என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
- தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து தி.மு.க. அரசு ஒரு போதும் பின்வாங்கக்கூடாது. ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர்.
- கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
வண்டலூர்:
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழி வகை செய்யப்படும் என்றனர்.
- கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
வேலூர்:
வேலூர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாபுரம் அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் பல நூறு ஆண்டு பழமையான வடிவேல் சுப்பிரமணிய சாமி கோவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு முன்பாக 92 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமான முருகன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதி இந்த சிலையையும் வடிவமைத்துள்ளார். தென் வடக்கு திசையை பார்த்தவாறு மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலை மலை உச்சியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தற்போது திருப்பணிகள் முடிந்து கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோவிலில் இன்று இரவு வான வேடிக்கை மகா அபிஷேகம் அலங்கார தரிசனம் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் குழுவினரின மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி வீதி உலா நடைபெறுகிறது.
பிரமாண்ட முருகன் சிலையின் முன்பு குடும்பத்துடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து இன்று காலை 11.15 மணியளவில் அவர் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் புறப்பட்ட மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்து கொண்டு அமித்ஷா மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். இதையொட்டி மற்ற கோபுரங்கள் வழியாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் போலீசார் ஏறி நின்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல் கோவிலை சுற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கோவில் வளாகத்தில் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
- சங்கிலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
- விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதுநகர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) த/பெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
- சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார்.
பா.ம.க. வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போது தான் முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்து பேசினார்.
முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
- கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
- முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஆறுமுக செல்வம். இவரது நண்பர் மாரியப்பன்(வயது 25). இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆறுமுக செல்வம் வீட்டின்மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவில் கொடை விழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போலீசார் பிடியில் சிக்கியவர்கள் மாரியப்பன், அவரது கூட்டாளிகள் மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த கொம்பையா, பாலசங்கு, வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியை சேர்ந்த வேல்சாமி பாண்டியன், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
அந்த கும்பல் ஆறுமுக செல்வத்தை தீர்த்துக்கட்டுவதற்காக சம்பவத்தன்று அரிவாளுடன் அங்கு வந்ததும், வீட்டின் வெளியே அவர் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தகராறில் ஆறுமுக செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாரியப்பன் தரப்பினரை பாட்டிலால் தாக்கி உள்ளனர். அப்போது அந்த கைகலப்பு தொடர்பாக போலீசில் புகார் அளிக்க ஆழ்வார்குறிச்சி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாரியப்பன் தரப்பினர் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.
இதனால் அவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று போலீசார் சந்தேகித்த நிலையில், அன்றைய தினம் இரவிலேயே அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து அண்ணாமலையும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்து கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இச்சந்திப்பானது நடைபெற்றது.
சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
- தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
அரக்கோணம்:
அரக்கோணத்தில் நடந்த திருமண விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம்.
ஏராளமான கலைக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்தோம். தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்தது.
தி.மு.க ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க செயல்பட்டு வருகிறது.
ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை தி.மு.க முடக்கியது.
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது.
தி.மு.க.வின் குடும்ப அரசியலாக குடும்ப ஆட்சியாக ஸ்டாலின் அமைத்திருக்கிறார். எதில் எடுத்தாலும் கரெக்ஷன் கரப்ஷன்என தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க தான்.
2010-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அ.தி.மு.க.
41 சதவீதம் ஏழை மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகள், மற்றும் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக அளவு தொடங்கப்பட்டது.
அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.
வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள் ஆங்காங்கே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரத்து 500 சதுர அடியில் நிரந்தர நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக தற்காலிகமாக 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக நிழல் கொட்கை அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புதுறையை சேர்ந்தவர்கள் தகவல் நிலையம், நாழிக்கிணறு பகுதி, தேரடித்திடல் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே முதலுதவி மையம் செயல்படுகிறது.
மேலும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மருத்துவர்கள் தகவல் நிலையம், உள்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் இந்த பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். கடலில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மிதக்கும் கயிறு மிதக்கும் போயாக்கள், மூலமாக கடலில் புனித நீராடும் பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு இன்று காலை 8 மணியில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி. டபிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாத யாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை அங்கு செயல்பட்டு வருகிறது. அந்த தனி வரிசையில் வரக்கூடிய மூத்த குடிமக்களுக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 10-ந்தேதி மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர், அதிகாரிகள் அலுவலகத்தில் கைப்பட்டை வழங்கப்படுகிறது. கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதை மூத்த குடிமக்கள் மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு கைப்பட்டை வாங்கி பயன்படுத்தி பயனடையுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது.
- வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் தென்காசியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த வெளியூர் நபர்கள் பலரும் குற்றால அருவிகளில் அலைமோதினர். அவர்கள் காலை முதலே குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிந்தனர்.
குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மொத்தம் 6,329 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகளுக்காக அதிவேக இணையதள வசதிகளும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அதிநவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் பயன்பாடு தொடர்பான கூடுதல் வழிமுறைகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கெல்ட்ரான் மூலம் வழங்கப்பட்ட அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தினந்தோறும் செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும். அவற்றின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கணினி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் அதி நவீன உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் முன்னோட்டமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒத்திகை பயிற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






