம் செல்கிறார். கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். அதன் பின்னர், அரசு விருந்தினர் மாளிகை சென்று ஓய்வு எடுக்கிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்புரம் நால்ரோடு சந்திப்பு, கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் வழியாக பிரம்மாண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பகுதிக்கு செல்கிறார்.
பின்னர் முதல் நிகழ்வாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள தந்தை பெரியார் உருவச்சிலையை திறந்து வைத்து ரூ.236 கோடி மதிப்பீட்டில் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
அதனைத்தொடர்ந்து, அதற்கு எதிர்ப்புறம் ரூ.129 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தை திறந்து வைத்து, அண்ணா உருவச்சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த பஸ் முனைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.
பின்னர், ரூ.408 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை' திறந்து வைத்து, பஸ் முனைய வளாகத்தை முழுவதுமாக சுற்றிப்பார்த்து, பொது மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து, பஸ் முனையத்தின் முதல் தளத்தில் நகர பஸ்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் முனையத்திற்கு அருகில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பட்டாக்கள் வழங்குகிறார். அதன்பின் அவர் ரூ.463 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, ரூ.277 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.830 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த விழா நிறைவுற்றதும் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு செல்கிறார்.
பின்னர் மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், எம்.ஐ.இ.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், அன்று இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதலமைச்சரின் 2 நாள் சுற்றுப்பயணத்தையடுத்து திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்க தி.மு.க.வினர் மாநகர் முழுவதும் கட்சிகொடிகளையும், வரவேற்பு தோரணங்களையும், பிரம்மாண்ட பேனர்களையும் கட்டி வருகிறார்கள். மேலும் பஞ்சப்பூரில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.






