என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
    • கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.

    இந்நிலையில், தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே வருகிற 3-ந்தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

    கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுக்காவில் உள்ள உடுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுராசு (வயது 45). இடியாப்ப வியாபாரி. இவரது மனைவி ஜெயா (40), அந்தப் பகுதியில் மகளிர் சுய உதவி குழு ஒன்றின் தலைவியாக இருந்தார்.

    இந்த நிலையில் மகளிர் சுய உதவி குழு கடன் உதவி பெற சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கையொப்பமிட ஜெயா அழைக்கப்பட்டார். இதற்காக தனது கணவர் மற்றும் 2 மகள்களான வசந்தி (18), வைதேகி (14) ஆகியோருடன் நேற்று இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டார். காரை ஜெயாவின் கணவர் அழகுராசு ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிட்கோ எதிரில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் பின்னால் ராமேஸ்வரத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற சுற்றுலா பஸ், காரின் மீது அதிவேகமாக மோதி சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இதில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் ஜெயா மற்றும் அவரது மூத்த மகள் வசந்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அழகுராசு, மற்றொரு மகள் வைதேகி மற்றும் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த எடக்கல் போலீசார், அந்த பகுதி பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் தாய், மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மிக முக்கிய பகுதியாகும். இங்கு நவ திருப்பதி தலங்களில் முதல் தலமாக விளங்கும் கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5-வது தலமாக விளங்கும் கைலாசநாதர் கோவில் என மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் அதிக அளவில் உள்ளது.

    தினந்தோறும் ஸ்ரீவை குண்டம் பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஏரல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பல்வேறு தனியார் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள புதுக்குடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

    இதனால் பேருந்தில் வரும் பயணிகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பலமுறை காவல்துறையினர் மற்றும் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி இரவு வந்த தனியார் பஸ் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் மெயின் ரோட்டில் சென்றது. பஸ்சில் இருந்த ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இறங்க வேண்டிய பயணிகளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்ல முயன்றது.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள் தனியார் பஸ்சை சிறை பிடித்து நெல்லை- திருச்செந்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவை குண்டம் போலீசார் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தனியார் பஸ்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் கலைந்து சென்றனர்.

    • ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.
    • பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    "உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் அவற்றைப் பொதுப் பிரிவினருக்கான இடங்களாக மாற்றி மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்" என்று பல்கலைக்கழக மானியக்குழு புதிய வழிகாட்டு விதிகளை உருவாக்கியுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பல்லாயிரக்கணக்கான பணி இடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருந்தார்கள். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 12.12.2022 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதில் அளித்த ஒன்றிய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் "பின்னடைவு காலிப் பணியிடங்களையெல்லாம் உடனடியாக நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும், இதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டு மாதந்தோறும் அது ஆய்வு செய்கிறது என்றும்; 2019-ம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் ( ஆசிரியர் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு பணியிடமும் பொதுப் பிரிவுக்கு மாற்றப்படவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி. பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231 இடங்களும்; 620 இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 இடங்களும்; 1,357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 இடங்களு ம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும்; எஸ்.டி. பிரிவினருக்கு அது போலவே 123 பேராசிரியர், 232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

    ஓ.பி.சி. பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 இடங்களும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 இடங்களும்; 2332 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 இடங்களும் நிரப்பப்படவில்லை என்றும், ஐ.ஐ.டி.-களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11,170 ஆசிரியர் பதவிகளில் 4,502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும், ஐ.ஐ.எம்.களில் எஸ்.சி. பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் மந்திரி தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்துவிட்டு இப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டுவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையிலேயே, இப்போது பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டு விதிகளை வகுத்திருக்கிறது. பார்ப்பனர் அல்லாதார் அனைவரையும் தற்குறிகளாக மாற்ற முயற்சிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்தப் புதிய வழிகாட்டு விதிகளை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இதனை வலியுறுத்தி அனைத்து ஜனநாயக சக்திகளும் களமிறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னம்.
    • தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட.

    சென்னை:

    கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

    பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட."

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
    • 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வண்ட லூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப்பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    பின்னர் கடந்த 24-ந் தேதி முதல் தனியார் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    இதன் தொடர்ச்சியாக நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக செல்லும் 710 பஸ்களின் புறப்பாடுகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    மேலும், 160 பஸ்களின் நடைகள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும். கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

    மாதவரத்தில் இருந்து சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், புதுச்சேரி, போளூர், திருச்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், கடலூர், பண்ருட்டி ஆகிய வட மாவட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து 80 சதவீத பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 சதவீத பஸ்களும் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்வோர் இனி கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை. கிளாம்பாக்கம் புதிய முனையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும்.

    கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து இ.சி.ஆர். வழியாக செல்லும் பஸ்களும் , பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூர் இயக்கப்படும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்படும்.

    மேற்கண்ட பஸ் இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பஸ்கள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மேற்கண்ட தகவலின்படி மக்கள் பயணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
    • பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.

    சென்னை:

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்.
    • சங்கி என்பது இழிவான சொல் இல்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

    பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்தும், தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொகுதி வாரியாக முக்கிய பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன். இதனால் வேட்பாளர்களை அறிவித்து வருகிறேன். முதலமைச்சர் வெளிநாடு செல்வது தனிப்பட்ட பயணம். அதை எதுவும் சொல்ல முடியாது. பா.ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால், இந்தியாவை துண்டு, துண்டாக உடைத்து விடும். இந்தியா கூட்டணியும் தொடர்ந்து நீடிக்காது.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் . 2026-ல் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிடுவார். நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று கூறுவதாக, அவரது மகள் ஐஸ்வர்யா ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். சங்கி என்பது இழிவான சொல் இல்லை.

    உங்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் உண்மை இல்லை என்றால் நீங்கள் கோபப்பட தேவையில்லை. கலைஞர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் விருப்பு, வெறுப்புக்கு பொருத்தி பார்க்க வேண்டாம். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி நன்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக மாறுதல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டியல் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
    • 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளி வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் நேற்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆலோசித்த நேரத்தில், தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கும் 21 விருப்ப தொகுதிகள் பட்டியல் என்று பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி களம் கண்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன் நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், தென்சென்னை, அரக்கோணம் ஆகிய 12 தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. இந்த பட்டியல் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    ஆனால் இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மறுத்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணாவும் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் '2024 பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளி வந்துள்ளது. அதுபோல எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை. கொடுக்கப்படவும் இல்லை' என்று கூறியுள்ளார்.

    • தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.
    • காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.

    மகாத்மா காந்தி நினைவு நாள் அன்று வரும் 30ம் தேதி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு அனைத்து மதத்தினருக்கும் மரியாதை கொடுத்தவர் காந்தி.

    ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை, அதனாலேயே அவர் பலியானார்.

    தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.

    காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் கலந்த நோக்கம்.

    காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.

    அக்டோபர் 2ல் ஊர்வலம் நடத்தி திசைதிருப்ப முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்தது.
    • விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை தொடர்ந்து, திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது " மக்களவை தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் உடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது. 20 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விருப்ப பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். அதனை ஏற்று இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி முதல்வரிடம் தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, "தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் காங்கிரஸ் மேலிட குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது. 40 தொகுதிகளிலும் எவ்வாறு வெற்றி பெறுவது. வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து பேசினோம். திமுக-விடம் நாங்கள் தொகுதி பட்டியல் எதுவும் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.

    ×