என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
- தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத் துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
சென்னை:
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
வருகிற 30-ந்தேதியுடன் போட்டிகள் முடிகிறது. 31-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.
8-வது நாள் முடிவில் தமிழ்நாடு 26 தங்கம், 13 வெள்ளி, 23 வெண்கலத் துடன் 62 பதக்கம் பெற்று இருந்தது. நேற்றைய 9-வது நாளில் தமிழக அணிக்கு மேலும் 6 பதக்கம் கிடைத்தது.
பளுதூக்குதலில் 2 வெள்ளி, 1 வெண்கலமும், களரிபட்டு பந்தயத்தில் 1 வெள்ளியும், நீச்சல், சைக்கிள் போட்டிகளில் தலா 1 வெண்கலமும் தமிழக வீரர், னுராவ் அணிகள் பெற்றன.
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 67 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீரர் பி.ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் மொத்தம் 242 கிலோ தூக்கினார். 73 கிலோ பிரி வில் வசந்தகுமார் 246 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். பெண்களுக்கான 55 கிலோ உடல் எடை பிரிவில் தமிழக வீராங்கனை கனிகாஸ்ரீ (168 கிலோ) வெண்கலம் பெற்றார்.
களரிப்பட்டு பந்தயத்தில் தமிழக வீரர் சுர்ஜித்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. நீச்சலில் ஜாய்ஸ்ரீயும் (100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவு) சைக்கிளிங்கில் ஸ்ரீமதியும் (60 கிலோ மீட்டர் தூரம்) வெண்கல பதக்கம் பெற்றனர்.
தமிழக அணி 26 தங்கம், 16 வெள்ளி, 26 வெண்கலத்துடன், மொத்தம் 68 பதக்கம் உள்பட தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
மராட்டியம் 27 தங்கம் பெற்று 94 பதக்கத்துடன் முதல் இடத்திலும், அரி யானா 26 தங்கம், 15 வெள்ளி, 34 வெண்கலம், ஆகமொத்தம் 75 பதக்கத்து டன் 3-வது இடத்திலும் உள்ளன.
- இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.
களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.
இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
- வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம்.
- தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் தெற்கு சண்முகநாதபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பெரியாம்பிள்ளை மகன் திருமுருகன் (வயது 45). இவருக்கு திருமணமாகி மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களாக 77-வது வட்ட தி.மு.க. செயலாளராக இருந்து வந்தார்.
திருமுருகன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக அவர் கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் ஆஜராகி வந்தார். எப்போதும் 4 முதல் 5 பேருடன் வெளியில் சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். வழக்கமாக எம்.கே.புரம் பகுதியில் போலீசார் இரவு ரோந்துப் பணி செல்வது வழக்கம். அதேபோல் நேற்றும் வாகனங்களில் போலீசார் ரோந்து சென்றுவிட்டு திரும்பினர்.
இதற்கிடையே அந்த பகுதிக்கு ஏற்கனவே வந்து பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. இதனை சற்றும் எதிர்பாராத திருமுருகன் அவர்களின் பிடியில் இருந்து வீட்டுக்குள் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது. அப்போது அங்கு திருமுருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 பேரை பிடித்துள்ளனர். தொழில் போட்டியா அல்லது சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தி.மு.க. வட்டச் செயலாளர் நள்ளிரவில் 5 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
- எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன்.
சென்னை:
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த எஸ்.எம்.யுகன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் நிலா ராஜா பாலுவுடன் இணைந்து 125 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
வெள்ளி பதக்கம் வென்ற யுகனுக்கு 12 வயது தான் ஆகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இளம் வயதில் பதக்கம் பெற்று அவர் சாதித்துள்ளார். இதுகுறித்து யுகன் கூறியதாவது:-
கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கம் வென்றதால் நான் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு ஆதரவாக இருந்த எனது பெற்றோருக்கு இந்த பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன்.
எனது 8-வது வயதில் துப்பாக்கி சுடுதலில் நுழைந்தேன். 'டிராப்' பிரிவில் எனது கவனத்தை செலுத்தினேன். ஒரே நேரத்தில் படிப்பு மற்றும் பயிற் சியை நிர்வகிப்பது எனக்கு சற்று கடுனமாகவே இருக்கிறது. ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கி றது.
இவ்வாறு யுகன் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டிகளில் அவர் 125 இலக்குகளில் 108 புள்ளிகளை பெற்றதால் கேலோ இந்தியா விளையாட்டுக்கு முன்னேறினார்.
- இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.
- காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்கள் நேராக சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கன் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் அண்ணா அறிவாளயம் புறப்பட்டு சென்றார்கள். அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இன்று நடைபெறும் பேக்சுவார்த்தையில் எத்தனை தொகுதிகள் என்பதையும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் விவாதித்து இறுதிவடிவம் கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஆரணி, திருவள்ளூர், தேனி, கரூர் ஆகிய தமிழகத்தில் 9 தொகுதிகளும் புதுவையில் ஒரு தொகுதியையும் ஒதுக்கி இருந்தனர். அந்த தேர்தலில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருந்தார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கைவசம் உள்ள சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், ஒரு சில தொகுதிகளை கூட்டணிகட்சிகளுக்கு வழங்கதிட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே மாற்று தொகுதியாக எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்று காங்கிரஸ் தலைவர்கள் விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தி.மு.க.விடம் கேட்க திட்டமிட்டுள்ளார்கள்.
- சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.
- அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தோக்கவாடி கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலை அமைப்பதற்கு வருவாய் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி இல்லை என போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர். அதனை செங்கம் பேரூராட்சி வளாகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி கிடைக்காததால் அப்பகுதி மக்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை வைத்துள்ளனர்.
அதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்திற்கு மீண்டும் அம்பேத்கர் சிலை அமைக்கும் வரை பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
- வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்த அவருக்கு அ.தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் தஞ்சை வல்லம் பிரிவு சாலையில் 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
இதையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நான் முதல் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு வந்துள்ளேன். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது போல், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி முகத்தை இந்த கூட்டத்தை பார்த்தே நிர்ணயித்து விடலாம். அடுத்த தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும்.
இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை நீருபித்துக்காட்டுகிறது.
இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள். அத்தனையும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலமாக நல்ல தீர்வை கண்டோம். அ.தி.மு.க.,வை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த இயக்கம், ஜெயலிலதா கட்டி காத்த இயக்கம்.
நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, வலிமையான கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. இதில் யார் உழைக்கின்றார்களோ உச்சபட்ச நிலையை அடைவார்கள். நீங்களும் வரலாம். இது அ.தி.மு.க.,வில் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. இந்தியாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.
எவ்வளவு கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு எட்டு மாதங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நுாறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டு இருக்கிறார்.
மக்களுக்கு எல்லாம் இது நன்றாகவே தெரியும். விஞ்ஞான உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது.
தி.மு.க.,வை பொறுத்தவரை அது குடும்பகட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் குறிக்கோள். மக்களை பற்றி கவலை கிடையாது.
அ.தி.மு.க., மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆனால் தி.மு.க.,வில் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரணமாக 12 ஆயிரம் ரூபாய் தான் வழங்கினார்கள். ஆனால் அ.தி.மு.க., 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.
தற்போது சம்பா, தாளடிக்கு தண்ணீர் இல்லை. ஆனால் மத்திய அரசிடமும் ,கர்நாடக அரசிடமும் போராடி நமது பங்கு நீரை பெற்று தரவில்லை. இருப்பினும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கனமழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வேளாண்மையை பாதுகாத்தோம்.
விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்தோம்.
காவிரி பிரச்சனைக்காக சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மூலமாக நமக்கு வரவேண்டிய காவிரி நீரை பெற்றோம். ஆனால் தி.மு.க., விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. துார்வாரும் திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள்.
அ.தி.முக. ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பயிர் காப்பீடு ரூ.9300 கோடி பெற்று தந்தோம். வறட்சி நிவாரணம் கொடுத்தோம். மும்முனை மின்சார திட்டம் அமல்படுத்தினோம்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தல் தான் 2026 தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மாட்டுவண்டியை தானே ஓட்டியபடி விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்றார் தொடர்ந்து அங்கு சிறப்புரையாற்றினார். இதையடுத்து அவர் அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
- 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் மழை நீர் தேங்கிய நிலையில் நெல்லை, மேலப்பாளையம், தாழையூத்து ஆகிய மண்டலங்களில் மழைநீர் முழுவதும் வடிந்துள்ளது.
ஆனால் பாளை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதற்கிடையே நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது.
குறிப்பாக பாளை மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் அறிகுறிகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகர பகுதி முழுவதும் சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ ராவ் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் 4 மண்டலங்களிலும் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இன்று வண்ணார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் கொசு மருத்து தெளிக்கப்பட்டது. மேலும் பாளை பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளும் நடைபெறுகிறது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையில் டெங்கு தடுப்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு அறிகுறி காணப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டு அங்கு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வள்ளியூர், நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
29-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
31.01.2024 முதல் 02.02.2024 வரை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
03.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது.
- சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
மதுரை:
மதுரையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நாடார் மகாஜன சங்க 72-வது மாநாட்டில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லையில் வெள்ளம் சற்றே தணிந்திருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் மீள பல நாட்கள் ஆனது. 6 நாட்களுக்கு பிறகு நான் அங்கு சென்றபோது பிரதான 2 சாலைகளை தவிர மற்ற சாலைகளை பயன்படுத்த முடியவில்லை.

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது இரண்டே நாட்களில் அப்புறப்படுத்தி விட்டார்கள். ஆனால் தூத்துக்குடிக்கு அப்படி எதையும் செய்யவில்லை. நான் அனைவரிடமும் கேட்டுக்கொண்டேன். தூத்துக்குடிக்கு ஏதாவது உதவிகள் செய்யுங்கள் என்று. காலநிலை மாற்றம் என்பது மிகவும் முக்கியம். இதனை வருங்கால சந்ததியினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
கர்மவீரர் காமராஜரின் மதிப்புமிகு திட்டங்களால் தான் தமிழகத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடிந்துள்ளது. அதுபோன்ற திட்டங்கள் அவருக்கு பின்னர் யாரும் செயல்படுத்த முன்வரவில்லை. எனவே மீண்டும் அது போன்ற திட்டங்களை கொண்டுவர ஒன்றாக சேர்ந்து நாம் ஆளுவோம்.
மற்றவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து விட்டோம். போதும், 5 ஆண்டு காலம் நாம் ஆண்டு பார்ப்போம். சரியில்லை என்றால் ஒதுங்கிவிடுவோம். அமைதியான முறையில் வளர்ச்சியை அடைய வாய்ப்பு தாருங்கள். சாதியை வைத்து அரசியல் நடத்தும் அரசு சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார்.
- தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற 30-ந்தேதி தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.
கடந்த தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் 3 தொகுதிகள் கேட்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.
சமீபத்தில் திருச்சியில் நடத்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் மாநாட்டின் மூலம் தன் பலத்தை திருமாவளவன் நிரூபித்து காட்டி உள்ளார். இந்த மாநாட்டில் திரண்டிருந்த கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரிலேயே பார்த்தார்.
இதை மையமாக வைத்து கூடுதல் தொகுதி கேட்கும் முடிவில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார்.
நாகப்பட்டினம் அல்லது காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினம் தற்போது கம்யூனிஸ்டு கையில் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க. கையில் இருக்கிறது.
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதிக்குள் ஒரு சட்டமன்ற தொகுதியும், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குள் 2 சட்டமன்ற தொகுதிகளும் விடுதலை சிறுத்தைகள் கைவசம் உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி நாகப்பட்டினத்தை விட்டுக்கொடுக்க தயங்குகிறது. அதேபோல் காஞ்சிபுரம் தொகுதிக்கு காங்கிரஸ் குறிவைத்துள்ளது. இந்த போட்டிக்குள் திருமாவளவனும் இறங்கி இருப்பதால் காங்கிரசும், கம்யூனிஸ்டும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
- எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார்.
- விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
திண்டுக்கல்:
தொண்டர்கள் உரிமை மீட்பு பயணமாக திண்டுக்கல் நகருக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது,
எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகத்தின் முழு உருவமாவார். தவழ்ந்து சென்று பதவியை பிடித்த அவர் அதற்கு காரணமானவர்களை ஒதுக்கி வைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்தார். அப்போது நான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவரை சந்தித்தோம். அப்போது சசிகலா, தினகரன் உள்பட அனைத்து அணிகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் பாராளுமன்ற தேர்தலில் தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இன்றுவரை அணிகள் இணைய முட்டுக்கட்டையாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. நான் 3 முறை எனது முதலமைச்சர் பதவியை தியாகம் செய்துள்ளேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனக்கு பதவி கொடுத்தவர்களுக்கே துரோகம் இழைத்தார். விரைவில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.






