என் மலர்
நீங்கள் தேடியது "Gold loan debt"
- ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது என்றும் அது எங்கள் கோரிக்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தங்கக் கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வு வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரிசர்வ் வங்கி கவர்னருக்கு நான் எழுதிய கடிதத்திற்கும் எனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக பதில் வந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி முழுமையான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது கோரிக்கைகள்:
1. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை.
2. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன்-பிணை மதிப்பு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.
3. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.
4. முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
இது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
முழுமையான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்து கூடுதல் தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை பகிர்ந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
- நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும்.
ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியா தான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது.
மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவதற்கும், கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கும் வங்கிகளில் அடமானம் வைத்துத்தான் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகளில், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதற்கான உரிமையாளர்கள் தாங்கள்தான் என்பதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நகைகளை வாங்கியதற்கான ரசீது இல்லாதவர்கள், அதற்குப் பதிலாக வேறு ஆவணங்களையோ, உறுதிமொழிச் சான்றையோ அளித்துக் கடன் பெறலாம் என்றும், அவற்றில் சந்தேகம் இருந்தால் கடன் வழங்கக் கூடாது என்றும் சொல்லியிருப்பதால், நகைக்கடன் மறுக்கப்படும் சூழல் உருவாகும்.
ஏனெனில், பல குடும்பங்களில் இன்றும் பாட்டியின் நகைகளே தாய்க்கும் அவரது மகளுக்கும் மருமகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நடைமுறை, பல தலைமுறைகளாக இருந்து வருகிறது. அப்படியிருக்கையில், அவற்றிற்கான ரசீதையோ, ஆவணத்தையோ அவர்கள் எங்குபோய்ப் பெற முடியும்?
மேலும், ஒரு பக்கம் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிக்கொண்டிருக்க, மறுபக்கம் தங்கத்தை அடமானம் வைத்துப் பெறப்படும் தொகையோ குறைந்துகொண்டே போனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பது ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?
ரிசர்வ் வாங்கியின் புதிய விதிகளில், கடன் தொகை வழங்கும் அளவானது தங்கத்தின் மொத்த மதிப்பில் இருந்து 75 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடன் தொகையையும் குறைத்தால், பணம் அதிகம் தேவைப்படுவோர் அதிக வட்டி வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்களையும், கந்து வட்டிக் கும்பலையுமே நாடிர் சென்று தங்க நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படும். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், மீளாத் துயருக்கு ஆளாக நேரிடும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் ஒரு புறம் இருக்க. வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும் என்பது போன்ற புதிய விதி, மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும்.
இந்தப் புதிய விதியால், வேறு ஆதாரங்களில் இருந்து தங்க நாணயங்களை வாங்கியவர்கள் நகைக் கடன் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
மேலும், ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் அதற்கு வட்டித் தொகை மட்டுமே செலுத்தி அதை அப்படியே புதுப்பித்துக் கொள்ள முடியாது என்றும், அடகு வைத்த நகையை முழுவதுமாக மீட்டு, அடுத்த நாள் தான் மீண்டும் அடகு வைத்துக் கடன் பெற முடியும் என்ற புதிய நிபந்தனையால் மக்கள் இன்னும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவர்.
எனவே, ரிசர்வ் வங்கி வெளியீட்டுள்ள புதிய வரைவு விதிகளை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நகைக் கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடரும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் பெறுவோர் மட்டுமின்றி, தங்கநகைக் கடன் கொடுப்போரும் இதை மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகக் கருதுகின்றனர். தனிநபர் கடன் மற்றும் வீட்டுக் கடன் போல இல்லாமல் தங்கநகைக் கடன் மிகவும் உத்தரவாதம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
கடன் தருபவர்கள் தங்கள் பணம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம். காரணம், கடன் பெற்றவரின் நகை அவர்கள் கையில் உள்ளது.
எனவே எளிதில், உடனடியாகக் கடன் பெற விரும்புவோர், தங்களிடம் உள்ள நகை, தங்க நாணயங்கள் அல்லது தங்கக் கட்டிகளை வங்கியில் அல்லது தங்கநகைக் கடன் நிறுவனத்தில் கொடுத்து கடன் பெறலாம். பெற்ற கடன் தொகையைத் திருப்பிக் கொடுத்தவுடன் நகையை திருப்பித் தந்துவிடுவர்.
தங்கநகைக் கடனில் உள்ள மிகப் பெரிய அனுகூலம், கடன் வாங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிது என்பதும், இது குறைந்த காலத்துக்காகப் பெறப்படும் கடன் என்பதும் ஆகும்.
தங்கநகைக் கடன் பெற ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரிடம் தங்கம் சொந்தமாக இருக்க வேண்டும்.
நம்மிடம் தங்கநகை இருக்கிறது, பணம் அவசர, அவசியத் தேவையாக இருக்கிறது என்றால், தங்க நகைக் கடன் விரும்பத்தக்கதது.
காரணம், இதற்கான வட்டி விகிதம் இதற்கு இணையான கடன்களின் வட்டி விகிதத்தைவிட மிகக் குறைவு. அதுபோக கடனின் கால அளவு மிகவும் நெகிழ்வானது. அதாவது, சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை.
தங்கநகைக் கடனுக்கு எந்த வங்கிக் கட்டணமும் கிடையாது. தவிர, இதற்கு மிகக் குறைந்த அளவிலான ஆவணங்கள்தான் தேவைப்படும்.
ஆனால், என்னதான் தங்கநகைக் கடன் மற்ற கடன்களைவிடக் கவர்ச்சியாக இருந்தாலும், இக்கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அவை பற்றி...
ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த சதவீதம், வங்கிகள், நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம்.
பெரும்பாலும் தங்கநகைக் கடன் வழங்குபவர்கள் இதற்கு செயல்முறைக் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள். ஆனால், மதிப்பீட்டுக் கட்டணம் உண்டு. இந்தக் கட்டணம் அதிகமாக இருந்தால் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.
மற்ற ‘செக்யூரிட்டி’ இல்லாத மற்றும் பலவகை ‘செக்யூரிட்டி’ உள்ள கடன்களைவிட தங்கநகைக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெறும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளலாம். இறுதியில் கடன் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலை திருப்பிச்செலுத்த வேண்டும். கடனுக்கு விண்ணப்பித்த உடன் மிக விரைவில் உங்களுக்குப் பணம் கிடைக்கும்.
தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னால் ஒன்றுக்குப் பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப்போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தையும் அறிந்துவைத்துக் கொள்ளுங்கள்.
தங்கநகையை வைத்துக் கடன் பெறுவோர், தவறாமல் வட்டி செலுத்தி, உரிய காலத்தில் அதை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நகை ‘மூழ்கிப் போகும்’ நிலை ஏற்படலாம்.






