என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து.
    • கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ் காலத்தில் குறிப்பாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இது சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என்பதை விட இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் ஆகும். இதன் தாக்கம் லண்டன், கனடா ஆகிய நாடுகளில் உள்பட வெளிநாடுகளில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    வங்காள தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்கும் பிரதமர் மோடிதான் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் வர இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எந்த கட்சியும் எங்களை நசுக்க எல்லாம் முடியாது. பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் காங்கிரசுக்கு சிக்கல்கள் உருவானது.

    அதனால்தான் முன்கூட்டியே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காங்கிரசை பலப்படுத்த ஆட்சி, அதிகாரம் அவசியம் என்பதை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்து உள்ளார்.

    எங்கள் குழுவின் தலைவர் அவர்தான். தமிழக காங்கிரசுக்கும் அந்த நிலைப்பாடுதான். எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். சிலர் கூட்டணி பற்றி மாற்றுக்கருத்துக்களை கூறுவது அவர்கள் சொந்தக் கருத்து. அதேபோல்தான் திருச்சி வேலுசாமி கூறி இருப்பதும் அவரது கருத்துதான். காங்கிரசின் கருத்து அல்ல.

    கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளது. மீதி வாக்குறுதிகளையும் எஞ்சிய காலத்தில் நிறைவேற்றி விடும். ஆசிரியர்கள், நர்சுகள் போராட்டத்திலும் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என்றார்.

    பேட்டியின் போது முன்னாள் மாநில தலைவர் கிருஷ்ணசாமி, மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், இமயா கக்கன், சுமதி அன்பரசு, தாம்பரம் நாராயணன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ராம்மோகன், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.சி. துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், மாவட்ட தலைவர் முத்தழகன், டி. என்.அசோகன், புத்தநேசன், ஜி.தமிழ் செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர். முன்னதாக மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. யசோதாவின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.

    • 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா?
    • பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே...

    நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

    நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று!

    அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா? அதற்கு கொஞ்சமாவது உங்களுக்கு தகுதி இருக்கிறதா?

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை, பெண்கள் பாதுகாப்பைச் சீர்குலைத்துவிட்டு, எங்கு திரும்பினாலும் ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரையும் நடுத்தெருவில் போராட நிறுத்திவிட்டு, Collar-ஐ தூக்கிப் விட்டு பேசுகிறீர்களே... உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?

    20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்று போகிற போக்கில் அளந்து விட்டால் மக்கள் நம்பி விடுவார்களா? எத்தனை லேப்டாப் யாருக்கு போய் சேர்ந்தது? தேர்தல் பயத்தில், நான்கரை ஆண்டுகள் கொடுக்காமல் தற்போது அவசர கதியில் அரைகுறையாக கொடுக்கப் போவதை பெருமை பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது உங்கள் விடியா அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பதை அறிவார்ந்த மாணவர்களுக்கு தெரியும்.

    திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே-

    நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல்.

    இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!)

    அப்புறம்... ஏதோ Open challenge என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் Pending-ல் இருக்கிறது...

    என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?

    அஇஅதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?

    OPEN CHALLENGE IS STILL ON! என்று கூறியுள்ளார். 



    • தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.
    • 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பா.ஜ.க.வுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து சரணாகதி அடைந்து விட்டனர்.

    * தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து தெரிந்து கொண்டு வடமாநிலத்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    * தமிழ்நாட்டின் மீது வெறுப்பை பரப்பினால் வடமாநிலங்களில் ஓட்டு கிடைக்கும் என பா.ஜ.க. நம்புகிறது.

    * ஜி.எஸ்.டி.யால் மாநிலத்திற்கு வரி உரிமையும் இல்லை. வருவாயும் இல்லை.

    * நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை, ஆனால் 'நான் முதல்வன்' சிறந்த திட்டம் என பாராட்டுகிறார்கள்.

    * மாநில உரிமையை விட்டுக்கொடுக்காததால் சமூக வலைதளங்களில் பாராட்டு கிடைக்கிறது.

    * தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கினாலும் நமக்கு ஆதரவாக வடமாநில இளைஞர்கள் வீடியோ பதிவிடுகிறார்கள்.

    * பா.ஜ.க. ஆதரவாளர்களே தற்போது மத்திய அரசை கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

    * 100 நாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு நன்கு தெரியும்.

    * சாதனை படைத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு மூடுவிழா நடத்தி உள்ளது.

    * 10 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்த 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக அழித்து விட்டனர்.

    * 100 நாள் வேலைத்திட்ட பிரச்சனையில் பா.ஜ.க.வுக்கு இ.பி.எஸ். ஆதரவாக உள்ளார்.

    * தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் 100 நாள் வேலை திட்டம் அழிப்புக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
    • காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார்.

    சென்னை:

    சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமானிடம், நீங்களும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்து உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:-

    என்னையும், தம்பி விஜய்யையும் பற்றி ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என எனது அண்ணன் திருமாவளவன் கூறி இருக்கிறார். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் எங்களை பெற்றெடுத்த போது அவர்தான் அருகில் இருந்து பிரசவம் பார்த்தார்.

    மேலும் காலம் காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றும் அவர் கூறி வருகிறார். அண்ணன்தானே பேசுகிறார். அதனை விடுங்கள் என்றார்.

    • வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ. 63.74 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 2.66 லட்சம் பயனாளிகளுக்க ரூ.1,400 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆர்வத்துடன் திரண்டிருக்கும் உங்களை பார்க்கும்போது புது எனர்ஜி வருகிறது.

    * ஆன்மீகத்தில் ஒளிவீசி ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

    * வரலாற்று சுவடுகள் நிறைந்திருக்கும் மாவட்டம் தான் திருவண்ணாமலை.

    * தி.மு.க.வுக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினரை கொடுத்த முதல் மாவட்டம் திருவண்ணாமலை.

    * 2025-ம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

    * விடியல் பயணம் 900 கோடி முறை மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

    * கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1.30 கோடி மகளிர் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர்.

    * எங்கள் அண்ணன் கொடுக்கும் சீர் என பெண்கள் கூறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.

    * ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் தி.மு.க.வின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * 4 திட்டத்தில் மட்டும் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது.

    * நான்கரை ஆண்டுகளில் நாடு போற்றும் திட்டங்களை திராவிட மாடல் அரசு கொடுத்துள்ளது.

    * ஒவ்வொரு திட்டத்தின் வெற்றிக் கதைகளையும் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது.

    * மாதிரிப்பள்ளிகள் என்ற திட்டம் தான் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று.

    * திருவண்ணாமலையில் 21,463 மாணவிகள் புதுமைப் பெண்களாய், 19,376 மாணவர்கள் தமிழ் புதல்வனாய் உள்ளனர்.

    * புதுமைப் பெண்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    * திருவண்ணாமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது.

    * சொல்ல சொல்ல பெருமை கொள்ளக்கூடிய வகையில் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

    * திருவண்ணாமலை ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புதிய சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும்.

    * செங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டித்தரப்படும்.

    * வேளாண் சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில் மடையூரில் ரூ.3.94 கோடியில் மையம் அமைக்கப்படும்.

    * கலசபாக்கத்தில் உள்ள கோவில் ரூ.5 கோடியில் புனரமைக்கப்படும்.

    * நிதி கொடுக்காமல் முடக்கினாலும் அதனை மீறியும் வளர்வதால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரது கண்களை கூசச்செய்கிறது. அதனால் மத்திய அரசு நிதி தர மறுக்கிறது.

    * திட்டங்களை அறிவித்து விட்டு நிறைவேற்றும் வரை யாரும் தூங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி.
    • தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:

    * வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய்.

    * என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.

    * தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.

    * இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.

    * கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று இந்து மதம் சொல்லும்.

    * கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் ரூ.631.48 கோடி மதிப்பில் கட்டப்பட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * உலகத்தை பசுமையாக்கிய ஒவ்வொருவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளால் சிந்தனையும் பசுமை ஆகிறது.

    * உழவர்களின் பின்னால் தான் நாம் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இந்த விழா அமைந்துள்ளது.

    * விவசாயம், விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி.

    * நமது வேளாண்மையை உலகத்தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி வேளாண் துறைக்கும் வந்து சேர வேண்டும்.

    * தொழில்நுட்ப வளர்ச்சி விவசாயிகளை சென்று சேர்ந்தால் தான் அது உண்மையான வளர்ச்சி.

    * தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதற்காக தான் வேளாண் கண்காட்சியை கொண்டு வந்துள்ளோம்.

    * புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பது, சேமிப்பது போன்றவற்றை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    * விவசாயிகளுக்காக கண்காட்சியில் 13 தலைப்புகளில் கருத்தரங்கு, கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    * விவசாயி வேடம் போட்டு சிலர் அரசியல் செய்வார்கள், விவசாயிகளை பாதிக்கிற சட்டத்தையும் ஆதரிப்பார்கள்.

    * விவசாயி வேடத்தை போட்டுக்கொண்டு விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்தவும் செய்வார்கள்.

    * தி.மு.க. ஆட்சியில் வேளாண் துறைக்கு 33 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளாக மேட்டூர் அணை முறையாக உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் 55,750 தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி உள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    * இந்தாண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    * திருவண்ணாமலையில் ரூ.5 கோடியில் சிறப்பு சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்

    * பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்.

    * வேளாண் விளைபொருட்களை உலர்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பில் புதிய உலர் கூடம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலைக்கு வந்த அவருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    திருவண்ணாமலை மாநகராட்சிக்கு எதிரில் உள்ள மைதானத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளில் ரோடு ஷோ சென்றார்.

    சாலையின் இருபுறமும் நின்றிருந்த தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையோரம் நின்ற மக்களுக்கு கைகொடுத்து முதலமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உழவர் நல சேவை மையங்களை அவர் திறந்து வைத்தார்.

    • சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
    • கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இதுவரை சுமூகமான தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    நாளை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்து இருந்தனர். நிரந்தர பணி நியமன அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தூய்மை பணியாளர்கள் இன்று பேரணி நடத்த உள்ளதாக வந்த தகவலையடுத்து, சென்னை பாரிமுனையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் சென்னை பாரிமுனை குறளகத்தில் இருந்து ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.

    குறளகத்திற்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்து தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

    கோட்டை நோக்கி நீதி கேட்கும் பேரணி நடத்த முயன்ற தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் அவர்களை வாகனங்களில் ஏற்றினர்.

    • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று காலை முதலே கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தற்போது பள்ளிகளுக்கு தேர்வு கால விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்னதாக குற்றால அருவிகளில் புனித நீராட அதிக அளவில் வருவதால் குற்றாலமானது ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தாலும் களை கட்டி உள்ளது.

    தற்போது மழைப் பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது கேட் விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் கமலிகா என்ற மகள் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ராஜேஸ்வரி வீட்டின் வாசலில் கமலிகா மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் ரிஷிகா ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர்.

    2 பேரும் வீட்டின் கேட்டை பிடித்து விளையாடினர். திடீரென கேட் பெயர்ந்து விழுந்தது. அதே வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து கமலிகா, ரிஷிகா மீது விழுந்தது. உடனே அங்கிருந்தவர்கள் பதறியடித்து கொண்டு இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.

    ஆனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகள் பலியான துயர சம்பவம் கொங்கலாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது.
    • தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

    பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். தி.மு.க. மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.

    தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம். இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை. கடந்த ஆண்டு உழவர்களின் பயிர் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை. முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி மட்டும் ரூ.62 ஆயிரம் கோடி கட்டுகிறார்கள்.

    தென்மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கு காட்பாதராக தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு ஒரு வரம். அந்த மழையை அழித்தொழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில இருக்கிறார்கள். உறுதியாக கனிமவள கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயன்பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதை யெல்லாம் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும் தான் தெரியும். அதைக்கூட நடத்த மாட்டேன் என்று சொல்லும் முதலமைச்சரை பார்த்திருக்கீங்களா?. அவர் தான் மு.க.ஸ்டாலின்.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒரிசா, பீகார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசு உள்ளது. தமிழ்நாட்டில் சமூக அநீதி தான் உள்ளது. இவர்கள் பெரியாரின் பெயரை சொல்ல தகுதி இல்லாதவர்கள்.

    சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கணக்கெடுப்பு நடத்த என்ன பிரச்சனை.

    தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை தி.மு.க. அரசு பரப்பி வருகிறது. நான் அது தொடர்பாக ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி கிடைத்து உள்ளது என்று பொய்யை முதலமைச்சர் சொல்லி வந்தார். தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8 சதவீதம் தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ரூ.ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்து உள்ளார்கள். ஆனால் தி.மு.க.வினர் பொய் சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

    தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறிடித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்று கூட்டணி குறித்து எதுவும் என்னால் பேச முடியாது. ஆனால் நிச்சயமாக பெரிய கூட்டணி முடிவாகும்.

    ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது இதுதான் எனது நிலைப்பாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறினார். 

    ×