என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் மொத்தம் 6,329 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளுக்காக அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    தற்போது அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

    இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது.
    • 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    மதுரை:

    மதுரை வந்த தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை சங்கிகள் என்கின்றனர். அது குறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. மதுரையில் இன்று (ஜூன் 8) பா.ஜ.க, நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.

    உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர். தமிழகத்தில் 3000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா. கோவிலில் உள்ள தீபத்திற்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறீர்கள். இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.

    திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை. 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
    • பொதுமக்களை அப்புறப்படுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து மகாராஷ்டிராவுக்கு 10,000 லிட்டர் சமையல் எண்ணெயை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    லாரி மீது வாகனம் ஒன்று மோதியதால், லாரியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் குடங்களை கொண்டு வந்து எண்ணெயை பிடித்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

    • 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர்.
    • அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    மதுரை:

    மதுரையில் நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் திடீரென டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஓத்தக்கடை பகுதியில் இன்று மாலை பா.ஜ.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம்.
    • கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது.

    சென்னை:

    சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய ஆதார் பயோமெட்ரிக்கை தங்களுக்கான கியாஸ் ஏஜென்சியில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால் இதற்கு போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததால் கியாஸ் சிலிண்டர் ஊழியர்களே வீடு, வீடாக இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பயோமெட்ரிக்கை வழங்காவிட்டால் அவர்களுக்கு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற உறுதி செய்யப்படாத தகவல் வெளியானதால் ஏராளமானவர்கள், கியாஸ் ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    தற்போது, ஏராளமானவர்கள் பயோமெட்ரிக் பதிவு செய்து வருகிறார்கள். இதற்காக கியாஸ் ஏஜென்சிகளில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக முந்தைய கியாஸ் பில், ஆதார் கார்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு அவர்களது ஆதார் கார்டு பதிவு செய்யப்பட்ட பிறகு, ஆதார் கேமரா மூலம் கருவிழி போட்டோ எடுக்கப்படுகிறது.

    ஆன்லைனிலும் பதிவு செய்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம். இதற்காக அவர்கள் எல்.பி.ஜி. செயலியை டவுன்லோடு செய்து, அந்த செயலிக்குள்ளேயே பயோமெட்ரிக் பதிவு செய்து கொள்ளலாம்.

    பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம், சமையல் எரிவாயு மானியங்கள் தகுதியற்ற நபர்களுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்பதற்காக மத்திய அரசு இந்த முடிவு மேற்கொண்டுள்ளது.

    அதேநேரத்தில் பயோமெட்ரிக் செய்யாதவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது நிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருவது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மோசடிகளை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் கியாஸ் சிலிண்டர் வினியோக முறையில் பயோமெட்ரிக்கு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலிண்டர் வைத்திருக்கும் நுகர்வோர்கள் விரைவாக தங்களது பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    அதே நேரத்தில் கே.ஒய்.சி. தராதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படாது. மோசடிகளை கண்டறியவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பயோமெட்ரிக் முறை செய்வது ஒவ்வொருவரின் கடமை. மோசடி இல்லாத சிலிண்டர் வினியோகத்திற்கு இது கட்டாயம்.

    இதை இண்டேன், எச்.பி., பாரத் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வதில்லை. மத்திய அரசு முடிவுதான் இது. எனவே பயோமெட்ரிக் பதிவு மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவுக்கு கால நிர்ணயம் இல்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
    • பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முழுவதுமாக ரத்து

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    பகுதி நேர ரத்து

    * செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.

    * கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.

    சிறப்பு மின்சார ரெயில்கள்

    இதன்காரமாக இந்த 2 தேதிகளிலும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல்-பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு சென்ட்ரல் -மீஞ்சூருக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-பொன்னேரிக்கும், மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும், மதியம் 2.56 மணிக்கு மீஞ்சூர்-சென்ட்ரலுக்கும், மாலை 3.33 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.
    • ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை:

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06101) அதேநாள் காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து இதே தேதியில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06102), அதேநாள் மதியம் 12.55 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 9, 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 4 மற்றும் உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.

    இதேபோல, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06103), அதேநாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இதேதேதியில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06104), நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். இந்த ரெயில்களில் 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 10, உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும்.

    சென்னை:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 

    • நார்வே செஸ் தொடரில் குகேஷ் 3-வது இடம் பிடித்துள்ளார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நார்வே செஸ் தொடரில் அந்நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இறுதிச்சுற்று போட்டியில் கார்ல்சனை விட அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து விளையாடிய குகேஷ், செய்த பெரிய தவறால் அவர் 3-வது இடத்திற்குச் சென்றார்.

    10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடமும், குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் 3-வது இடம் பிடித்த குகேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 2025-ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம். குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன், இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது.
    • இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.

    மதுரை:

    பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நள்ளிரவில் மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

    இன்று பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது.

    கோவை:

    டிஎன்பிஎல் 2025 சீசனின் 3-வது லீக் போட்டி கோவையில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நெல்லை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது.

    வாசீம் அகமது 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாபர் ஜமால் 33 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆர். ராஜ்குமார் அதிரடியாக ஆடி 16 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

    நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 21 பந்தில் 41 ரன் குவித்தார். சந்தோஷ் குமார் 45 ரன்னில் அவுட்டானார். ஹரீஷ் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், நெல்லை ராயல் கிங்ஸ் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
    • பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கத்தில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்காமல் பொதுமக்களை கைக் குழந்தையுடன் அலைக்கழித்த திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என த.வெ.க. துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாநகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

    சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். இதற்கு மிகப் பெரிய உதாரணம். இந்த வாரம், ஜூன் 4ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள், பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம்.

    சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

    இது ஒருபுறம் இருக்க கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனைவைத் தருகிறது.

    பல மணி நேரம் காத்திருந்து, இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அந்த நள்ளிரவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம், பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

    பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றிச் சிறிதேனும் அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு நடந்துகொள்வார்களா?

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாத்து கடும் கண்டனத்துக்கு உரியது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×