என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர்.
    • சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.

    இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற் சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் பல தரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் வந்து செல்கின்றனர்.

    காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் மற்றும் குற்ற செயல்களை தடுத்திடவும் சி.சி.டிவி. கேமரா அமைத்து, அவற்றின் மூலம் போலீசார் கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிள்ளையார் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தை 2 வாலிபர்கள் சேர்ந்து திருடி சென்றனர். அவர்கள் வாகனத்தை கொண்டு செல்வதை அங்கு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:

    காவேரிப்பட்டணம் நகரின் எந்த பகுதியிலும் போலீசார் சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடும் போகிறது. மேலும் குற்றங்கள் நடைபெற்றால் அவற்றை கண்டறியவும் முடியாத அவலநிலை உள்ளது.

    காவேரிப்பட்டணம் நகரின் அனைத்து பகுதிகளிலும் முறையாக சி.சி.டிவி கேமரா பொருத்தி அவற்றின் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் நகரில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பினையும், குற்ற செயல் தடுப்பு நடவடிக்கையும் மேம்படுத்திட முடியும்.

    மேலும் ஒன்றை மாதத்திற்குள் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் திருவிழா நடக்க உள்ளது. இதற்கு சுமார் 1½ லட்சம் பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வருவார்கள். அதற்குள் காவேரிப்பட்டணம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த தங்கனூர் கிராமத்தில் தைப்பூ சத்தை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி கோர்ட்டு அனுமதியுடன் நேற்று தொடங்கியது. இந்த சேவல் சண்டை போட்டியில் ஒரே நேரத்தில் 136 சேவல்கள் மோதின. இதற்காக தனித்தனியாக மோதும் களங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. இடைவேளையில் சேவல்களை தயார் செய்யவும் தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றி உள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் வந்து இருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது.

    நேற்று வரை மொத்தம் 724 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதி இருந்தன. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.

    இன்று 2-வது நாளாக தங்கனூரில் சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பார்வையாளர்களும் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதி திருவிழா போல் காட்சி அளித்தது. இன்று 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் மோதுகின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் 1200-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றதாக போட்டியை நடத்தும நிர்வாகிகள் தெரிவித்தனர். இன்று மாலை 5 மணியுடன் சேவல் சண்டை போட்டிகள் முடிந்தன. போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ்,கோப்பைகள், கியாஸ் ஸ்டவ் அடுப்புகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் புல்லரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
    • இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    சென்னை:

    சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளினையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3, சனிக்கிழமை காலை 7 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். பேரணியில் இந்நாள்-முன்னாள் அமைச்சர்கள், இந்நாள்-முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி ஆகிய அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    • ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு.
    • தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    திருச்சி:

    திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் எனும் தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நானும் திருமாவளவனும் எப்போதும் தமிழினத்தின் உரிமைக்கு வலு சேர்க்கிற அடிப்படையில் தான் இணைந்திருக்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகளும்.

    சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டுமானால் ஜனநாயகம் வெல்ல வேண்டும்.

    இந்தியாவின் ஜனநாயகத்தை, பன்முகத் தன்மையை, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

    இதுதான் நமது இலக்கு. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. பாராளுமன்ற நடவடிக்கையே இருக்காது. ஏன்? மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக மாற்றி விடுவார்கள்.

    பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணத்திலும் சிதற கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே திரண்டு வந்த தொண்டர்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் பலராலும் மாநாட்டு திடலுக்கு வர இயலவில்லை.

    இந்த மாநாடானது பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சனாதன சக்திகளுக்கு எதிரானது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல நாட்டைக் காக்க, நாட்டு மக்களை காக்க வேண்டும் என்பதற்கானது. இன்றைக்கு ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ராமர் கோவிலை கட்டி முடிக்கும் முன்பாக திறந்திருக்கிறார்கள். இது யாரை எய்ப்பதற்காக?

    ராமர் பக்தியை நாம் எதிர்க்கவில்லை. ராமர் அரசியலை தான் எதிர்க்கிறோம்.

    அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய சனாதன சக்திகள் முயற்சிக்கிறது. மதுரை தூக்கி எறிந்தால் நாடு என்னாகும்? நாமெல்லாம் தலை நிமிர்ந்து வீதிகளில் நடமாட முடியுமா? சமூக நீதியை பாதுகாக்க முடியுமா? இட ஒதுக்கீட்டினை பெற முடியுமா? நம் குழந்தைகள் உயர்கல்வியை பெற முடியுமா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பாவி உழைக்கும் சூத்திர இந்துக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழகம் சிறுத்தைகள் மாநிலம்.

    சிறுத்தைகள் இருக்கும் ஊரில் ஆட்டுக்குட்டிகள் வந்து பார்த்தால் என்ன நிலை என்பது தெரியும்.

    தமிழகத்தை பாதுகாக்க படை வீரர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி படை வீரர்கள் இருக்கிறார்கள். உங்கள் கனவு தமிழகத்தில் பலிக்காது.

    இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினார். ஆனால் அவர்கள் கருப்பு பணத்தைப் பற்றி இப்போது பேசுவதே கிடையாது. மோடியும் ,அமித் ஷாவும் அதானிக்கும் சேவை செய்வதையே வேலையாக கொண்டுள்ளார்கள்.

    நரேந்திர மோடி உலக மகா நடிகர்.

    பத்தாண்டு கால ஆட்சியில் இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? விஜய் மல்லையா உள்பட வட இந்திய தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். நீங்களோ நானோ படிப்பதற்கு கல்வி கடன் கேட்டால் தருகிறார்களா?

    இது மோடியை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துரத்தி அடிக்கும் மாநாடு.

    ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஏ.வ. வேலு, எஸ். எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராஜா, சி பி.ஐ. (எம்.எல்.) விடுதலை தீபங்கர் பட்டாச்சாரியார், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சிபிஐ (எம்.எல்.) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் ஆகியோர் பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேலிட பொறுப்பாளரும் மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா.கிட்டு.

    தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், திருச்சி கரூர் மண்டல துணை செயலாளர் ராஜா மன்னன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன்,

    கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மாநாடு குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டமேதை அம்பேத்கர் வழியில் அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களை காக்க திருச்சியில் திரண்டனர் லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகள். வெல்லும் சனநாயகம் மாநாடு வென்றது.

    இவ்வாறு திருமாவளவன் அதில் தெரிவித்து உள்ளார்.

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தனர்.
    • 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 9 தொகுதிகளை தி.மு.க தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.

    நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    • சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் ஆலோசனை நடத்திய அவர் இரவில் சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே. செல்வம், மாதேஸ்வரன், சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    • தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது.
    • திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என்ற கவர்னரின் உரையும் தான். இந்த இரண்டையும் பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது.

    இப்போது இருக்கும் முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதி அளித்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை எல்லாம் பார்க்கும்போது வேண்டுமென்றே கர்நாடகா தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது, இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பை மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி நலத் திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்க காரணம் ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் கஞ்சா. கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.


    தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது. முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.

    மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில்தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

    கடந்த காலத்தில் 20 லட்சம் கோடி 30 லட்சம் கோடி என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள். ஆனால் பார்த்தால் ஒன்றுமே இல்லை. 1,700 ஏக்கரில் ஆரணி ஆற்றில் 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வாருங்கள். ஏன் எல்லா திட்டத்தையும் சென்னையில் கொண்டு வருகிறீர்கள்? சென்னையில் போதிய இடமில்லை. 65 சதவீத தொழிற்சாலைகள் அங்கு தான் உள்ளன.

    தென் மாவட்டங்களில் 12 சதவீதம் தான் தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இன்னும் நான்கு மாதத்தில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவர்களிடம் திட்டமிடல் இல்லை. வெள்ளம் வருகிறதா, ரூ.6,000 கொடுத்து விடுவோம், அதிலும் 2,000 கமிஷன். ஆண்டாண்டு காலமாக இந்த இரண்டு கட்சிகளும் இதை தான் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. மூன்றாவது அணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்த பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். அதேபோல் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள் என்றார்.

    • ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமி லேயர் முறையை நீக்க வேண்டும்.
    • பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்திருக்கிறது. இது உயர்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிப்பதற்கான சதி ஆகும்.

    இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வின் மூலம் நிரப்புவதை கட்டாயமாக்க வேண்டும். ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் கிரீமி லேயர் முறையை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.
    • பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

    களக்காடு வனசரகர் பிரபாகரன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் குடிதாங்கிகுளம், பத்மநேரி குளம், கங்கணாங்குளம், சிங்கிகுளம் மற்றும் பச்சையாறு அணை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

    பறவைகளை தொலை நோக்கி கருவிகள் மூலம் கண்டறிந்து, புகைப்படமாகவும் பதிவு செய்தனர்.

    கணக்கெடுப்பு பணியுடன் பறவைகள் வாழும் குளத்தின் தன்மை, நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில குளங்களில் கழிவுநீர் கலப்பதால் பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாகவும், குழுவினர் தெரிவித்தனர்.

    கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • திருமாவளவன், செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை:

    நாடார் மகாஜன சங்கத்தின் 72-வது மாநாடு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சங்கத் தலைவர் குருசாமி வெள்ளையன் கொடியேற்றினார்.

    வடக்கன்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். என்.என்.ஜே. குரூப்ஸ் சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் மாநாட்டினை தொடங்கி வைத்தார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ராஜமோகன் வரவேற்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மருத்துவ முகாம், சட்ட ஆலோசனை வழங்கும் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்விதான் முக்கிய காரணம் என்றும், நாடார் சமுதாயத்தினர் வியாபாரம் மட்டுமே செய்தார்கள். ஆனால் இன்று கல்லூரி தாளாளர், பத்திரிகை உரிமையாளர்கள், பெரிய நிறுவனங்களை வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்.


    இந்த சமூகம் இன்னும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இன்னும் பெரும் வெற்றியை பெறமுடியும் என்றும், கடினமாக உழைப்பவர்கள் தான் நாடார்கள் என்றும் புகழாரம் சூட்டினர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் தலைமையில் குழுவினர் வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை தொடங்கின. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொருளாளர் திலக பாமா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கமிட்டி சார்பில் எம்.பி.க்கள் விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ரூபி ஆர்.மனோகரன், அசோகன், பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பிற்பகலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனை வலியுறுத்தி நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    ×