என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தொற்று"

    • இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது
    • இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    கொரோனா தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் நீண்டகால விளைவுகள் குறித்த கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சமீபத்திய ஆய்வில், கோவிட் தொற்று, அது லேசானதாக இருந்தாலும், நமது இரத்த நாளங்களை முன்கூட்டியே 5 வருடங்கள் வயதாக செய்து பலவீனப்படுத்துகிறது என்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

    ஆண்களை விட பெண்களில் இந்த விளைவு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பிரான்சில் உள்ள பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோசா மரியா புருனோ தலைமையிலான ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வை நடத்தியது.

    செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2022 வரை 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,390 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டன.

    "கோவிட் வைரஸ் நேரடியாக இரத்த நாளங்களைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது இரத்த நாளங்களை இயல்பை விட 5 வருடங்கள் வேகமாக வயதாக்குகிறது. இதன் விளைவாக, இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது" என்று பேராசிரியர் ரோசா மரியா புருனோ தெரிவித்தார்.

    கோவிட் தொற்று ஏற்படாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிடால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பாக பெண்கள், மற்றும் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற நீண்டகால கோவிட் அறிகுறிகள் கொண்டவர்களுக்கு இரத்த நாளங்கள், தமனிகள் (Arteries) இறுக்கமாக இருந்தன என்பதை ஆய்வு காட்டுகிறது.

    இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கு தமனிகள் அவ்வளவு விறைப்பாக இல்லை என்றும், அவர்களின் நிலை சற்று சிறப்பாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

    பெண்களில் இந்த அதிக விளைவுக்குக் காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதே என்று பேராசிரியர் புருனோ நம்புகிறார்.

    "பெண்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் வேகமாகவும் வலுவாகவும் செயல்படுகின்றன. இது அவர்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் அதே வலுவான பதில் தொற்றுக்குப் பிறகு இரத்த நாளங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

    இந்த சூழலில், கோவிட் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்தை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.   

    • பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
    • கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

    கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    கொரோனா வைரசால் உயிரிழந்த முதியவரின் உடல் சுகாதார ஊழியர்கள் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

    • பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் செய்தனர்.
    • அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.

    நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. காசியாபாத்தில் 14 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  

    இந்நிலையில் மெஹ்ராலியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தைக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    சுகாதாரத் துறை வட்டாரங்களின்படி, குழந்தை தொடர்ந்து இரண்டு நாட்களாக லேசான சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது.

    மாறிவரும் வானிலை காரணமாக பருவகால காய்ச்சல் என்று ஆரம்பத்தில் அறிகுறிகளை அலட்சியம் குழந்தையின் குடும்பத்தினர், இறுதியில் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உதவியை நாடினர்.

    அங்கு, குழந்தை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், குழந்தைக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது, அதில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    மருத்துவக் குழுக்கள் உடனடியாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்களைப் பரிசோதித்தன. அவர்கள் அனைவருக்கும் கோவிட்-நெகட்டிவ் அதாவது தொற்று பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. வீட்டிற்குள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு குடும்பமும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

    யாரும் பாதிக்காதபோதும் வைரஸ் எவ்வாறு குழந்தையை அடைந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக என்று காசியாபாத்தின் கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. குப்தா தெரிவித்தார். 

    • அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
    • கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் நமது நாட்டில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவியது.

    இந்தநிலையில் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து நாடுகளிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நமழ நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

    இருந்தபோதிலும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவர்களில் 27 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மற்ற 68 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலத்தை விட கேரளா மாநிலம் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
    • அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ரயிலில் பயணித்த ஒரு பெண், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, வாழைப்பழத்தை சாப்பிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, ரயிலில் பயணிக்கும் போதும், பொது இடங்களிலும் மக்கள் எதையும் சாப்பிட கூடாது என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், ரயிலில் பயணித்த ஒரு பெண், வாழைப்பழத்தை சாப்பிடுவதால், தொற்று பரவாமல் இருக்கும் உத்தரவை மீறாமல் இருக்கவும், தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டுள்ளார். சக பயணிகள் இதை வினோதமாக பார்த்தனர். இவர் முகத்தை மூடிக்கொண்டு பழத்தை சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்தப் பெண் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. சுரங்கப்பாதை ரயிலில் அவர் பயணித்தபோது வாழைப்பழம் சாப்பிடும்போது சக பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    • கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
    • நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 7 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருவர், தருமபுரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது.
    • சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை.

    சென்னை:

    சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது.

    இந்த புதிய வகை கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

    அது மட்டுமல்ல இந்தியாவிலும் கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் நுழைந்து விட்டது.

    இந்த வைரஸ் இதுவரை 3 பேருக்கு வந்து விட்டது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இது பரவும் என்பதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கொரோனாவால் இறப்பு இல்லை என்றாலும் கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்த மீண்டும் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில், தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று திடீரென ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் அதை பரவாமல் கட்டுப்படுத்த என்னென்ன செய்யப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

    சீனா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து உள்ளதால் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    கொரோனா பரவிய சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணிக்கவும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக அரசு சார்பில் விரைவில் சுற்றறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படுகிறது.
    • நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும்.

    பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த மூக்க வழி கொரோனா மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    அதன்படி, இன்று முதல் கொரோனா 19 தடுப்பூசி திட்டத்தில் நாசி கொரோனா மருந்து சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக நாசி கொரோனா மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நாசி கொரோனா மருந்தின் விலை விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
    • கொரோனா தொற்று உறுதியான 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து பீகார் வந்த 4 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

    பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மியான்மர், தாய்லாந்தில் இருந்து தலா ஒருவர், இங்கிலாந்தை சேர்ந்த இருவர என மொத்தம் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி மருத்துவர் ரஞ்சன் சிங்கின் கூறுகையில், கொரோனா உறுதியான 4 பேருக்கும் தொற்று தீவிரமானவையாக இல்லை. இருப்பினும், நோய் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவதாக கூறினார்.

    • 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
    • 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. 


    டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

    கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சீனா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய பிஎப் 7 வகை கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய தாய் மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவருடன் சேர்த்து நேற்று வரை மாநிலத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் விமான நிலையங்களில் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாக சேலம் மாவட்டத்திற்கு வருபவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றாலும், ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், " சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருமாறிய பி.எப்.7 கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையங்கள் வழியாக சேலம் வருபவர்களை கண்காணிக்க, துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கொடுக்கும் விவரங்கள் பெற்று, அதனடிப்படையில் அவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள் என்றனர்.

    ×