search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
    X

    நெல்லையில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

    • இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரெயில்வே பாலம் பகுதியில் இரட்டை பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ரெயில்வே பாலத்தில் ஒரு ரெயில்கள் செல்ல வசதியாக மட்டுமே தண்டவாளம் உள்ளது என்பதால் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக இரட்டை ரெயில்கள் செல்ல வசதியாக பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    புதிதாக பாலம் அமைப்பதற்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேல் தளம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றி விடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று (28-ந்தேதி) முதல் 20 நாட்கள் போக்குவரத்து மாற்றிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை ஒழுகினசேரி பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றிவிடப் பட்டதையடுத்து போக்கு வரத்து போலீசார் ஒழுகினசேரி, புத்தேரி, அப்டா மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வடசேரி பகுதியில் சாலைகள் பேரிகார்டுகளால் மூடப்பட்டுள்ளது. இதுபோல் அப்டா மார்க்கெட் பகுதியில் நெல்லையில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்கள் ஒழுகினசேரி செல்லாதவகையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு சாலை அடைக்கப்பட்டு உள்ளது.


    நெல்லையிலிருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து நான்கு வழிசாலை வழியாக திருப்பி விடப்பட்டது. அப்டா மார்க்கெட் நான்கு வழிச்சாலையில் இருந்து புத்தேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி வழியாக வடசேரிக்கு வந்தது. இதேபோல் வடசேரியில் இருந்து நெல்லைக்கு சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டது. இதனால் வடசேரி அசம்பு ரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்டா மார்க்கெட் பகுதியில் இருந்து வடசேரிக்கு வந்த இருசக்கர வாகனங்கள் ஒழுகினசேரி பாலத்தையொட்டியுள்ள சாலை வழியாக வந்தது.

    களியக்காவிளை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த 4 சக்கர வாகனங்கள் களியங்காட்டில் இருந்து இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட் வழியாக இயக்கப்பட்டது.

    இதே போல் இங்கிருந்து தக்கலை, திருவனந்தபுரம், களியக்காவிளை, குளச்சல் சென்ற வாகனங்களும் இதே பாதையில் இயக்கப்பட்டன. இதனால் அந்த சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என்ட் டூ என்ட் பஸ்கள் வழக்கமாக வரக்கூடிய நேரத்தை விட சிறிய நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.

    இதே போல் மற்ற பஸ்களும் மாற்றுபாதை வழியாக இயக்கப்படுவதால் சிறிய நேரம் தாமதமாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்தது. பஸ்கள் புத்தேரி நான்கு வழிசாலை வழியாக திருப்பிடப்பட்டுள்ள நிலையில் நான்கு வழி சாலை இணைக்கும் பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படாமல் சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்களும் பஸ்களும் செல்லும் போது புழுதி காற்றால் புழுதி பறந்து வருகிறது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. பஸ் போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து ஒழுகினசேரி பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அந்த பகுதியில் மணல் நிரப்பும்பணி, கேபிள் வயர்கள் மாற்றும்பணி, கம்பிகள் கட்டும்பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×