என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
    • பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கத்தில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்காமல் பொதுமக்களை கைக் குழந்தையுடன் அலைக்கழித்த திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாநகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். இதற்கு மிகப் பெரிய உதாரணம். இந்த வாரம், ஜூன் 4ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள், பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம்.

    சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

    இது ஒருபுறம் இருக்க கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனைவைத் தருகிறது.

    பல மணி நேரம் காத்திருந்து, இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அந்த நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம், பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

    பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றிச் சிறிதேனும் அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு நடந்துகொள்வார்களா?

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாத்து கடும் கண்டனத்துக்கு உரியது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை.
    • கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர்.

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதன் அடிப்படையில், நோய்களை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

    அதாவது, மருத்துவமனைகளை உருவாக்குவது, மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவது. அரசு மருத்துவமனைகளில் ஆசிரியர்களை உடனுக்குடன் நியமிப்பது, போதிய மருத்துகளை இருப்பில் வைப்பது போன்ற வசதிகளை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.

    அப்பொழுதுநான் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மேம்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவம் கற்றுத்தர போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

    மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட ஏதுவாக மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். ஆனால், இவற்றை தி.மு.க. அரசு சரியாக செய்து தருவதில்லை.

    ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அரசுக் கல்லூரிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை சுட்டிக்காட்டி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று வினவுவதும், அதற்கு மழுப்பலாக அரசு தரப்பில் பதில் அளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

    அரசு சார்பில் அளிக்கப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை என்றாலும் கூடுதல் மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்புதல் தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்து வருகிறது.

    உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக துவங்கப்பட்ட பத்து மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்தித் தரும்படி தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டும், ஆசிரியர்கள் பற்றாக்குறை மருத்துவக் கட்டமைப்பின்மை போன்றவற்றைச் சுட்டிக்காட்டி கூடுதலாக 500 மருத்துவ இடங்களுக்கு அனுமதி தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்துள்ளது.

    கூடுதலாக 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி தர மறுத்ததற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே ஆகும். உடனுக்குடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, கட்டமைப்புகளை அவ்வப்போது மேம்படுத்தி இருந்தால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 500 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கும்.

    இதன்மூலம். கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர். தி.மு.க அரசின் மெத்தனப் போக்கு காரணமாக 500 மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    வருகின்ற ஆண்டிலாவது, கூடுதல் மருத்துவ இடங்களைப் பெறும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
    • கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

    கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

    • இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
    • சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி!

    கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.

    சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!

    இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.

    பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?

    சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
    • நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேம்பால்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில் கர்நாடக மாநிலத்சை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    காலிமனை வைத்துள்ள உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அபராதம் விதித்தும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டிடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க காரணமாக இருக்கும் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி குப்பைகள் தேங்காமால் பார்த்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார்.
    • பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96.

    பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.

    1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவு பட்டுக்கோட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. தினகரன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

    • தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.
    • பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி வடகரையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாக வாஜனம், பூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து, தஞ்சை பெரிய கோவிலில் இருந்து யானை மீது தீர்த்தக்குடம் வைத்து மகா மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடத்தை தலையில் சுமந்தவாறு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, மாலை முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடைபெற உள்ளது. முறையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு ஆகி கோவிலை சுற்றி வலம் வந்து விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, கற்பக விநாயகர், மகா மாரியம்மன், முனீஸ்வரர், நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது.

    முடிவில் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சீனிவாசபுரம் சேவப்பநாயக்கன்வாரி தெருவாசிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
    • ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

    இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துடியலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும்.

    கோவை:

    துடியலூர் துணை மின்நிலையத்தில் வருகிற 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    துடியலூர் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    கு.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி. நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிக்கவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வேணுகோபால் மருத்துவமனையின் ஒரு பகுதி.

    • ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

    தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது என்றும் அது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

    இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:

    1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.

    2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.

    3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

    4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.

    இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

    முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.
    • ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.

    சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    திமுக மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் 2026ம் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கினார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும் - நமது #DravidianModel அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ஓரணியில் தமிழ்நாடு என திமுக-இல் இணைத்திட, சொல்லாற்றல் - செயலாற்றல் மிக்க செயல்வீரர்களான மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்!

    களம்2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் கழகத் தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×