என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுப்பு- தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
- உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை.
- கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற்றால்தான் எச்செல்வத்தையும் எளிதில் பெற முடியும் என்பதன் அடிப்படையில், நோய்களை நீக்குவதற்கான மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
அதாவது, மருத்துவமனைகளை உருவாக்குவது, மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவது. அரசு மருத்துவமனைகளில் ஆசிரியர்களை உடனுக்குடன் நியமிப்பது, போதிய மருத்துகளை இருப்பில் வைப்பது போன்ற வசதிகளை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் பெற வழிவகை செய்ய வேண்டும்.
அப்பொழுதுநான் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மேம்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலைமை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மருத்துவம் கற்றுத்தர போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட ஏதுவாக மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். ஆனால், இவற்றை தி.மு.க. அரசு சரியாக செய்து தருவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவ ஆணையம் அரசுக் கல்லூரிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை சுட்டிக்காட்டி மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று வினவுவதும், அதற்கு மழுப்பலாக அரசு தரப்பில் பதில் அளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
அரசு சார்பில் அளிக்கப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படவில்லை என்றாலும் கூடுதல் மருத்துவ பணியிடங்களுக்கு ஒப்புதல் தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்து வருகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக துவங்கப்பட்ட பத்து மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 50 எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்தித் தரும்படி தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய மருத்துவ ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டும், ஆசிரியர்கள் பற்றாக்குறை மருத்துவக் கட்டமைப்பின்மை போன்றவற்றைச் சுட்டிக்காட்டி கூடுதலாக 500 மருத்துவ இடங்களுக்கு அனுமதி தர தேசிய மருத்துவ ஆணையம் மறுத்துள்ளது.
கூடுதலாக 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி தர மறுத்ததற்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே ஆகும். உடனுக்குடன் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, கட்டமைப்புகளை அவ்வப்போது மேம்படுத்தி இருந்தால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 500 மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கும்.
இதன்மூலம். கூடுதலாக 500 மாணவ மாணவியர் மருத்துவர்களாக ஆகி இருப்பர். தி.மு.க அரசின் மெத்தனப் போக்கு காரணமாக 500 மாணவ மாணவியரின் மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது. இது கடும் கண்டனத்திற்குரியது.
வருகின்ற ஆண்டிலாவது, கூடுதல் மருத்துவ இடங்களைப் பெறும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






