என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு
- 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர்.
- அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
மதுரை:
மதுரையில் நேற்றிரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் திடீரென டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஓத்தக்கடை பகுதியில் இன்று மாலை பா.ஜ.க. தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையம் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.






