என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
- தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து தி.மு.க. அரசு ஒரு போதும் பின்வாங்கக்கூடாது. ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






